Sunday, June 30, 2013

தெரிந்து கொள்வோமா-154 [பங்கு வர்த்தகத்தின் மற்றொரு ஆபத்து...]

நீங்கள் ஒரு நீண்ட கால முதலீட்டாளர். உங்கள் கையில் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டு பல நல்ல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளீர்கள். உதாரணத்துக்கு உங்களுடைய DEMAT ACCOUNT ல் ஒரு ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிற்கு பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இது தவிர உங்கள் கையில் ஒரு லட்சத்தை வைத்து தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள உங்கள் பங்குகள் எவ்வித தொந்தரவும் இல்லாமல் உங்களது DEMAT ACCOUNT-ல் இருக்கும் போது உங்களது பங்கு தரகர் உங்களிடம் சார் நீங்கள் தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதை அறிகிறோம் என்று ஆரம்பித்து நீங்கள் அருமையாக வர்த்தகம் செய்து வருகிறீர்கள். அதனால் உங்கள் DEMAT ACCOUNT ல் இருக்கும் பங்குகளை ஈடாக வைத்து (அடமானம் போல) நீங்கள் கூடுதலாக மூன்றில் இருந்து நான்கு லட்சம் வரை கடன் தருகிறோம். அதை பயன் படுத்தி INDRADAY TRADING (தினசரி வர்த்தகம்) அல்லது FUTURES ல் வர்த்தகம் செய்ய அனுமதி கொடுக்கிறோம். அவ்வாறு நீங்கள் கூடுதலாக வர்த்தகம் செய்யும் தொகைக்கு குறைந்த வட்டி மட்டுமே வசூலிப்போம் என்று கூறுவார்கள். இதை MARGIN TRADING என்று சொல்கிறார்கள்.
ஒரு லட்ச ரூபாய் கையில் வைத்து நிம்மதியாக நீங்கள் வர்த்தகம் செய்து வரும் போது இந்த தூண்டில் உங்கள் மனதில் மிகப் பெரிய சலனத்தை நிச்சயம் எற்படுத்தும். இதற்கு நீங்கள் இசைவு தெரிவித்தால் நிச்சயமாக உங்களுக்கு தொடர் மன உளைச்சல்களும், சீரழிவுகளும் ஏற்பட 90 சதவீதம் வாய்ப்புக்கள் உள்ளது. எப்படி?

தினசரி வர்த்தகத்தில் ஈடுபடும் போது பொதுவாக கையில் இருக்கும் பணத்தை போல பத்து மடங்கு, பதினைந்து மடங்கு வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் தரகு நிறுவனங்கள் உங்கள் DEMAT ACCOUNT ல் இருக்கும் பங்குகளுக்கு எதிராக வழங்கும் மூன்று லட்சம் முதல் நான்கு லட்ச ரூபாய் வரை கொடுக்கும் கடன் வசதியை பயன்படுத்தி அதன் மீதும் பத்து அல்லது பதினைந்து மடங்கு வர்த்தகம் செய்ய அனுமதிப்பார்கள்.

அதாவது கையில் இருக்கும் தொகை ஒரு லட்சத்திற்கும் கடனாக அனுமதிக்கும் நான்கு லட்சத்திற்கும் சேர்த்து சில நிறுவனங்கள் கிட்டத்தட்ட எழுபத்தைந்து லட்ச ரூபாய் வரை INTRADAY (தினசரி வர்த்தகம்) செய்ய அனுமதிப்பார்கள். மாலைக்குள் உங்கள் தினசரி வர்த்தகத்தை முடித்தே ஆக வேண்டும் என்கிற பட்சத்தில் லாபம் வந்தால் சரி. நட்டம் ஏற்பட்டால்? ஒரு உதாரணத்துக்கு எழுபத்தி ஐந்து லட்சம் வர்த்தகத்தில் ஒரு சதவீதம் நட்டம் ஏற்பட்டால் கூட கையில் இருக்கும் ஒரு லட்சதில் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் காலி. கூடவே தரகு மற்றும் வரிகள் வேறு.

சரி FUTURES வர்த்தகத்தில் என்ன ஆபத்து வரும்? கையில் இருக்கும் பணத்தை பயன் படுத்தி FUTURES வர்த்தகத்தில் ஈடுபடும் போது நட்டம் ஏற்பட்டாலும் கூட அதற்கான தொகையை செலுத்தி விட முடியும். முடியாவிட்டாலும் கூட சிறு நட்டத்துடன் வெளியேற முடியும். அளவுக்கு அதிகமாக MARGIN வாங்கி வர்த்தம் செய்யும் போது உங்களுக்கு கடன் அனுமதி அளித்த நல்லவர்கள். சார் பணத்தை கட்டுங்கள் அல்லது நாங்கள் உங்கள் SHARES ஐ விற்று விடுவோம் என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். இப்படி நீங்கள் சந்தையில் சேர்த்த பங்குகளும் காலியாகி விடும்.

மிகப்பெரிய சரிவை சந்தைகள் சந்திக்கும் போது (உதாரணமாக சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன மோசடி, அமெரிக்க பொருளாதார சிக்கல் போன்ற சமயங்களில்) நீங்கள் MARGIN வர்த்தகத்தை பயன் படுத்தி FUTURES ல் ஏதேனும் POSITION வைத்திருந்தால் அதுவும் விலை குறையும். உங்கள் DEMAT ACCOUNT ல் இருக்கும் பங்குகளும் விலை வீழ்ச்சியில் இருந்து தப்பாது. இது போன்ற சந்தர்ப்பங்களில் தரகர்கள் என்ன செய்வார்கள் என்றால் உங்களை கேட்காமலேயே உங்கள் DEMAT ACCOUNT ல் உள்ள பங்குகளை விற்று விடுவார்கள். இப்படியான சமயங்களில் பெரும்பாலும் எல்லா தரகர்களும் தாறுமாறாக பங்குகளை விற்பதால் SUPPLY அதிகமாகி BUYING குறைந்து பங்குகள் விலையில் பெருத்த அடி விழும். இதை MARGIN CALL என்று கூறுவார்கள்.

அதே சமயம் இதில் குறைந்த நட்டத்துடன் தப்ப வழி உண்டா என்றால் உண்டு. அடமானம் வைத்து வர்த்தகம் செய்யும் உங்கள் POSITION ஐ மறுநாள் வரை கொண்டு செல்லக்கூடாது. அதனால் சாதாரண CASH MARKET ல் INTRADAY TRADING ல் (தினசரி வர்த்தகம்) ஈடுபடுபவர்களானாலும் FUTURES வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களானாலும் பெரிய நட்டமின்றி தப்புவதற்கு STOP LOSS என்ற ஒன்றை எப்போதுமே பயன் படுத்த வேண்டும். அப்படி ஒரு ஒழுங்கை கடைப்பிடித்து வர்த்தகம் செய்பவர்களுக்கு நட்டம் வந்தாலும் பிறிதொரு வர்த்தகத்தில் ஈடு கட்ட முடியும். சந்தையில் மிகப்பெரிய நட்டத்தை சந்தித்தவர்கள் பெரும்பாலும் கடனுக்கு வர்த்தகம் செய்பவர்களும், STOP LOSS ஐ கடை பிடிக்காதவர்களாகவுமே இருக்கிறார்கள்.

பாளை.ராதாகிருஷ்ணன்

நன்றி-www.aanthaireporter.com

No comments: