Wednesday, March 6, 2013

தெரிந்து கொள்வோமா-45 [ஆற்காடு நவாப் கோட்டையின் தெற்கு புறவழி வாயில்]


ஆற்காடு நவாப் கோட்டையின் தெற்கு புறவழி வாயில் கண்டுபிடிப்பு



வேலூர்

ஆற்காடு நகரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான சம்புவராய மன்னரால் கட்டப்பட்ட வாய்க்காலும், ஓரிடத்தில் அதன்மீது நிற்கும் நவாப் கோட்டையின் தெற்கு புறவழி வாயிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நவாப் கோட்டை

ஆரணியை சேர்ந்தவர் ஆசிரியர் ஆர்.விஜயன். இவர் தற்போது கலசப்பாக்கம் வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் மேற்கொண்ட வரலாற்று ஆய்வின் போது ஆற்காட்டில் சம்புவராயன் வாய்க்காலும்–நவாப் கோட்டையின் தெற்கு புறவழி வாயிலை கண்டு பிடித்துள்ளார்.

இது குறித்த விவரம் வருமாறு

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வீரசம்பன் என்ற சம்புவராய மன்னன், ஆற்காடு உள்ளிட்ட பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் (கி.பி.1306–1317) ஆற்காடு பாலாற்றில் தொடங்கி, செய்யாறு தாலுகா வரையிலான பகுதியை வளமாக்கும் வகையில் சுமார் 15 அடி அகலமுள்ள வாய்க்கால் ஒன்றினை வெட்டினார். இதனை செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டி, பாலாற்று நீரை பாசன வசதிக்காக கொண்டு சென்றுள்ளார். அவ்வாறு கட்டப்பட்ட இந்த வாய்க்கால் வீர சம்மன் வாய்க்கால் என அழைக்கப்பட்டது.

அகழி

இன்றைய ஆற்காடு நகரத்தில் பாலாற்றில் தென்கரையில் உள்ள புதிய ரெயில்வே மேம்பாலத்தின் அருகில் தொடங்கும் இந்த வாய்க்கால், ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி எதிரில் இரண்டு பகுதியாக பிரிகிறது. ஒரு பகுதி கிழக்கு நோக்கியும், இன்னொரு பகுதி தெற்கு நோக்கியும் சென்று இறுதியில் முப்பதுவெட்டி அருகே ஒன்றிணைந்து செய்யாறு பகுதியை நோக்கி செல்கிறது.

இந்த வாய்க்கால் ஒரு முக்கோண போல பிரிந்து கூடுகிறது. இதன் நீர் ஆதாரத்தை கருத்தில் கொண்டு தான் இந்த வாய்க்காலின் உட்புறமாக பிற்காலத்தில் ஆற்காடு நவாபுகளால் ஆலம்பனா என்ற கோட்டை, கி.பி. 18–ம் நூற்றாண்டில் (சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு) கட்டப்பட்டது.

ஆற்காட்டில் கஸ்பா பகுதியில் அக்காலத்தில் நவாபுகளால் கட்டப்பட்ட கோட்டைக்கு தனியே அகழி அமைத்திருந்தாலும், வீர சம்பமன் வாய்க்கால் இரண்டாவது அகழியாகவே இருந்துள்ளது. பிற்காலத்தில் நவாபுகளின் கோட்டையானது போர்களால் முற்றிலும் அழிந்து போனது. தற்போது ராஜா குளம், ராணிகுளம், ஒரு மசூதி, கிழக்கு திசையில் கோட்டை வாயிலின் ஒரு பக்க கற்சுவர் ஆகியன மட்டுமே மிச்சமுள்ளது.

பாதுகாக்க வேண்டும்

இந்தநிலையில் இக்கோட்டை பகுதியின் தெற்கில், தோப்புக்கானா பகுதியில் உள்ள மக்கான் என்ற இடத்தின் அருகே சம்புவராயர் கட்டிய வாய்க்காலின் ஒரு பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதோடு இவ்வாய்க்காலின் மீது செல்லும் கோட்டையின் தெற்கு புறவாயில் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் அக்காலத்தில் திருச்சிக்கு செல்லும் சாலையின் தொடக்கமாக இருந்துள்ளது. இதன்வழியாக பல படையெடுப்புகளும் நடைபெற்றுள்ளதை வரலாற்று நூல்களின் மூலம் அறியலாம்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த பகுதியானது தற்போது பலரது ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கிறது. இந்த வாய்க்காலும் சிதைக்கப்பட்டுள்ளது. இவை தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் வைக்கப்பட்டுள்ளது
.(நன்றி-தினத்தந்தி)

No comments: