Sunday, January 20, 2013

நிகழ்வு-1

இந்த நிகழ்ச்சி 2011-ஆம் ஆண்டின் நிறைவுக் காலாண்டில் நிகழ்ந்தது.

*******


           நான் பணிப்புரியும் அலுவலகத்தில் வேலையிலிருந்த போது மாலை சுமார் 07.00 மணியளவில், கருவுற்றிருக்கும் என் மனைவியிடமிருந்து, அவருக்கு மிகுந்த வயிற்றுவலி என்று அழைப்பு வந்தது. சூல் கொண்ட பின்பு, வலி என்று எனது மனைவி முதல்முறையாக கூறியதனால் நான் பதறிப்போனேன்.

            அவசர அவசரமாய் அலுவலகத்தினின்று கிளம்பி, பழக்கடைச் சென்று (கருவுற்றதிலிருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பழம் வாங்கித் தருவது வழக்கமாகி இருந்தது.) ரூ.80ற்கு பழம் வாங்கினேன். ரூ. 500/- கொடுத்து விட்டு மீதமும் பெற்று பழத்தையும் பெற்றுக்கொண்டு அவசர அவசரமாய் வீடு வந்து சேர்ந்தேன்.

    இதற்கிடையில் எனக்கு, ஒரே எண்ணிலிருந்து 4 அழைப்புகள் தவறவிட்டதாய் உலாப்பேசியில் பதிவாகியிருந்தது. எனினும் சுமார் 08.30 மணிக்கு அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள நினைத்தப்போது, அந்த எண்ணிலிருந்தே அழைப்பு வந்தது. அழைத்தவர் எனது விவரங்களை சரிவரக்கூறி என்னை வியப்பிலாழ்த்தியப் பின்பு, நான் எனது பர்ஸை அந்தப் பழக்கடையில் வைத்துவிட்டு வந்துவிட்டதாகவும் வந்து பெற்றுக் கொள்ளுமாறும அழைத்தார். மேலும் அவரே, எனது தகவல்கள் மற்றும் எனது உலாப்பேசி எண்ணையும், பர்ஸில் வைத்திருந்த பணி அடையாள அட்டையிலிருந்து பெற்றதாகவும் கூறினார்.

               பின்பு நேரில் சென்று, அதனைப் பெற்றுக் கொண்ட போது, பர்ஸில் உள்ள அனைத்தும் உள்ளனவா என சரிப்பார்த்துக் கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டார். வேறொரு வாடிக்கையாளர் எடுத்துக்கொடுத்ததாகவும் அவரேக் கூறினார். பார்த்ததில் நான் வைத்திருந்த ரூ.1,420/-உம் பத்திரமாயிருந்தது.

பி.கு.:-

1. அவர் அந்தப் பர்ஸினை மறைத்திருந்தால் நான் தொலைத்துவிட்டதாக எண்ணியிருந்திருப்பேன்.
2. எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரியெல்லாம் நடக்குது என்று புலம்புபவர்கள் இருக்க, எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நன்மை நடந்துக்கொண்டேயிருக்கிறது என்றெண்ணி மகிழ்ந்துக்கொண்டேயிருக்கின்றேன்.

3. இன்னும் நிறைய எழுதலாம் என்றிருக்கிறேன்.

4. கடையின் முகவரி: பெயர் நினைவில்லை, காமராஜ் சாலை, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினை ஒட்டினார்ப்போல் அமைந்துள்ளது

No comments: