Monday, March 2, 2020

கடும் சிரமேற்கொண்டு ஆலயங்களுக்கு செல்வது பைத்தியக்காரத்தனமா?

அருமையான விளக்கம் /தெளிவு (எனக்கு) அளித்த மீள் பதிவு 💝💝💝💝



வெள்ளியங்கிரி போய்விட்டு திரும்பியிருந்தேன்.நண்பர் ஒருவர் நான் பகிர்ந்திருந்த புகைப்படத்தையெல்லாம் பார்த்துவிட்டு கேட்டார் ஏன் சிவன் அந்த மலையில் மட்டும்தான்...அதுவும் மலையுச்சியில் தான் இருக்கிறாரா?

அவரைப் பார்க்க அவ்வளவு சிரமப்பட்டு ஏழுமலை தாண்டி போய்தான் பார்க்கனுமா?அப்படி பார்த்தால்தான் அருள் தருவாரா?

பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப்பராபரம் 
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள் 
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே
அப்பிடினு சிவவாக்கியர் சொல்லியிருக்காரே..

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘
...அப்படினு திருமூலர் சொல்லியிருக்காரே...

உனக்குள்ள சிவனை தேடுறத விட்டுட்டு.....
என்னய்யா ....இவ்வளவு படிச்சிருக்க நீயே இப்படி உடம்பை வருத்தி மலையேறி சிவனை பார்க்க போனேன்னு சொல்லுறயே...இப்படி இருந்தா எப்படி?என்றார் வினயமாக....

அவர் கேள்வியும் சரியாகத்தானே தெரிகிறது.....
ஆனால் ஏதோ ஒன்று குறைந்தது....பட்டென்று நான் கேட்டேன்...இவ்வளவு துல்லியமாக இறைவன் உடலினுள்ளே ....உள்ளத்துள்ளே...பாலில் நெய் கலந்தவாறு...கலந்துள்ளான் என்று பேசும் நீங்கள் உங்கள் உடம்பினுள்ளே உறுபொருளை கண்டுவிட்டீரா?என்றேன்.

அவர் திகைத்தார்.இல்லையென்று ஒப்புக்கொண்டார்.நான் தொடர்ந்தேன்...உடலினுள்ளே உறுபொருள் காண்பதற்கெல்லாம் இந்த மலையுச்சியை அடைய தேவைப்படும் சிரத்தையை விட பன்மடங்கு சிரத்தை வேண்டும்.

என்னை வாதத்தில் வெல்ல திருமூலரையும்,சிவவாக்கியரையும் அழைக்க வேண்டியதில்லை.நானே ஒப்புக் கொள்கிறேன்.இந்த மலையேற்றம் பைத்தியக்காரத்தனம் தான்.ஆனால் இந்த பைத்தியக்காரத்தனம் தரும் ஆன்மீக அனுபவம் அலாதியானது.

என்னைப் பொருத்தவரை அறிவாளிகளை விட பைத்தியக்காரர்கள் ஆண்டவனுக்கு சற்று நெருக்கமாக இருக்கிறார்கள் என்றேன்.

இறைவன் எப்போதும் வெளிப்படையாகவே உள்ளான்..அவன் உள்ளுக்குள் சதா காட்சியளித்துக் கொண்டுதான் உள்ளான்.அவனை காண்பதற்கு தடையே நான் தான்.நான் எனும் ஆணவம் தான்.மலையேற்றத்தின் தொடக்கத்தில் என் நான்(ஆணவம்)மலையைவிட பெரிதாக இருக்கும்.மலையேற மலையேற அந்த நான் சுருங்குவதை காணலாம்.

ஒவ்வொரு மலையாக கடக்கும் போதும் அனுமனது வாலைப் போல் இம்மலை நீள்வதாக பிரமை ஏற்படும்.ஒருசமயம் வரும் இதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்கமுடியாதென்று தோன்றும்.அப்போது கீழேயும் போக தெம்பிருக்காது.மேலேயும் போக இயலாது.அப்போது உள்ளம் கிடந்து அலறும் என்னை எப்படியாவது உன்னை தரிசிக்க வை.உன்னை நம்பியே வந்திருக்கிறேனென்று கெஞ்சும்..உன்னை அடைய நீயே சக்தி கொடு என்று இறைஞ்சும்... உள்ளத்து உறுதி உடையும்.கண்ணீர் வழிந்தோடும்.அப்போது இந்த மனமானதுஆற்றேன் எம் ஐயா..அரணே ஓ ..என்று போற்றி புகழும்...கதறி அழும்....

பிறகு உள்ளுக்குள் திடீரென்று ஒரு வைராக்கியம் பிறக்கும்..சக்தியும் பிறக்கும்...எப்படி போய் சேர்வோம்.என்று தெரியாது.இன்னும் நூறடி தூரத்தில் அவன் இருக்குமிடம் தெரியும் போது..காதலி பயணிக்கும் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருந்த பாரமெல்லாம் ஜன்னலோரம் அவள் உதிர்த்துவிட்ட சிறு புன்னகையில் மாயமாவதை போல் நடந்த களைப்பெல்லாம் மாயமாவதை உணர்வோம்.உச்சியை அடைந்த அந்த ஒரு கணம்.....ஆம் அந்த ஒரு கணம்....'எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு தெங்ஙனே என்ற சிவாக்கியம் மெய்யாவதை காணலாம்.

மேலும் மூலிகை வாசம்,சில்லென்ற காற்று,மேகத்தின் ஊடே பயணம்,மேகத்திற்கும் மேலே பயணம்,இரவு காடு தரும் திகில்......,இப்படி உபரி மகிழ்ச்சிகளுக்காகவும் வருடந்தோறும் பயணிக்கிறேன்.
(இது என் பயண அனுபவம் மட்டுமே)

-அவனருளால் அவன்தாள் வணங்கி

Tuesday, January 28, 2020

மனிதம்....

