அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்
விண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது பக்தர்கள் ‘நமச்சிவாய’ என்று கோஷமிட்டனர்.
அகஸ்தீஸ்வரர் கோவில்
வேலூர் மாவட்டம், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது விண்ணம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் தான் 12–வது நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
ஈசான்ய வாயில் படியை கொண்ட இந்த கோவிலில் அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார் என தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கொருமுறை பங்குனி உத்திரம் உத்திராயாண காலத்தில் (ஏப்ரல் மாதம்) பங்குனி 23 முதல் 29–ந் தேதி வரை காலை 6.15 மணி முதல் காலை 6.45 மணி வரை இங்குள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பானதாகும்.
பக்தர்கள் வருகை
இந்த கோவிலை தரிசனம் செய்தால் ஏழு பிறவிகளில் செய்த வினைகள் தீரும் என கூறப்படுவதால் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி காண வருகை தருகின்றனர்.
பொதுவாக தமிழர்கள் கட்டிடக்கலையில் வல்லுநர்கள் என கூறுவார்கள் ஆனால் எந்த வித அறிவியல் தொழில் நுட்பங்களோ, நவீன உபகரணங்களோ இல்லாத ஆதி காலங்களில் வான சாஸ்திரத்தை துல்லியமாக ஆராய்ந்து வருடத்தில் பங்குனிமாதம் 7 நாட்களில் மட்டும் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படியும் விதத்தில் இந்த கோவிலை கட்டியிருப்பது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு கட்டியங்கூறுவது போல் அமைந்துள்ளது.
லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்தது
இந்த கோவிலில் லிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து பின்னர் கோவிலில் உள்ள மூன்று பிரகாரங்களை கடந்து பின்னர் லிங்கத்தின் மீது விழுகிறது.
முதலில் லிங்கத்தின் மேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக லிங்கத்தின் மையப்பகுதியை அடைகிறது. பின்னர் கீழே இறங்கி மறைந்து விடுகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் 15 நிமிடங்களில் நடந்து விடுகிறது. நேற்று காலை 6.30 மணிக்கு சூரிய ஒளி விழுந்து பின்னர் காலை 6.45 மணிக்கு மறைந்து விட்டது. இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்த திரளான பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் நமச்சிவாய என கோஷமிட்டனர்.
கட்டிட பணிகள்
கோவிலில் புனரமைப்பு பணிகள் இப்போது தான் நடைபெற்று வருகிறது. மதிற்சுவர் கட்டும் பணி மற்றும் கருங்கல் தரை அமைக்கும் பணி சுமார் ரூ.5.50 லட்சம் மதிப்பில் செய்திட இந்து சமய அறநிலையத்துறை முன்வந்துள்ளது.
வேலூரில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவிலும், காட்பாடியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 2½ கி.மீ. தொலைவிலும் இந்த கோவில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment