ஒயிட்னர் எழுத்தை மட்டுமல்ல...!
இளைஞர்களையும் அழிக்கும்...!
ஒயிட்னர் மோந்து பார்த்தால் மணிக்கணக்கில் போதை தற்கொலையை தூண்டும் பயங்கரம்...!
ஒயிட்னர் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், தற்கொலை செய்து கொள் ளும் நிலைக்கு ஆளாவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தவறான நட்பு, பழக்கம் காரணமாக இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாக¤ன்றனர். ஆல்கஹால், புகையிலை, கஞ்சா, ஹெராயின், கொகைன், காட்டசி, பிரவுன் சுகர், மார்பின் உள்ளிட்ட போதை பொருட்களை தொடர்ந்து தற்போது ஒயிட்னரை போதைக்காக பலர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
பொதுவாக காகிதங்களில் அச்சிடப்பட்ட எழுத்து, மையினால் எழுதியதில் ஏற்பட்ட தவறை திருத்துவதற்காக வெள்ளை நிற திரவமான ஒயிட்னர் பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள், மாணவர்கள் இதை ஸ்டேஷனரி கடைகளில் வாங்கி போதைக்காக உபயோகிக்கிறார்கள். ஒயிட்னரை கைக்குட்டைகளில் தேய்தும், இன்ஹேலர்களில் வைத்து ரகசியமாக பயன்படுத்தி வருகிறார்கள், இதை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஒயிட்னரை நுகர்ந்து பார்ப்பதால் 4 முதல் 10 மணி நேரம் வரை போதை ஏற்படுவதாக கூறுகிறார்கள். 15 மி.லி.கொண்ட ஒயிட்னர் திரவம் ரூ. 25 முதல் 30 வரை கிடைக்கிறது. பெரும்பாலும் நடுத்தர, குடிசை பகுதியில் வசிக்கும் சிறுவர்கள், காகிதம், குப்பை பொறுக்கும் இளைஞர்கள் இது போன்ற உயிர்கொல்லி போதைக்கு அடிமையாகி வருகிறார்கள்.
ஒயிட்னர் சாதாரணமாக ஆல்கஹாலைவிட 300 சதவீதம் அதிக தீங்கு ஏற்படுத்தக்கூடியது. நரம்பு மண்டலம், நுரை யீரல், மூளை, கிட்னிக்கு நேரடிபாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஒயிட்னரில் மீதேல் பென்சைன், ஹைட்ரோகார்பன், ஆல்கஹால் அடங்கியுள்ளதால் உடனடியாக போதையை ஏற்படுத்துகிறது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு இளைஞர்கள் மாணவர்களிடையே இது போன்ற போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த முருகேசன் (13) என்ற 8 ம் வகுப்பு படித்த மாணவன் ஒயிட்னர் போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டான். போதை பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்கள், இளைஞர்கள் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, தவறான செய்கைகள் உள்ளிட்ட சம்பங்களில் ஈடுபட்டு சமூகத்தில் குற்றவாளியாக மாறிவிடுகிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது.
இது போன்ற போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, சரியான வழிகாட்டுதல், மனநல ஆலோசகர்களின் மூலம் அறிவுரை வழங்குவதன் மூலம் எதிர்கால சமுதாயத்தை சிறந்ததாக உருவாக்க முடியும். இதை சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் செய்ய முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.
No comments:
Post a Comment