சாதி மத பேதம் கடந்து அனைவரும் சிந்திக்க வேண்டிய பதிவு......

1) அர்ச்சகர் பூஜை செய்யும் போது வழுக்கி விழுந்து மரணம்.

2) துப்புரவு தொழிலாளி பாதாள சாக்கடையில் விஷ வாயு தாக்கி மரணம்.

இந்த இரண்டு செய்தியையும் படிக்கும் போது நம் மூளை எப்படி மதிப்பிடுதுனு ஒரு சுயபரிசோதனை செஞ்சுட்டு இந்த பதிவ படிங்க.

¶¶

நாமக்கல் கோவில் 

ஆஞ்சிநேயர் சிலைக்கு பூஜை செய்யும் போது எட்டடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் என்பவர் உயிர் இழக்கிறார். 

உடனே அவருக்கு முதல்வர் அவர் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி உதவி கொடுக்கிறார்கள். 

ஊடகங்கள் எல்லாம் அதை மிகப்பெரிய செய்தியாக்கி பரப்பரப்பாக்குகின்றன. 

மக்கள் அர்ச்சகருக்கு நிதி கொடுக்கிறார்கள். 

ஒரே நாளில் 15 லட்சம் நிதி குவிந்ததாக விகடன் செய்தி வெளியிடுகிறது. 

இன்றைய செய்தியில் அந்த அனுமர் சிலையில் வருங்கால அர்ச்சகர்கள் பாதுகாப்பாய் பூஜை செய்ய ப்ளாட்பார்மும் அதற்கு பாதுகாப்பு கைப்பிடியும் வைக்கப்பட்டதாக படித்தேன்.

ஆஞ்சிநேயர் - துளசி மாலை - அர்ச்சகர் - மரணம் என்ற உடன் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் பாருங்கள்.

1. அந்த செய்தி மக்கள் மனதில் படிகிறது.

2. அந்த செய்தி மக்களை வருத்தப்பட வைக்கிறது.

3. அந்த செய்தியை ஒட்டி மக்கள் நிதி அனுப்புகிறார்கள்.

4. அரசாங்கம் நிதி கொடுக்கிறது.

5. அரசு இயந்திரம் வேகமாக இயங்கி அதை சரி செய்து கொடுக்கிறது. 

ஒரே ஒரு அர்ச்சகரின் உயிருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கொடுக்கட்டும். அது மனித நேய செயல்தான். உயிரைப் பொறுத்தவரை ஒரு உயிரும் ஒராயிரம் உயிரும் ஒன்றுதான். அவருக்கு செய்தது பற்றி குறை சொல்லவில்லை.

ஆனால் நாட்டில் வருடத்துக்கு சராசரியாக 1300 இந்தியர்கள் மலக்குழியில் இறங்கி பாதாள சாக்கடையில் இறங்கி விஷக்காற்று பட்டு இறந்து போகிறார்கள்.

அவர்களுக்கு உடனே அரசாங்கம் குறைந்தபட்சம் பத்து லட்சமாவது பணம் கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்காது. 

மக்களாகிய நாம் பாதாள சாக்கடை சுத்தம் செய்பவர்களின் மரணத்தை கண்டுகொள்ள மாட்டோம்.

1. அந்த செய்தி மக்கள் மனதில் படியாது

2. அந்த செய்தி மக்களை வருத்தப்பட வைக்காது.

3. அந்த செய்தியை ஒட்டி மக்கள் ஒரு பைசா நிதி அனுப்பமாட்டார்கள்.

4. அரசாங்கம் நிதி கொடுக்காது.

5. அரசு இயந்திரம் வேகமாக இயங்கி வருங்காலத்தில் அது நடக்காதது மாதிரி எதுவும் செய்து கொடுக்காது.

இத்தனைக்கும் பாதாள சாக்கடை அடைப்பு எடுப்பது என்பது சமூகத்துக்கு மிக மிக அவசியமான சேவையாகும். சட்டப்படி அதை செய்ய கூடாது. அதை செய்ய வைக்க கூடாது. ஆனாலும் வேறு வழியில்லை என்று நாம் அனைவரும் அந்த விதியை தளர்த்தி ஊரில் யார் இளிச்சவாய் மனிதனோ அவரை இறக்குகிறோம்.

எவ்வளவு பக்காவாக க்ரைம் செய்கிறோம் பாருங்கள். இதில் ஒன்று கூட நம் மனதை உறுத்தாது.

ஆனால் அர்ச்சகர் ஆஞ்சிநேயருக்கு துளசி மாலை போடும் போது கீழே விழுந்து இறந்தால் முதல்வரில் இருந்து மொத்த சமூகமும் இரங்கும், கொதிக்கும், அவருக்கான நட்ட ஈடை நிதியாக வசூலித்துக் கொடுக்கும்.

ஒரு மனிதனுடைய உயிரும் இன்னொரு மனிதனுடைய உயிரும் ஒன்றில்லை என்றாகிவிடுவது பற்றி நமக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை.

அன்றாட வாழ்க்கையில் நீங்களும் நானும் எவ்வளவு பெரிய குற்றங்களை சுரணையே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம் கவனியுங்கள்.

அந்த சுரணையற்றதன்மையின் பின்னால் இருக்கும் உளவியலை தைரியமாக உற்று கவனியுங்கள்... 

சமயம் கிடைக்கும் போதெல்லாம் கவனியுங்கள்.

இந்திய சாதி சமூக அமைப்பை நன்றாக புரிந்து கொள்ளலாம்....

©Vijay Bhaskarvijay