Sunday, July 12, 2015

சூடான் அதிபரை கைது செய்யப்போகிறார்கள். ஆனால் கொடியவன் ராஜபக்‌ஷே….? Sudan Omar- Al-Bashir - Mahinda Rajapakse.



சூடான் அதிபரை கைது செய்யப்போகிறார்கள். ஆனால் கொடியவன் ராஜபக்‌ஷே….? Sudan Omar- Al-Bashir - Mahinda Rajapakse. 
_____________________________________

திஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) சூடான் அதிபர் ‘ஓமர் அல் பஷீர்’ இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் . மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவரைக் கைதுசெய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உறுப்பு நாடான தென்னாப்பிரிக்காவிடம் அவரை கைது செய்ய வேண்டுமென்ற பொறுப்பை ஒப்படைத்துள்ளது. சூடான் அதிபரைக் கைது செய்ய வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

தென்னாப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டுக்குக் கலந்துகொள்ள சென்றுள்ள ஒமர் அல் பஷீர், ஜோஹன்ஸ் பெர்க்கில் தங்கியுள்ளார். புருண்டி, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் குழப்பங்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நீதிமன்றமும் அவர் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறக்கூடாது என்ற உத்தரவையும் நேற்றைக்கு (14-06-2015) பிறப்பித்துள்ளது. இந்த மாநாடு முடிந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்.

2003ம் ஆண்டு சூடான் நாட்டில் சுமார் 3லட்சம்பேர் கொல்லப் பட்டதாகவும், 25லட்சம்பேர் தங்களுடைய வீடுகள், உடைமைகளை இழந்ததாகவும் ஐ.நா இவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

இதே நிலைமை தானே ஈழத்தில் நடந்தது. ராஜபக்‌ஷே மீது சர்வதேச, சுதந்திரமான , நம்பகமான விசாரணை நடத்த நியாயமான கோரிக்கைகள் எழுப்பப்பட்டும் இன்னும் நிறைவேறாத நிலையில் இருக்கின்றது. இராஜபக்‌ஷேயும் இன அழிப்புதானே செய்தார்.

லைபீரிய அதிபர் சார்லஸ் இனப்படுகொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டு லண்டன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாரே ? இப்போது ஒமர் அல் பஷீர்…

இப்படி இனப்படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்படும் நிலையில், இராஜபக்‌ஷே தண்டனையிலிருந்து தப்புவதற்கான முயற்சிகளை முறையடிக்க வேண்டாமா?

இலங்கையில் மைத்திரி சிறிசேனா தலைமையில் அமைந்துள்ள புதிய அரசும்கூட, ராஜபக்‌ஷே நடத்திய போர்க்குற்றங்களை விசாரணை நடத்துவதைக் காட்டிலும், அந்தக் கொடுமையை மறைத்து விசாரணையை தாமதப்படுத்துவது என்ற நிலையிலே உள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாண அவையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு விசாரணை வேண்டுமென்று தீர்மானங்கள் கொண்டு வந்தும், சிறிசேனா அரசு அத்தீர்மானத்தையே பொருட்படுத்தவில்லை. இன்னும் தமிழர் பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அவர்களது சொத்துகளை சிங்களர்கள் கபளீகரம் செய்துகொண்டுள்ளனர்.

சிறிசேனாவின் முயற்சியாலும் ஈழத்தின் நடந்த போர்க்குற்ற விசாரணையை கிடப்பில் போடுவதை ஐ.நா ஏற்றுக்கொண்டுவிட்டதாக செய்திகல் வருகின்றன.

இந்த நிலையில் இன அழிப்பு போர்க்குற்றங்களில் காரணமான அதிபர்களை உலக அளவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட ராஜ பக்‌ஷே மட்டும் அதிலிருந்து தப்பித்துக்கொள்வது எந்த விதத்தில் நியாயம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-06-2015.

No comments: