Thursday, September 17, 2015

"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"


திருஷ்யம் - வெளி வரும் போதே கேட்க வேண்டும் என நினைத்தேன். கேட்கவில்லை. ஆனால் பாபநாசமும் வந்து விட்டதால் இன்னும் நாசமாவதற்கு முன் கேட்டே ஆக வேண்டும்.

என் மகளின் "கற்பு"க்கு ஒரு கயவனால் குந்தகம் ஏற்பட்டதாக நாலுபேருக்கு தெரிய வரும் சூழல் வந்தால் அதிலிருந்து நான் தப்பிப்பது எப்படி?


ஒரு கால கட்டம் வரை என் மகள் தற்கொலை செய்வதோ- விபத்தில் சாவதோதான் ஒரே வழியென்று எல்லா திரைப்படங்களிலும் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது வளர்ந்து விட்டார்கள்.அந்தக் கயவனைக் கொலை செய்வதே "புரட்சி" என்று நம்புகிறார்கள் போலும்.

செல்போன் கேமராவும், உளவுக் கேமராவும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும் தொழில் நுட்ப சூழலில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நெருக்கடியான நகரங்களில் பெண்களின் அங்கங்களை ஆபாசமாகவோ, ஏன் மறைந்திருந்து நிர்வாணமாகவோ படமெடுப்பது- வீடியோ எடுப்பது ஈனபுத்திக்காரர்களுக்கு இன்றைக்கு முடியவே முடியாத காரியம் ஒன்றும் கிடையாது.

அப்படி எடுக்கப்படும் சூழல் வரும் போதெல்லாம் தனது கற்பு பற்றிய அவதூறிலிருந்து காக்க அவள் கொலையோ- தற்கொலையோதான் செய்தாக வேண்டும் என்று இனியும் நாம் வற்புறுத்திக் கொண்டிருக்கப் போகிறோமா?

எந்தத்தவறுமே செய்யாத என் மகள் இன்னொருத்தன் செய்யும் ஆபாசக் காரியத்துக்காக எதற்காக தற்கொலையோ, கொலையோ செய்தே ஆகவேண்டும் என இச்சமூகம் வற்புறுத்தப் போகிறது?

"நிர்வாணமாய் உன்னைப் படமெடுத்துவிட்டேன். எனவே என் இச்சைக்கு எல்லாம் நீ அடிபணிய வா"- என மிரட்டும் காமுகர்களிடம் "முடியாது. வேண்டியதைச் செய்து கொள்" - என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்ல்லிவிட்டு அலட்சியமாய் இதனைக் கடந்து செல்லும் துணிச்சல் வேண்டாமா நம் பெண் குழந்தைகளுக்கு?

அப்படி ஒரு பெண் குழந்தை துணிச்சலுடன் கிளம்பினால் இந்த ஒட்டுமொத்த சமூகமும் அந்தத் தூயவளுக்கு துணை நிற்க வேண்டாமா?

இது சாத்தியப் படும் போது எந்தக் கயவனாலும் தவறே இழைக்காத எந்தப் பெண்ணையும் ப்ளாக் மெயில் பண்ண முடியாதே!

இதை விட்டு விட்டு பாதிக்கப் பட்ட என் மகளுக்கு என்னிடம் கூட பாதிப்பைச் சொல்ல முடியா அளவிற்கு குற்றஉணர்ச்சியை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

எளிதான-நிரந்தரமான இந்தத் தீர்வினை விட்டுவிட்டு என்னத்துக்கு வினாடிகள் தோறும் பயந்து சாகும் ஒரு கேடு கெட்ட சமூகப் பொதுவெளியை நமது பெண்களுக்கு நாம் தந்தேயாக வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம்?

"வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். ஆண்துணை இல்லாமல் எங்கும் செல்லாதீர்கள். இரவு நேரத்தில் எங்கும் தங்காதீர்கள்" - என்று பெண்ணின் செயல்பாட்டுக்கு- வளர்ச்சிக்கு - உயர்வுக்கு மிரட்டித் தடைபோடும் மறைமுக ஆணாதிக்கத்தின் அப்பட்ட வெளிப்பாடே அல்லாமல் வேறென்ன இதுபோன்ற பயமுறுத்தல்கள்?

நடுத்தரக்குடும்பத்தின் குறுகலான விழுமியங்களை தகர்த்து விழிப்புணர்வு தருவதற்குப் பதிலாக அவற்றைப் புனிதம் என்றும் நியாயம் என்றும் பிம்பப் படுத்தி எல்லா தரப்புப் பெண்களுக்கும் பொதுவானதாக மாற்ற முனையும் இது போன்ற கலைப்படைப்புக்கள் பாலினச் சமத்துவத்துக்கும், மனித உரிமைக்கும் எதிரானதல்லவா?

நாணமும் அச்சமும் நாய்கட்கு ஆனது தானே. அதையா இனியும் கொடுக்கப் போகிறோம்?

"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"

- என்ற வீரத்திற்கான- விவேகத்திற்கான உத்திரவாதத்தை நாமும் நம் சமுதாயமும் எப்போது நம் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கப்போகிறோம்?

No comments: