Wednesday, February 27, 2013

தெரிந்து கொள்வோமா-30 (தமிழ் எண்களே...)

இப்போது உலகமெல்லாம் வழக்கில் இருக்கும் எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 தமிழ் எண்களே என்பதைத் தமிழ் மக்களும், சில தமிழ் அமைப்புகளும் அறியாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இதையறிந்த தமிழறிஞர்கள் மக்களிடம் பரப்பவில்லை; அதனால்தான் இதனை ஆங்கில எண்கள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த அறியாமையைப் போக்காதது அறிந்தவர்களின் குற்றம்தானே!

மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம் என்று இந்திய வாகனச் சட்டம் 1989 கூறுகிறது. அதுபோலவே 1998-ம் ஆண்டு தமிழ்நாட்டிலும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. வாகன உரிமையாளர்கள் விரும்பினால் ஊர்திகளில் தமிழிலும் பதிவு எண்களை எழுதிப் பொருத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக அரசு தமது ஆணையில் எண்களைப் பொறுத்தவரை உலக எண்களையே (அரபிக் நம்பர்ஸ்) பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இதன் மூலம் இந்த உலக எண்கள் அராபிய எண்கள் என்றே அரசும் கருதுகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

"எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்' என்றும் "எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிர்க்கு' என்றும் தமிழிலக்கியம் கூறுகிறது. ""உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களாகும். இதில் ஒரு கண்ணாகிய தமிழ் எழுத்தை எடுத்துக் கொண்டோம். ஆனால், மற்றொரு கண்ணாகிய தமிழ் எண்களை விட்டுவிட்டோம். அவற்றைப் பயன்படுத்த அரசு ஆவன செய்யுமா...? '' என்று சட்டப்பேரவையிலேயே கேட்கப்பட்டது; கேட்டவர் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் குமரி அனந்தன். "தமிழ் எண்கள் மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வரப்படுமா?' என்று அப்போது தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனிடம் கேட்கப்பட்டது.

"இதுகுறித்து முதல்வர், கல்வியமைச்சர் ஆகியோருடன் பேசினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மைல் கற்களில் தமிழ் இருந்துள்ளது. படிப்படியாகக் கவனிக்கலாம் என்று இருக்கிறோம்...'' என்று அவர் ஒரு நேர்முகத்தில் விடை கூறியுள்ளார் (ராணி: 4-8-1996).

மறுக்க வேண்டிய சில தமிழ் அமைப்புகளும், "இப்போது வழக்கில் இருக்கும் எண்கள் தமிழ் எண்கள் இல்லை' என்ற எண்ணத்தில், "தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும்' என்றே தீர்மானங்கள் இயற்றின. இதனை மறுக்காமல் தமிழறிஞர்கள் ஏன் அமைதி காத்தனர் என்றே தெரியவில்லை.

இந்த எண்களைப் பற்றிய குழப்பம் இப்போதுதான் இப்படி எழுந்துள்ளது என்று எண்ண வேண்டாம். 1960-ம் ஆண்டு "மத்திய கல்வி ஆலோசனைக் குழு'க் கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.

இந்தியாவில் கல்வி சம்பந்தமாக உலகத்தில் வழங்கி வரும் எண்களையே பயன்படுத்துவது என்று மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று "கல்விக்கு அராபிய எண்களே - ஆலோசனைக் குழு முடிவு' என்ற தலைப்பில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இதுபற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ""அவை அரபிய எண்கள் அல்ல தமிழ் எண்களே'' என்று தம் இதழாகிய "குயில்' ஏட்டில் 24-1-1960 அன்று எழுதினார். "அன்றைய தமிழகக் கல்வியமைச்சர் சி. சுப்பிரமணியம் அந்தக் குழுவில் இந்த எண்கள் தமிழ் எண்களே என ஏன் சொல்லவில்லை?' என கண்டனம் தெரிவித்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரிவடிவம் எப்படியிருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித்துறையின் சுவடியில் கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர்; அவர்களிடமிருந்து மேல்நாட்டினர் கற்றுக்கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்; அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம்; ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்துக்கு உள்ளாயிற்று...!'' என்று பாரதிதாசன் எழுதினார்.

டாக்டர் மு. வரதராசனார் தம் "மொழி வரலாறு' என்னும் நூலில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற எண்கள் தமிழ் எண்களே என்பதை கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார். அந்தக் கல்வெட்டுச் சான்று (படம்). அவர் எழுதுகிறார்: "1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால், அராபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை.

தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் இந்த எண்கள் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது முன்பக்கத்தில் உள்ள பழந்தமிழ் எண் வடிவங்களை நோக்கின் உணரப்படும்.

இவற்றை நோக்கி எண்ண வல்லார்க்கு 1, 2, 3 முதலிய எண்களின் எழுத்து வடிவம் தமிழகம் உலகத்துக்கு அளித்த கலையே என்னும் உண்மை புலப்படும்...''- இவ்வாறு எழுதிய டாக்டர் மு.வ., கல்வெட்டு ஆதாரத்தையும் படமாக்கி வெளியிட்டுள்ளார் (ஆதாரம்: "மொழி வரலாறு' - பக்கம் 358).

இந்த எண்களைத் "தமிழ் எண்கள்' என்று உலகம் ஏற்றுக் கொண்டாலும், உள்ளூர் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஏதேனும் நல்லவை தென்பட்டால் அவை பிறமொழியிலிருந்து வந்ததென்று கூறுவதும், ஆங்கிலத்திலிருந்து கிடைத்ததென்று கருதுவதும் நம்முடைய மரபாகிப் போனது. இந்தத் தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும்.

இவை தமிழ் என அறிந்த பிறகும், இதன் மாற்று வடிவங்களையே தமிழ் எனக்கூறி புழக்கத்துக்குக் கொண்டுவர முயல்வது சரியன்று; உலகம் ஏற்றுக் கொண்டதை நாமும் உவப்புடன் ஏற்போம்.

செம்மொழித் தமிழின் சிறப்புகளுள் தலையாய மணிமகுடம் இதுவென ஓங்கி ஒலிப்போம். தன் பிள்ளையை உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை எந்தத் தாயும் கண்ணீர் மல்க வரவேற்கவே செய்வாள்.

தமிழகம் உலகத்துக்கு அளித்திருக்கும் மாபெரும் கொடை இது. இதற்கு உலகமே தமிழ்மொழிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்மக்கள் பெருமைப்பட வேண்டும்; பெருமைப்படுவதற்கு அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருக்க வேண்டுமே!

இனிமேலும் ஐயம் வேண்டாம்; உலக எண்கள் தமிழ் எண்களே!

No comments: