எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் 'அகில மொழி'யின் அற்புதங்கள்.
உலக அறிஞர்கள் பார்வையில் "பன்மொழி அறிஞர்" சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள், "தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பத்தூண்டுகிறது" -
சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன்.
"நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்"
- நூலகர், ஹிப்ரு பல்கலைக்கழகம், ஜெருசேலம், இஸ்ரேல்.
"பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா? தமிழர்கள்தான் உலக முழுவதும் பரவி இருந்தார்களா? வியப்பிறகுரிய செய்திகளைச் சொல்கிறீர்கள்"
- கெய்ரோ அருங்காட்சியகம், கெய்ரோ, எகிப்து.
"தமிழ் மொழியின் நீள அகலம் பற்றி உலகம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். உண்மையை வெளிக்கொணர நீங்கள் ஆற்றும் பணி அருமையானது. உங்களோடு இணைந்து பணியாற்ற நான் பெருமிதம் கொள்கிறேன்"
- டாக்டர் ஹக்பாக்ஸ், மெக்சிக்கன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.
"இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன் அவற்றின் வேர்ச்சொற்களை எல்லாம் கடகடவென கூறுவதை வியக்கிறேன். நான் சீனமொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீனமொழி தமிழ் மொழி உறவு கூறியதைக் கேட்டு மலைத்து நிற்கிறேன்"
- டாக்டர் அருணபாரதி, பெனாரஸ் பல்கலைக்கழகம், காசி.
இவர்களைப் போல இன்னும் பல்வேறு நாட்டு அறிஞர்கள் நம் தமிழரை அதுவும் ஒரு தமிழ்மொழி அறிஞரை புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த" மதுரையில் அகிலமொழி பயிலரங்கத்திற்கு பிரதிமாதம் வந்திருந்து தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், அதன் இலக்கணங்களையும், ஆதாரங்களுடன் தமிழ்ச் சொற்கள் அதிக மாற்றமின்றி எப்படி பிறமொழி சொற்களாகின்றன என்றும்... தமிழே உலகமொழிகளின் தாய்மொழி
என்பதற்கும் பல்வேறு உதாரணங்களை அந்த 72 வயது இளைஞர் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் பொங்கு தமிழாக கீழ்க்கண்டவாறு மேற்கொள்காட்டி எடுத்துரைக்கிறார்.
களி (மண்) - Clay. பிறப்பு - Birth. பொறு - Bear. நாடுதல் - நாடு (ஜெர்மன்). கண் - கண் (சீனா). உப்பர் - ஊப்பர் (இந்தி).
தமிழ் சொற்களில் நடு எழுத்து மறைந்து உருவான சொற்கள்
"நாமம் - நாம் (இந்தி). தாழ்வு - தாவு (தெலுங்கு).
தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள்
இம் - Immoral. இல் - Illegal. நிர் - Nil. அன் - Unused. அவ/அப - Abuse.
தமிழ் சொற்களின் முன் எழுத்து விலகி புதிய சொற்கள் உருவாகின்றன.
பதின் - Ten. உருண்டை - Round. உருளை - Roll. அம்மா - மா (இந்தி). நிறங்கள் - றங் (இந்தி). உராய் - Rub. அரிசி - Rice
காரணப் பெயராகிய புதிய சொற்கள்
தேங்குதல் - Tank. ஈனுதல் - Earn என்றும்
திசை எட்டும் என்ற தலைப்பின் வாயிலாக தமிழ்மொழி பயன்பாடு தமிழரின் நாகரீகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.
* சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பாக இஸ்ரேல்-லில் கொண்டாடப்படுகிறது.
* உணவில் வாசனைப் பொருட்களை அரேபியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
* பச்சை அம்மன் வழிபாடு என்ற பெயரில் தென் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* பல்லாங்குழி விளையாட்டு இன்றும் ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* தமிழகத்தில் நாம் கொண்டாடும் பொங்கல் தினத்தில் அதே நேரம் "ஹொங்கரோ ஹொங்கர்" என ஜப்பானி-ல் சூரியனை வணங்கி குரலிட்டு கொண்டாடுகிறார்கள்.
* கண்-கண் காண் - காண் காண மகேந்திர + வர்ம + பல்லவர் போல மா+சே+துங் சீனாவில் பேசப்படுகிறது.
* சேவல் சண்டை, திருமண சீர் வரிசை, மஞ்சள் துணி பயன்பாடு தாய்லாந்து-ல் இன்னும் இருக்கிறது.
ஆற்று மீன் என்பதை நறு நீரு மீன் என்று ஆஸ்திரேலியா பழங்குடியின மொழியில் பேசப்படுகிறது.
* மேலும் தமிழ் சொற்களின் முன் S என்ற எழுத்து சேர்ந்து ஆங்கில சொற்கள் எப்படி உருவாகின்றன.
S பேச்சு - Speech. S மெது - Smooth. S உடன் - Sudden. S நாகம் - Snake
* தமிழ் சொற்களின் முன் எழுத்துக்கள் மாறி உருவான சொற்கள்
எட்டு - ஆட் (இந்தி) பத்து - ஹத்து (கன்னடம்) கடை - கெடா (மலாய்) பூங்கொத்து - கொத் (ஜெர்மன்)
* இலக்கிய வழக்காக மலையைக் கல் என்பர். வடபெருங்கல் என்பது இமயமலையைக் குறிக்கிறது.
கல்லூர், குண்டுக்கல், கர்நாடகம்
(கல்அறை) கல்லறா - கேரளம்
கல்லூர் - ஆந்திரம்
கல்முனை - இலங்கை
கல்லினா பாட் - ரஷ்யா
* மலை என்ற தண்டமிழ்ச் சொல்லை மலைய, மலய, மாலயா என்று வட இந்திய மொழிகள் திரித்துப் பயன்படுத்துகின்றன. இமயமலை - ஹிமாலயா என்று மலையா (ஒருநாடு) மலேயா என்றும்
* மலை / மலா ஆகி லாம என மாறுகிறது. பிறழ் விதிப்படி ய ர ல ள ழ போன்ற (LIQUID) இடையினம் தம்முள் மாறிக் கொள்வதால் லகரம் இங்கு யகரமாகிறது.
* மன் என்பதிலிருந்துதான் மனு, மனிதன், மனுசன் போன்று பல சொற்கள் உண்டாகின. பல மக்கட் பெயர்களும் கிடைத்தன.
ஹிப்ரு மொழி
மனுஏல் - மனுவேல்
தமிழ்ப் பெயர்
கருமன் / கருத்திருமன்
தருமன் / திருமன்
வட இந்தியப் பெயர்
பீமன் இராமன்
இவ்வாறு "உலக ஊர்ப் பெயர்களாக ஐந்து லட்சம் பெயர்களை ஆராய்ந்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.
உலக மக்கட் பெயர்களாக லட்சம் பெயர்களை எடுத்து ஆராய்ந்ந்து பார்த்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.
இதைப் போலவே இன்னும் தமிழ்மொழியில் அம்மா அப்பா என்ற நாவில் தவழும் சொல் உலகில் 200 மொழிகளுக்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழ் தன் சிந்தனையைச் சிறகுகளாக இன்னும் விரித்துக் கொள்வதுபோல எடுத்துக் கூறுகிறார்.
"கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன்" ஆகும். அப்போது அங்கு இலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்து குடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது.
கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோ இந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் இலத்தீன் கிரீட் தொடர் பற்றாக இருந்தது. எனினும் திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது.
"ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது?
(1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேறினர். எனவேதான், திருவிடமொழி உலகமெங்கும் உள்ளது. அப்போதைய திருவிடமொழி பழந்தமிழே!
(2) மங்கோலியர், சீனர், மத்திய கிழக்கு மக்களான ஹிப்ருக்கள், அரபிய மற்றும் சிலாவியர், ரோமானியர், ஜெர்மானியர், மலேசிய பாலினேசியர், இந்தோ ஆரியர், தென் அமெரிக்கர், ஆப்பிரிக்க மக்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் - இங்ஙனம் உலக மக்கள் பிரிவினர் யாவருமே திருவிடரே! கடல் கோளால் வந்தோரும் நில அதிர்வாலும் வந்தோருமாக உலகின் பல பாகங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முறைகளில் குடியேறியவர் திருவிடரே!
(3) திருவிடர்கள் சிந்துவெளி நாகரீகம் அமைத்தனர். அதன் மேலும் மேற்கே குடியேறத் தொடங்கி பாபிலோனியா மொசபப்டடோமியா வழியே ஈரான் ஈராக் ஆகிய பல பகுதிகளிலும் குடியேறினர். ஆக திருவிடர் தென்னிந்தியாவில் இருந்தே வடஇந்தியா போய் அங்கிருந்து உலக நாடுகள் யாவற்றிற்கும் சென்றிருக்க முடியும். எனவே திருவிட மொழியாம் தமிழ் உலகெங்கும் அடித்தளமாக அமைப்பு முறையாக இலக்கு கருவியாக இயக்கும் ஆற்றலாக விளங்குகின்றது என்று உலகளாவிய தமிழ் என்று, தான் எழுதியிருக்கும் நூலின் மூலமாகவும் விளக்கத்தை தந்திருக்கும் தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் சாட்சிக் களத்திற்காக விதைத்திருப்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.
தமிழ் எழுத்துக்கள் எப்படி எப்படி மாறும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. அதற்கு உட்பட்டே மாறுகிறது.
ஆகவே என்னோடு இந்த ஆய்வுகள் நின்றுவிடாமல் தொடர வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் இந்தத் தமிழ்மொழியை இளைஞர்கள் குழு மூலம் மக்களை ஒன்று திரட்டி பெரும் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று தன் ஆசையை பழுத்த ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியதைக் கண்டு தமிழே நெகிழ்ந்ததைப் போல அவ்வப்போது தெரிவித்து வருகிறார்". இப்பேற்பட்டவர் ஒரு தமிழாசிரியிராக இருப்பாரா? பேராசிரியராக இருக்கலாம்? இல்லை தமிழ்த்துறை தலைவராகத்தான் இருக்க வேண்டும்? இத்தனை தமிழ் சார்ந்த் தகவல்களை சொன்னவர் ஏன் ஒரு பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கக்கூடாது? என்று நினைப்போர்க்கு...
இவர் அப்படி எந்த பதவியிலும் இல்லை
ஆனால் அத்தனை தகுதிகளையும் கொண்ட இன்னொரு தமிழ்தாத்தா என்று சொல்லும் அளவிற்கு தமிழ் மொழிப்புலமை சாத்தூர் சேகரன் அய்யாவிடம் புதைந்து கிடக்கிறது.
சரி இவர் என்ன படித்திருக்கக் கூடும்? எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (ஆங்), எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (சமூகம்), எம்.ஏ. (அரசியல்), எம்.ஏ. (வரலாறு), எம்.பில். (வரலாறு), எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (மொழி) இது முழுக்க முழுக்க அவர் படித்து முடித்துவிட்ட பட்டங்கள். இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்...
"இது மட்டுமில்லாமல் உலகமெங்கும் பயணம் செய்து அந்தந்த நாடுகளில் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களிடம் பேசி, பழகி, ஆய்வு செய்திருப்பதால் உலக மொழிகள் 120 தெரியும். மேலும் இலக்கணப் பூர்வமாகவும், விதிமுறைப்படியும் 200 மொழிகளில் ஆய்வு செய்து வரும் சாத்தூர் சேகரன் அய்யா 200 மொழி நூல்களும் எழுதியிருக்கிறார். பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்".
"உலக அரங்கங்களிலும். பல்கலைக்கழகங்களிலும், மொழி ஆய்வுக் கூடங்களிலும், புதிய மொழி கொள்கைகளை முழங்குகின்ற தமிழ் மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் இதுவரை 10,000 பாடல்கள், 400 நவீனங்கள், 40 காப்பியங்கள், 200 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, 50 நாடகங்களையும் இவரே எழுதி இயக்கியும் இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் இவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. இன்னும் இவரது எழுத்துக்களில் 40 நூல்கள் வெளிவர இருக்கிறது.
தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் மதுரைக்கு வரும்போதெல்லாம் இவரது குரல் அகிலமொழி பயலிரங்கத்தில் ஒலிக்கிறது.
தமிழ்மொழியைப் பற்றி, தமிழ் மொழியின் ஆதி, அந்தம், ஆச்சர்யங்களையும் சொல்லும்போது பிரமிடுகளை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ் மொழிக்காகவே தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன், தான் அடுத்தடுத்து தமிழ்ச்சங்கங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என்று அழைத்தவர்களின் இடம் நோக்கி... தன் கையோடு கொண்டு செல்லும் தமிழ் மொழியைப் போல கணத்த சூட்கேஸ்-உடன் தமிழோடு தானும் சேர்ந்தே பயணிக்கிறார்.
தமிழ்தான் என் மூச்சு, தமிழர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று உரக்க பேசுகின்ற எத்தனையோ தலைவர்களுக்குக்கிடையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, குறித்த முழு பார்வையை வளரும் இளம் தலைமுறையினர்க்கு வாரி வழங்குவதற்காக ஒரு சப்தமில்லா சாம்ராஜயத்தையே நடத்தி வருகிறார்.
"தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அவரோடு தமிழ்மொழியும் அச்சாரமிட்டுக் கொண்டிருக்கிறது".
அதே நேரத்தில் சாத்தூர் சேகரன் அய்யாவின் 40 வருட உழைப்பைச் சிந்தாமல் சிதறாமல் மாணவ - மாணவியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், அவர்களைச் சாத்தூர் சேகரனின் தமிழ் வாரிசுகளாகவும் உருவாக்கி, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பேசக்கூடிய ஊக்கத்தையும் தந்து உலக நாடுகளில் போய்ப் பேசுகின்ற தனித்தன்மையை எம்மொழியும் எம் மொழி என்ற கொள்கை முழக்கத்துடன் அகிலமொழி எனும் அமைப்பை தமிழ்நாட்டில் மாநகர் மதுரையில் துவங்கி அதற்கு வேராகவும் நீராகவும் விளங்குகின்ற கோ மற்றும் அவருக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ் நெஞ்சங்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.
உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அய்யாவையும் 'அகிலமொழி' யின் மாணவர்களையும் உற்று நோக்க வேண்டும். தமிழைச் செழிக்கச் செய்ய நாமனைவரும் அரும்பாடு படவேண்டும்.
தொடர்பு கொள்ள :
சாத்தூர் சேகரன்
94429 56769, 92943 60806
3 A, R C South Street
Sathur - 626203
Virudhu Nagar Dt
பின்னூட்டம்: எனது பணிவான மற்றும் மிக மிக உயரிய, உன்னத வணக்கங்கள் உங்களுக்கு உரித்தாக்குகிறேன் அய்யா...
தமிழன் என்பதில் இருக்கும் பெருமிதத்தினை அதிகரித்துவிட்டீர். வாழ்க நின் சேவை...