ஒரு காலத்தில் 56 லட்சம் ரூபாய் கடனாளியாக இருந்த நெல்லை மாவட்டம் புளியங்குடி விவசாயி அந்தோணிச்சாமி, இன்று லட்சாதிபதி..
''1957-ம் வருஷம்தான் நான் விவசாயத்துல இறங்கினேன். அப்ப ரசாயன உரமெல்லாம் அதிகம் கிடையாது. 5 கிலோ அமோனியம் சல்பேட் வாங்கச்சொல்லி எங்க ஊரு கிராம அதிகாரி விளம்பரப்படுத்தினாங்க.. நானும் ரசாயன உரத்தை வாங்கிட்டு வந்து வயல்ல போட்டேன். பயிர் சும்மா 'குபீர்'னு வளர்ந்துச்சி. கரும்பச்சை நிறத்துல பயிரைப் பார்க்கவே பரவசமா இருந்துது. அதுக்குப்பிறகு ரசாயன உரத்து மேல பெரிய மோகம் வந்துபோச்சி.
இவ்வளவு உரம் போட்டதுக்கு கிடைச்ச மகசூல், கொஞ்சம் கூட கட்டுப்படியான விஷயமா இல்லை. இதுக்குக் காரணம் மண்ணோட தன்மை மாறிப்போனதுதான். எவ்வளவு ரசாயன உரத்தைக் கொட்டியும் விளைச்சல் பெருகல. மண்ணுல ‘சிங்’ நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும்'னு அதிகாரிங்க சொன்னாங்க. சரினு 'சிங்'கும் போட்டேன். அப்புறம், 'அயன் (இரும்புச் சத்து) போடுங்க'னு சொன்னாங்க. அதையும் போட்டேன். போரான், மாங்கனீசுனு வரிசையா விவசாய அதிகாரிங்க சொன்னதையெல்லாம் போட்டேன். போகப்போக இடுபொருள் செலவு அதிகரிச்சி, கடனும் கூடிக்கிட்டே போச்சி. ஆனா, விளைச்சல் மட்டும் கூடவே இல்ல.
87-ம் வருஷத்துல விவசாயமே செய்யமுடியாத அளவுக்கு நிலைமை முத்திப்போச்சி. ஏக்கருக்கு ஒன்றரை டன் கூட நெல் விளைச்சல் கிடைக்கல. இதுக்கு என்னதான் வழி.. கடன்ல இருந்து எப்படி தப்பிக்கிறதுனு ரொம்ப யோசிச்சிக்கிட்டே இருந்தேன். ஒருத்தர் கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு கூட்டிக்கிட்டுப் போனார். 'விவசாயம் நஷ்டமாகிப் போச்சி. கொட்டில் முறையில் ஆடு வளர்க்கலாமா?'னு அங்க கேட்டோம். 'நாங்களே அதுல ஜெயிக்க முடியல. ஆடு வளர்க்கறதையே நிறுத்திட்டோம்'னு சொல்லிட்டாங்க.
எப்படியாவது கடனை அடைக்கணுமேனு வெறியோட அலைஞ்சி வெளிநாட்டு ஆடுகளை வாங்கிட்டு வந்து வளர்த்தேன். அதோட கழிவுல இருந்து 11% நைட்ரஜன் சத்து கிடைச்சுது. அதை வயல்ல போட்டேன். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு என்னோட மண்ணுல ஒரு பூரிப்பு உண்டாச்சி. 'அடடா இயற்கை உரம் என்ன அற்புதமா வேலை செய்யுது?'னு எனக்குள்ள ஒரு சந்தோஷம். அதேசமயம், அந்த ஆடுங்க அத்தனையும் துடிதுடிச்சி இறந்து போச்சி. நான் ஒரு பேராசை புடிச்சவன். குளிர் பிரதேசத்துல வளர்ற ஆட்டைக் கொண்டு வந்து, வெக்கைப் பிடிச்ச இந்த மண்ணுல வளர்க்க நினைச்சது என்னோட தப்புதானே..
மனசும், உடம்பும் சோர்ந்து போயி உடம்பு ரொம்ப பலவீனமாயிடுச்சி. இந்தக் கவலையிலயே கழுத்து எலும்பு தேஞ்சி நிமிந்து கூட பார்க்க முடியாத நிலை. 'என்னடா நம்ம பொழப்பு இப்படி போயிடுச்சே'னு யோசனை செஞ்சப்ப, ஆரோக்கியமான உணவு இருந்தா எதையும் சாதிக்கலாம்னு தோணுச்சி. அதுக்கு இயற்கை விவசாயம்தான் சரிப்பட்டு வரும்னு 90-ம் வருஷம் ஒரு ஏக்கர்ல ரசாயன உரம், பூச்சி மருந்து எதையும் பயன்படுத்தாம, இயற்கை உரத்தை மட்டுமே போட்டு 15 மூட்டை நெல்லை விளைவிச்சேன். அதைச் சாப்பிட, சாப்பிட உடம்பு கொஞ்சம் கொஞ்சமா தேறிச்சி. ஆனா, நான் வாங்கின கடன்.. வட்டி குட்டி போட்டு 56 லட்ச ரூபாய் கடன்காரனா ஆயிட்டேன்..
அதைக் கட்ட முடியாம, கோர்ட்ல கைகட்டி நின்னேன். 'நீதிபதி அய்யா, என்கிட்ட பணம் கிடையாது. இப்பக்கூட கடன் வாங்கிகிட்டுதான் மெட்ராஸ் வந்து சேர்ந்திருக்கேன். எப்படியாவது தயவு பண்ணுங்க'னு கையெடுத்துக் கதறி அழுதேன்.. அந்த நீதிபதி நல்ல மனுஷன். 'இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருகிறேன்'னு சொன்னார். ஊர் திரும்பினதும் ராப்பகலா பாடுபட்டோம். மண்ணை மாத்தினா எல்லாமே மாறும்னு நிலத்துல மாட்டுச் சாணத்தையும், கோமியத்தையும் போட ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா நிலம் வளமாச்சி.
கடனை அடைக்க எனக்காகவே ஒரு பயிரு காட்டுல காத்துகிட்டு இருந்துச்சி. அதுதான் எலுமிச்சை. எங்க பகுதியில எலுமிச்சை ரொம்ப பிரபலம். காட்டுல உள்ள ஒரு வகை எலுமிச்சை செடியை எடுத்துகிட்டு வந்து, நாட்டுச் செடியோட ஒட்டுக்கட்டினேன். அமோக விளைச்சல். கொஞ்சம் கொஞ்சமா கடனையெல்லாம் அடைச்சிட்டேன். வறட்சியைத் தாங்கி வளர்ந்த இந்த ரகத்துக்காக அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூட விருது கொடுத்து பாராட்டினர்..
நடவு செஞ்சப்ப உழவு ஓட்டினதோட சரி. களை எடுக்கவும் இல்ல. மருந்து அடிக்கவும் இல்ல. உரம் போட வேண்டிய வேலையும் இல்லாம போயிடுச்சி. வருஷம் முழுக்க எலுமிச்சை காய்ச்சி தொங்குது. ஒவ்வொரு மரத்துலயும் மூவாயிரம் காய் காய்ச்சிக்கிட்டிருக்கு. ஏக்கருக்கு நூறு மரம் நடவு செய்திருக்கேன். தமிழ்நாட்டோட சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு 30 டன்தான். நான் ஏக்கருக்கு 60 டன் எடுக்கிறேன்..
2003-ம் வருஷம் மண் பரிசோதனை செஞ்சி பார்த்ததுல, 1957-ம் வருஷத்துக்கு முன்ன இருந்த மாதிரி நிலம் வளமிக்கதா மாறிடுச்சி. நான் இயற்கை விவசாயத்துக்கு திரும்பி 14 வருஷமாகுது. அன்னிலிருந்து வைத்திய செலவே இல்லாம போச்சி.. என் மனைவிக்கு இருந்த சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டுக்குள்ள வந்துருச்சி.
ஒரு காலத்துல 56 லட்சம் ரூபாய் கடன்காரனா இருந்த நான் இன்னிக்கு லட்சாதிபதியா இருக்கேன். ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர் மட்டுமில்ல, நூத்துக்கணக்கான ஏக்கர்லயும் இயற்கை விவசாயத்தை செய்யமுடியும். அதுக்கு நான்தான் உதாரணம். இயற்கை விவசாயம் செஞ்சா, இப்ப இருக்கற மாதிரியான மூணு இந்தியாவுக்கு சோறு போடமுடியும்''
தொடர்பு கொள்ள: 94435 82076
No comments:
Post a Comment