Sunday, February 22, 2015

இரும்பைப் பொன்னாக்கும் வித்தை

கத்தியை எடு என்பதுபோல் பெரியவர் சைகை காட்டினார். மாணிக்கம் சற்றே கத்தியை விலக்கிக்கொண்டான். “இங்க என்ன கிடைக்கும்னு நீ வந்த? நானே ஒரு பிச்சைக்காரன்” என்றார்.

மாணிக்கம் சுற்றுமுற்றும் பார்த்தான். பெரியவர் சொன்னது சரிதான். இங்கே வந்ததில் எந்தப் பலனும் இல்லை. வெறுப்போடு அவரைப் பார்த்தான். அவன் தொழில் திருட்டு.

அதற்குப் பிரச்சினை வந்தால்தான் கத்தியைப் பயன்படுத்துவானே தவிர மற்றபடி யாரையும் கொல்வதில்லை. தொழிலுக்குக் குறுக்கே வந்தால் குழந்தை, பெரியவர், பெண்கள் என்று பார்க்க மாட்டான்.

வெறுப்புடன் திரும்பியவனைப் பெரியவர் கூப்பிட்டார். மாணிக்கம் திரும்பினான். “நீ ஏம்பா இவ்வளவு கஷ்டப்படற? இரும்பைப் பொன்னாக மாற்றும் மந்திரத்தை நீ கற்றுக்கொண்டால் திருட வேண்டிய அவசியமே இருக்காதே” என்றார்.

மாணிக்கத்தின் கண்கள் விரிந்தன. அவரிடம் விவரம் கேட்டான். அது ரசவாதம் என்னும் வித்தை என்றார் பெரியவர். அந்த வித்தை உங்களுக்குத் தெரியுமா என்றான் மாணிக்கம்.

பெரியவர் சிரித்தார். “எனக்குத் தெரிந்தால் நான் ஏன் இப்படி இருக்கிறேன்?” என்றவர், பக்கத்து ஊரில் இருக்கும் சாமியாருக்குத் தெரியும் என்று பேசிக்கொள்கிறார்கள் என்றார். உற்சாகத்துடன் வேகமாகக் கிளம்பியவனை மீண்டும் தடுத்தார்.

“அவரை மிரட்டிப் பணியவைக்க முடியாது. அவர் உயிருக்குப் பயப்படுபவர் இல்லை. அவரிடம் பணிவாக நடந்துகொண்டால் கற்றுத் தருவார்” என்றார்.

ஒரு முடிவோடு மாணிக்கம் கிளம்பினான்.

பணிவாகத் தன் முன் வந்து நின்ற மாணிக்கத்தைச் சீடனாக ஏற்றுக்கொண்டார் சாமியார். மாணிக்கம் அவர் சொன்ன வேலையெல்லாம் செய்தான். சொல்லாத வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான்.

அவர் தூங்குவதற்கு முன் காலை அமுக்கிவிட்டான். தூங்கும்போது விசிறிக்கொண்டே நின்றான்.

ஒரு மாதம் கழிந்தது. “நீயாகக் கேட்காதே, உன் மீது நல்ல அபிப்ராயம் வந்தால் அவராகவே சொல்லித்தருவார்” என்று பெரியவர் சொல்லியிருந்தார். மாணிக்கம் பொறுமையாகப் பணிகளையும் பணிவிடைகளையும் செய்துவந்தான்.

ஆசிரமத்து வேலைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்தான். தோட்டம் பூத்துக் குலுங்கியது. ஆசிரமம் பளிச்சென்று மாறியது. சமையலறை, உணவுக் கூடம் ஆகியவை இதற்கு முன் இவ்வளவு சுத்தமாக இருந்ததில்லை.

வருடங்கள் ஓடின. மாணிக்கம் பொறுமையாகக் காத்திருந்தான். இரும்பைப் பொன்னாக்கும் வித்தை தெரிந்துவிட்டால் வாழ்நள் முழுவதும் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை அல்லவா? எனவே பொறுமை காத்தான்.

வேளைக்குச் சாப்பாடு, தங்க இடம், அன்பான சூழல் ஆகியவையும் அவனுக்குப் பிடித்திருந்தன. சாமியார் காட்டும் அன்பும் அவனை நெகிழவைத்திருந்தது. விரைவில் அந்த வித்தை வசப்பட்டுவிடும் என்று நம்பினான்.

சாமியார் நோய்வாய்ப்பட்டார். மாணிக்கம் பதறிப்போனான். அவரைக் கண்போலப் பார்த்துக்கொண்டான். அவர் செய்துவந்த வேலைகளையும் சேர்த்துத் தானே செய்தான். எதுவாக இருந்தாலும் மாணிக்கத்திடம் கேட்டுச் செய்யுங்கள் என்று சாமியார் சொல்லிவிட்டார்.

மாணிக்கத்தால் இந்தப் புதிய அந்தஸ்தை நம்ப முடியவில்லை. அனைவரும் தன்னிடம் பணிவாகவும் அன்பாகவும் பழகுவதைக் கண்டு அவன் மனம் கசிந்தது. தனிமையில் அழுதான்.

இதற்கெல்லாம் எனக்குத் தகுதி இருக்கிறதா என்று நொந்துகொண்டான். எத்தனை நாளுக்கு இந்த நடிப்பு என்று நினைத்து வருந்தினான்.

சாமியாரின் உடல் நிலை மிகவும் மோசமானது. ஒரு நாள் அவருக்குக் கடுமையான காய்ச்சல். எழுந்திருக்கவே முடியவில்லை.

குளிர்ந்த நீரைத் துணியில் நனைத்து மாணிக்கம் ஒத்தடம் கொடுத்தான். சூடு அடங்கவே இல்லை. அவரைத் தன் மடியில் வைத்தபடி நெற்றியில் பற்றுப் போட்டான்.

அவர் உடல் தளர்வதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தான். இன்னும் சிறிது நேரம்தான் என்று உணர்ந்தான். சாமியார் தன் கையை மெதுவாக உயர்த்தி அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். மாணிக்கத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அதே சமயம் வந்த வேலையும் நினைவுக்கு வந்தது. இப்போது கேட்காவிட்டால் எப்போதும் கேட்க முடியாது என்று தோன்றியது. அவர் காதுக்கு அருகில் குனிந்தான். தயக்கத்துடன் மெல்லிய குரலில் கேட்டுவிட்டான்.

“ஸ்வாமிஜி, உங்களுக்கு இரும்பைப் பொன்னாக்கும் ரசவாதம் தெரியுமாமே? அதை எனக்குச் சொல்லித் தருவீர்களா?”

சாமியாரின் முகத்தில் புன்னகை. “அது உனக்கு ஏற்கனவே தெரியும் அப்பா” என்றார்.

மாணிக்கம் பார்வையில் கேள்விக்குறி.

“இரும்பாக இருந்த மாணிக்கம் இப்போது தங்கமாக மாறியிருக்கிறானே, இதுதானப்பா அந்த ரசவாதம். அது உனக்கு இப்போது நன்றாகவே தெரியும். நீயும் ரசவாதிதான்.”

சாமியாரின் உயிர் பிரிந்தது. மாணிக்கத்தின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.

மூலம் :- http://m.tamil.thehindu.com/society/spirituality/இரும்பைப்-பொன்னாக்கும்-வித்தை/article6912240.ece

No comments: