Thursday, September 17, 2015

கல்லூரி முதல்வரான ஒரு தோட்டக்காரரின் கதை!

கல்லூரி முதல்வரான ஒரு தோட்டக்காரரின் கதை!


தான் தோட்டக்காரராக வேலை பார்த்த கல்வி நிறுவனத்தின் கல்லூரி ஒன்றிற்கே முதல்வராகி, கடின உழைப்பிற்கும், வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற தீரா வேட்கைக்கும் ஒரு புதிய இலக்கணம் வகுத்துள்ளார் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இஷ்வர் சிங்க் பார்கா.
1985 ல் 19 வயதான இஷ்வர், பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் பிழைப்புக்காக வேலை தேடி பிலாய் நகரத்திற்கு சென்றிக்கிறார். வேலைதேடும் முனைப்பில் இருந்தாலும், படிப்பின் மீதான தீராத விருப்பம் இவருள் எரிந்து கொண்டே இருந்தது. ஒரு துணிக்கடையில் சேல்ஸ்மேன் வேலையில் சேர்ந்து, மாதம் 150 ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து பி.ஏ படிப்பில் சேர்ந்திருக்கிறார்.
படிப்பு செலவுகளையும், இதர செலவுகளையும் சமாளிக்க, பிலாயில் உள்ள கல்யாண் கல்லூரியில் தோட்டக்காரராக வேலைக்கு சேர்ந்தார். 1989 ல் படிப்பை முடிக்கும் வரையில் தோட்டக்காரர், ஸ்டாண்ட் கீப்பர், கட்டுமான வேலை என பல வேலைகளை மாறி மாறி பார்த்திருக்கிறார். படிப்பை முடித்த பின்னர், 'கல்யாண் சமிதி' நடத்தும் கல்லூரி ஒன்றில் கலை ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.
இது அவர் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய திருப்புமுனை. இருந்தும் நிதி தேவைகளை சமாளிக்க இரவு நேரங்களில் அங்கேயே வாட்ச்மேனாக வேலைக்கு சேர்ந்தார். பகல் நேரங்களில் கல்லூரியிலும், இரவு நேரங்களில் கல்லூரி வாசலில் காவலாளியாகவும் வாழ்கையை நடத்தி இருக்கிறார்.
வேலை செய்து கொண்டே எம்.எட், எம்.பில் என மேன்மேலும் படித்து பட்டங்கள் பெற்றார். சில வருடங்களுக்கு பிறகு டாக்டரேட் பட்டமும் பெற்றார். இவரின் திறமையையும், விடா முயற்சியையும் கண்ட கல்லூரி நிர்வாகம், இவருக்கு மெல்ல மெல்ல பதவி உயர்வுகள் கொடுத்து, முடிவில், கல்லூரியின் முதல்வராக உயர்த்தியது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் நம்பிக்கையாக இன்று விளங்கி வரும் இஷ்வர், வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு சிறந்த நம்பிக்கை நட்சத்திரம்.

No comments: