Saturday, January 26, 2013

சிரிக்கலாம் வாங்க-5

நீங்களோ நானோ ஒரு ஆரஞ்சுப் பழத்தை இன்னொருத்தருக்குக் கொடுக்கணும்ன்னா சிரிச்சுக்கிட்டே கொடுப்போம்.. 

அவரும் சிரிச்சுக்கிட்டே வாங்கிப்பாரு.. 

ஆனா ஒரு வழக்கறிஞர் கொடுத்தா எப்படிக் கொடுப்பார்ன்னு ஒரு சின்னக் கற்பனை...

நாளது ##ம் வருடம் ##ம்
நாள் சென்னை வியாசர்பாடி, கொள்ளைக்காரன் பேட்டை,
அரிவாள் தூக்கித் தெரு,

13ம் எண் விலாசத்தில் வசிக்கும்

தமுக்கடிச்சான் மகன் டமாரம் கொட்டி ஆகிய நான்,

மேற்படி ஊரில் அதே தெருவில் 14 ம் எண் வீட்டில்வாடகை கொடுக்காமல் குடியிருந்து வரும் ஈயடிச்சான் மகன்

கொசு கடிச்சான் அவர்களுக்கு, என்னால் கோயம்பேட்டில் அழு'கிய
மணவாளன் கடையில் கடனுக்கு வாங்கப்பட்டிருக்கும் சிட்ரஸ் ஆரண்டியம் என்ற உயிரியல் பெயரும் கொடை

ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு என்ற சாதாரணப் பெயர்களையும் கொண்ட இப்பழத்தைக் கொடுப்பதோடு மட்டுமல்லாது,

இதன் பேரில் எனக்கிருக்கும் உரிமை, சொந்தம், பாத்தியம்,ஆதாயம் ஆகியவற்றையும் உங்கள் அனைவர் முன்னிலையில், என் சுய புத்தியோடும், முழு மனதோடும், எவ்வித நெருக்குதலுக்கு ஆளாகாமலும்,

மனமுவந்து அளிக்கிறேன்.

இதை இவர், உடனடியாகவோ அல்லது தான் விரும்பும் போதோ, தனக்காகவோ அல்லது பிறர்க்காகவோ பயன்படுத்தலாம்.

இதைக் கடித்துத் தின்னவோ, உறித்துத் தின்னவோ, கொட்டையுடனோ அல்லது அவற்றை அகற்றிவிட்டோ தின்னவோ எவ்வித தடையுமில்லை.

இந்தப் பழத்தை நம்மில் இரண்டாவது நபரானவர், அப்படியே ஒரே தடவையிலோ அன்றிப் பகுதியாகவோ,

சுளையாகவோ, அல்லது

சாறு பிழிந்தோ சுவைக்க உரிமை பெற்றவர் ஆகிறார்.

இதன் தோலைத் தின்னவோ தூக்கி எறியவோ அல்லது

கண்ணில் பீய்ச்சிக்கொண்டு கத்தவோ பாத்தியப் பட்டவராகிறார்.

இதன் விதைகளைப் பயிராக்க இவருக்கு நான் உரிமையளித்திருப்பதால் இதைப் பயிராக்கி அந்த மரத்திலிருந்து கிடைக்கும் பழங்களை

இவரோ இவரது வம்சாவளியினரோ சர்வ சுதந்திரமாக விற்பனை செய்யவோ,

இலவசமாக வழங்கவோ, தோக்கி எறியவோ யாதொரு இடர்ப்பாடும் இல்லை.
அந்த ஆரஞ்சு மரத்தை வெட்டி விறகாகவோ அல்லது

என்னங்க..நில்லுங்க.. ஏன் இப்படி ஓடறீங்க.. சொன்னாக் கேளுங்க நில்லுங்க..!

No comments: