Sunday, March 24, 2013

சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? by Learn To Speak Tamizh (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்)


சிலர் தமிழர்களாகப் பிறந்தும் அவர்கள் தமிழர்கள் என்பதை மறந்து வாழ்ந்து வருவது ஒரு வருத்தத்திற்குரிய செய்தியாகும். குறிப்பாகத் தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழில் பேசுவதை இழிவாக நினைத்து வாழ்கின்றனர். இவ்வாறு நினைப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் சில காரணங்கள் நியாயமானதாகவும், அதே வேளை குருட்டுத் தனமாகவும் உள்ளன. 


என்ன தான் காரணம்?


௧) உலகமெங்கும் ஆங்கிலம் தான் மிகுதியாகப் பேசப்படுகிறது என்ற தவறான எண்ணம். உலகமெங்கும் மிகுதியாகப் பேசப்படும் மொழி மண்டரின் (சீன மொழி) ஆகும். 


௨) தமிழ் மொழி இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்படுகிறது. வெளிநாடுகளுக்குச் சென்றால் தமிழில் பேச இயலாது. தமிழ் தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்படுகிறது என்று 'குண்டு சட்டியில் கழுதை மேய்க்கிறார்கள்'. நினைவில் கொள்க, தமிழ் மொழியானது உலகமெங்கும் பேசப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாது, தமிழ் ஈழம், கடார நாடு (மலேசியா), சிங்கை (சிங்கப்பூர்), மொரிசியசு போன்ற பல நாடுகளில் பேசப்படுகிறது. 


௩) ஏழை நாடுகளில் பேசப்படும் ஏழைகளின் மொழி தான் தமிழ் என்ற குருட்டு தனமான எண்ணம். 'பணக்காரர்களின் மொழி ஆங்கிலம், ஏழைகளின் மொழி தமிழ்'. இதற்கு முதல் காரணம், தமிழ் மிகுதியாகப் பேசப்படும் நாடான இந்தியா வறுமை நாடுகளில் ஒன்றாக இருப்பதே ஆகும். அமெரிக்காவில் பிச்சைக்காரன் ஆங்கிலத்தில் பேசினால், படித்த பிச்சைக்காரன் என்று மனதுக்குள் வருந்தும் நம் தமிழர்களுக்குத் தெரியவில்லை 'மானமுள்ள பிச்சைக்காரன், பிச்சை எடுத்தாலும் தாய் மொழியில் பேசுகிறான்' என்று.


௪) உலகில் நிறைய கல்வி சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் ஆங்கிலத்திலே பயன்படுத்துப்படுவதால். ஆம் உண்மையே, ஆங்கில மொழி உலகில் மிகுதியான நாடுகளில்/இடங்களில் பேசப்படுகிறது. இதற்கு முதல் காரணம் ஆங்கில மொழி மிக இலகுவாக இருப்பதே ஆகும். மேலும் பல மொழிகளின் கலப்பே ஆங்கிலம். ஆங்கிலம் என்ற ஒரு மொழியிலேயே நாம் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம். இருப்பினும், ஆங்கிலம் ஒன்றை வைத்துக் கொண்டு நாம் பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்து விடலாம் என்பது தவறாகும். சீனா/ ஜப்பான்/ கொரியா போன்ற நாடுகளில் ஆங்கில மொழி மிகக் குறைவாகவே பேசப்படுகிறது. மேலும், அமெரிக்கா என்றால் ஆங்கிலம் என்று எண்ணி வாழ்கின்றனர் நம் அப்பாவி தமிழர்கள். உண்மை நிலை என்னவென்றால், அமெரிக்கா நாடுகளில் ஆங்கிலம் தெரியாத நாடுகளும் நிறைய உள்ளன. மேலும், அமெரிக்காவில் பல இடங்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு நாம் சென்று வாழ இயலாது. உலகிலேயே வேறு தாய்மொழிகளைக் கொண்டும், மிகுதியாக ஆங்கிலத்தைப் பேசும் நாடு எனும் 'பெருமை'யைப் பெற்ற நாடு இந்திய நாடே ஆகும்.     
Languages spoken in America.
  

௫) அடுத்து மிக முக்கியமான காரணம். ஆதிக்காலத்தில் இருந்தே புலம்பெயர்ந்து வாழ்வதையே விரும்பும் நம் தமிழர்கள். 'வெளி நாடுகளுக்குச் சென்றால் ஆங்கிலம் கைக்கொடுக்கும்.' பிற நாடுகளுக்குச் சென்று உழைத்து ஊதியம் சேர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, பிற நாடுகளுக்குச் செல்லும் முன் ஆங்கிலம் கற்றுக் கொண்டு செல்கின்றனர். பிறகு தான் அவர்கள் உணர்கின்றனர், ஆங்கிலம் மட்டும் போதாது என்று. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு வேலை தேடி வரும் தமிழ் உறவுகள். மலேசியா என்றால் மலாய் மொழி தான் மிகுதியாகப் பேசப்படுகிறது. மலாய் மொழி, தமிழ், சமஸ்கிருதம், போர்த்துக்கீசியம், அரபு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளின் கலப்பில் தோன்றிய மொழியாகும். எழுத்து வடிவம் இல்லாத மொழி, எனவே இலத்தீன் எழுத்துக்களால் எழுதப்படுகிறது. சிங்கப்பூர் என்றால் சீன மொழி தெரிந்திருத்தல் சிறப்பு. 
கொடுமையிலும் பெருங்கொடுமை என்னவென்றால், ஆங்கிலம் சுத்தமாகப் படிக்கத் தெரியாதவர்களுக்காக மட்டுமே தமிழில் பெயர்ப்பலகை எழுதப்படுகிறதே தவிர யாரும் இங்கு மொழிப் பற்றோடு தமிழில் பெயர்ப்பலகைகள் இடவில்லை. எடுத்துக்காட்டாக, “சிவா டிராவல்ஸ், கவிதா டெக்ஸ்டைல்ஸ்” என்றெல்லாம் பெயர்ப்பலகைகள். இதற்கு பெயர் மொழி பற்றா? இதற்கு பெயர் “மொழிச்சிதைவு”. ஆங்கிலம் படிக்க தெரியாதாம். ஆனால், டிராவல்ஸ், டெக்ஸ்டைல்ஸ் என்று கொடுமையாக ஆங்கிலத்தையும் தமிழையும் ஒரே சொல்லில் போட்டுக் கொன்று புதைத்து எழுதினால் படித்து புரிந்து கொள்வார்களாம். ஆங்கிலம் மோகம் தலைவிரித்து ஆடினால், ஆங்கிலத்தில் எழுதி அதையே படித்துக் கொள்ள வேண்டியது தானே? மொழிப்பற்று என்ற தோல் போர்த்தி ஏன் இந்த நாடகம்? கொஞ்சமாவது உணரப் பாருங்கள். 

ஒன்று கூறிக் கொள்ள விருப்பப்படுகிறோம். ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் தவறில்லை. நம் ஐயன் வள்ளுவன் அன்றே,


'எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவது அறிவு'


என்று மொழிந்தார்.. அதாவது உலக வாழ் மக்கள் எத்தோடு ஒட்டி வாழ்கிறார்களோ, அத்தோடு நாம் இணைந்து வாழ்வது சிறப்பு. எனினும், தமிழ் நம் தாய்மொழி என்பதை மறக்கக் கூடாது. ஆங்கிலத்தையும் செவ்வனே கற்றுக் கொண்டு, ஆங்கிலத்தின் வழி தமிழையும் உலகமெங்கும் பரப்ப வேண்டும். வெறும் தமிழைக் கொண்டு, தமிழை உலகமெல்லாம் பரவ இயலாது. ஆங்கிலத்தின் தோள் மேல் தமிழை ஏற்றி தான் தமிழைக் கரை சேர்க்க இயலும். அதற்காக, ஆங்கிலத்தைத் தமிழிலும், தமிழை ஆங்கிலத்திலும் கலந்து மொழிச்சிதைவு செய்ய வேண்டாம். தமிழில் சிறப்புகளை எல்லாம் ஆங்கில மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யுங்கள். தமிழில் இருக்கும் பல அரிய நூல்களை எல்லாம் மொழிப்பெயர்ப்புச் செய்யுங்கள். எந்தவொரு மதத்தையும் தனித்தே கூறாமல், பொதுமறையாகத் திகழும் திருக்குறளின் உண்மையை ஆங்கிலத்தின் மூலம் உலகிற்குக் கொண்டு செல்லுங்கள். இவ்வளவு பொருள் கொண்ட திருக்குறள் எந்த மொழிக்குச் சொந்தம் என்று அறிந்து, அனைவரும் தமிழ் மீது ஆர்வம் கொள்வார்கள். அதுவே தமிழை உலகமெங்கும் பரப்பும் முதற்படியாகும். வெளிநாடுகளும் அவர்கள் தயாரிக்கும் தொழிநுட்பக் கருவிகளில் தமிழைப் புகுத்த ஆர்வம் செலுத்துவார்கள். ஆனால், நம் தமிழர்கள் என்னவோ ஆங்கிலத்தை தலையில் ஏற்றிக் கொண்டு தமிழை காலில் போட்டு மிதிக்கிறார்கள். 


தமிழர்களிடம் ஒரு சிறந்த பண்பு உள்ளது, அதாவது சாலையில் செல்லும், வழியில் சந்திக்கும் முதுமைப் பெண்களைக் கண்டால் 'அம்மா' என்றழைப்பது. அம்மா என்று ஒரு நற்பண்போடு, மரியாதையாக அழைக்கும் தமிழர்கள். தன்னை ஈன்றவள் தான் உண்மையான அம்மா என்று மறப்பதில்லை. அதுபோல, பன்மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள், அதற்காகத் தமிழை மறந்து விடாதீர்கள். 

நல்ல தமிழில் பெயர்ப்பலகை -தமிழ்நாடு
நல்ல தமிழில் பெயர்ப்பலகை -மலேசியா

(நன்றி: 
Learn To Speak Tamizh (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழரை விட தமிழை கற்றுக் கொள்பவர்கள், விரும்புபவர்கள் மிகவும் நேசிப்பது, பேசுவது என்பதோ உண்மை...

பல தகவல்களுடன் நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...

Jeyachandran said...

வரவேற்கிறேன் அய்யா!!!!!!