Saturday, March 9, 2013

உழைப்பு...


”நான் சீதாப்பாட்டி வந்திருக்கேன்… வளையல் போடுறீயளா புள்ளையளா…’’ – இந்தக் குரலுக்கு தஞ்சாவூரை ஒட்டியுள்ள பள்ளி அக்ரஹாரம், திருவையாறு, அரசூர் வட்டாரங்களில் உள்ள எல்லா வீடுகளின் கதவுகளும் திறக்கின்றன. ஒரு கையில் வாளி, இன்னொரு கையில் பை, இடுப்பில் அட்டைப்பெட்டி… இவை அனைத்தையும் சுமந்து கொண்டு வீட்டுக்கு வீடு நின்று குரல் கொடுத்து நகர்கிற சீதாப்பாட்டிக்கு வயது 103 என்றால் நம்பமுடியாது. வார்த்தையில் மட்டுமின்றி பார்வை, நடை அத்தனையிலும் அப்படியொரு தெளிவு!
சீதாப்பாட்டிக்கு சொந்த ஊர் தஞ்சாவூரில் உள்ள மானம்புச்சாவடி. கணவர் ராமசாமி 40 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். மூன்று மகன்கள். 1 மகள். 25க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள். அவர்களில் சிலருக்கு திருமணமாகி பேரன், பேத்தி பார்த்து விட்டார்கள். அவர்கள் யாரையும் அண்டியிருக்கவில்லை சீதாப்பாட்டி. எந்த வீட்டுக்குச் சென்றாலும் அவரிடம் வளையல் வாங்குகிறார்களோ இல்லையோ, தங்கள் வீட்டுப் பெரிய மனுஷியாகப் பாவித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று சாப்பாடோ, டீயோ கொடுக்கிறார்கள். அடுத்த நொடியில் அந்த வீட்டில் கலந்து, உறவாடத் தொடங்கி விடுகிறார் சீதாப்பாட்டி.
Valaiyal patti - mar 9
‘‘வீட்டுக்காரருக்கு நெசவுத்தொழில். வீட்டிலேயே தறிபோட்டு நெய்வோம். பட்டு நெசவுதான். அந்தக் காலத்துல அவர் நெஞ்சு தர்ற சேலைகளை எடுத்துக்கிட்டு வல்லம், ராஜகிரி, பாபநாசம், கோவிந்தகுடி, திருவையாறுன்னு சுத்தி விப்பேன். அப்போத்தொட்டு இந்த ஜனங்கள்லாம் எனக்கு உறவு. போகப்போக நெசவுத்தொழில் சரியாயில்லை. அவருக்கும் உடம்பு சரியில்லாமப் போச்சு. சிண்டு, சிறுசுகளை வச்சுக்கிட்டு சிரமமாப் போச்சு.
இந்த வளையல் பெட்டியையும், ரப்பர் சாமான்களையும் கையில எடுத்தப்போ எனக்கு 22 வயசு. மொத்தக்கடைல சரக்கை எடுத்துக்கிட்டு வந்து ஊரு ஊராப் போயி விப்பேன்.

ஏற்கனவே தெரிஞ்சவங்ககிறதால எல்லாரும் எங்கிட்ட விரும்பி வளையல் போட்டுக்குவாங்க. இங்கே இளைஞ்சு திரியிற குமரிக எல்லாம் ஆத்தா வயித்துல இருக்கிறப்போ வளைகாப்பு போட்டுவிட்டவ நான்தான்!’’ – பற்கள் சிதைந்த இடைவெளி தெரிய பலமாகச் சிரிக்கிறார் சீதாப்பாட்டி.
திருவையாறு சுற்று வட்டாரத்தில் யார் வீட்டில் வளைக்காப்பு நடந்தாலும் தேடிப் பிடித்து சீதாப்பாட்டியை அழைத்து வந்து விடுகிறார்கள். அவர் வந்து முதலில் வளையல் போட்டவுடன்தான் மற்ற உறவுக்காரர்கள் வளையல் மாட்டி விடுவார்களாம். அந்த அளவுக்கு ராசி கை அவருடையது.
‘‘சீதாப்பாட்டி வந்துட்டா தெருவே கொண்டாட்டமாயிடும்.
எல்லாப் பெண்களும் கூடிருவாங்க. வளையல் போட்டுக்கிறதை விட அது பேசுற கிண்டலைக் கேக்குறதுக்குன்னே வருவாங்க. வளையல் மட்டுமில்லாம, சின்னச்சின்ன பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துக்கிட்டு வரும். சாப்பாடு கொடுத்தா வாங்கிச் சாப்பிடும். ஆனா, பணம் கொடுத்தா வாங்காது. வளையலுக்கு எவ்வளவோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மிச்சத்தை அப்படியே திருப்பிக் கொடுத்திடும். ‘வச்சுக்க பாட்டி’ன்னு சொன்னா, உழைக்காத காசு உடம்புல ஒட்டாதுடின்னு உபகதை பேசும். கல்யாணம் தள்ளிப்போற பெண்களுக்கு பாட்டி கையால வளையல் போட்டா உடனே கல்யாணம் கூடிவரும்னு எல்லாரும் நம்புறாங்க.
அதேமாதிரி வளைகாப்பு வைபவத்துல பாட்டி வளையல் போட்டா சுகப்பிரசவம் ஆகும்…’’ என்கிறார் திருவையாறு ஸ்ரீராம்நகரைச் சேர்ந்த புஷ்பராணி.
‘‘மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இருந்தும் ஏன் தனியாக சிரமப்படுகிறீர்கள்?’’- பாட்டியிடம் கேட்டால் இறுக்கமாகப் பேசுகிறார். ‘‘அதது புள்ளை குட்டின்னு ஆயிருச்சு. அவங்கவங்க உழைப்பு, அவங்கவங்க குடும்பத்தைப் பாக்கத்தான் சரியா இருக்கு. பாவம்… இந்த வயசுல அதுகளுக்குச் சுமையா ஏன் நான் போய் உக்காரணும்? அவங்களுக்கு உதவி செய்ய முடியாட்டியும் உபத்திரவம் செய்யாம இருக்கணும். இனிமே எனக்கென்ன இருக்கு? எந்த வீட்டுக்குப் போனாலும், ‘வா பாட்டி’ன்னு உரிமையாக் கூப்பிட்டு, நாலு சோறு போட்டு, தண்ணி கொடுக்க இந்த ஜனங்கள்லாம் இருக்காங்க.
புள்ளைகளை பாக்கணும்னு ஆசை வந்தா, புள்ளைகளுக்கு ஏதாவது தீனி வாங்கிட்டு நேரா கிளம்பிப் போயிருவேன். காலையில போனா ராத்திரிக்கு கிளம்பிருவேன்…’’ என்கிறார் சீதாப்பாட்டி. தஞ்சாவூரில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்கிறார் சீதாப்பாட்டி. அதிகப்பட்சம் 200 ரூபாய். அதை விற்றால் ஐம்பதோ, நூறோ கிடைக்கும். யாரிடமும் கணக்குப் போட்டு கறாராகப் பேச மாட்டார். கொடுப்பதை வாங்கிக்கொள்வார்.
‘‘பாட்டி போற வழியில மனம் பிறழ்ந்தவங்க, முடியாதவங்க நின்னா இருக்கறதை குடுத்துட்டுப் போயிரும். சின்னப்புள்ளைகளுக்கு வளையல் போட்டா காசு வாங்காது. கொடுத்தாலும், ‘புள்ளைகளுக்கு பிஸ்கட்டு வாங்கிக் குடு ஆத்தா’ன்னு சொல்லிடும்…’’ என்று பாட்டி புராணம் பாடுகிறார் ரம்யா.
திருவையாறு பகுதியில் வசிக்கும் ரஹீமா பீவியின் மகள்களுக்கு பாட்டி வளையல் போட்ட பிறகுதான் திருமணம் கூடி வந்ததாம். அதற்குப் பிரதிபலனாக தனக்குச் சொந்தமான ஒரு வீட்டில் பாட்டியை தங்கிக்கொள்ள சொல்லிவிட்டார். தனிக்காட்டு ராணியாக சுதந்திரமாக வாழ்கிறார் சீதாப்பாட்டி. ‘‘அரசு வழங்குகிற முதியோர் உதவித்தொகை வாங்குகிறீர்களா?’’ என்று கேட்டால் பாட்டியின் முகம் கோபத்தில் சிவக்கிறது.
‘‘உழைக்காம வாங்குற காசு உடம்புல ஒட்டுமா..? என் உழைப்பால வர்ற காசு எனக்குப் போதும். உடம்புல வலு இருக்கிற வரைக்கும் என்னால உழைச்சுச் சாப்பிட முடியும். புள்ளைகளுக்கே சுமையா இருக்கக்கூடாதுன்னு நினைச்சுத்தான் இன்னமும் யாவாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அரசாங்கத்துக்கு சுமையா இருக்கச் சொல்றீகளே… வேணாம் தம்பி…’’ என்கிறார் சீதாப்பாட்டி.

(நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்)

No comments: