Sunday, June 2, 2013

தெரிந்து கொள்வோமா-136 [தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர்]

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர்
==========================>>>>>>>>
பண்டைய தமிழகத்தின் கடற்கரை 1500 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்திருந்தது. இதனால் தமிழர்கள் தொல்பழங்காலத்திலேயே வெளிநாடுகளோடு வணிகத் தொடர்பும் கலாசார தொடர்பும் கொண்டிருந்தனர்.

தமிழக கடற்கரையில் வாழ்ந்த மக்கள் சிறந்த கடலாடிகளாக இருந்தார்கள். குறிப்பாகக் கப்பல் கட்டும் கலையிலும் அலைகடலில் கப்பலைச் செலுத்தும் கலையிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதன் காரணமாக தென்கிழக்காசிய நாடுகளுக்கு வணிகம் மற்றும் மதப்பிரசாரம் ஆகியவற்றுக்காகத் தமிழர்கள் சென்றார்கள். பிறகு அந்நாடுகளில் குடியேறினர். இத்தகைய குடியேற்றங்கள் கி.பி.முதலாம் நூற்றாண்டில் தொடங்கி சில காலத்திற்கு நடைபெற்றது. மியான்மர், சீனம், கம்போடியா முதலிய நாடுகளிலும் சுமத்திரா, சாவகம், போர்னியோ, பிலிப்பைன்ஸ் தீவுக் கூட்டங்களிலும் அவர்கள் குடியேறினார்கள்.

தாம் குடியேறி வாழ்ந்த இடங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார்கள். இதன் விளைவாக இந்த நாடுகளில் பண்டைக்காலச் சின்னங்கள், தமிழகத்தில் கிடைத்துள்ள அதே அளவுக்கு தென்கிழக்காசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்பாலான சூலங்கள், வேலின் அலகும் மலேசியாவில் கிடாவிலும் சுமத்திராவிலும் பிலிப்பைன்சிலும் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தாய்த் தெய்வம் போன்றவை தென்கிழக்காசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன.

சங்க பழங்கால சூதபவழம் போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள மணிகள், வளையல்கள் போன்றவை தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சியின்போது குவியல்குவியலாகக் கிடைத்துள்ளன. இதைப்போன்ற மணிகளும் வளையல்களும் காம்போசம், பிலிப்பைன்சிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

போருக்குப் பயன்படும் ஈட்டி, வேல், வாள், அரிவாள், கோடாலி போன்ற பலவகைக் கருவிகள் தமிழ்நாட்டிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் ஒரேமாதிரியாகக் கிடைத்துள்ளன.

முருக வழிபாட்டுக்குரிய வேல், சேவல், காவடி போன்ற பொருட்கள் ஆதிச்சநல்லூர், பிலிப்பைன்ஸ் தீவுகளில் கிடைத்துள்ளன.

தென்கிழக்காசிய நாடுகளில் பரவியுள்ள பழைய பெருங்கற்காலப் பண்பாடு, சோழ மண்டலக் கடற்கரையிலிருந்து அந்நாடுகளுக்குச் சென்று பரவியிருக்க வேண்டுமென அறிஞர்கள் கருதுகிறார்கள். சாவகம், சுமத்திரா, பாலி, போர்னியோ, பிலிப்பைன்ஸ் தீவுகளிலேயே முதல் காலகட்ட பெருங்கல் பண்பாட்டுச் சின்னங்கள் ஏராளமான அளவில் கிடைத்துள்ளன. சோழ மண்டலக் கடற்கரைக்கு நேராக அமைந்துள்ள தீவுகளாக இவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சங்ககாலத்திற்கு முன்பிலிருந்து கடைச்சங்க காலம் முடிவு வரை கி.பி.350 வரை தமிழகத்தில் வீசிய பண்பாட்டு அலை மியான்மர், சாம்பா, காம்போசம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் சுமத்திரா, சாவகம் முதலிய தீவுகளிலும் பரவியிருக்க வேண்டும். சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய நடுகற்கள் அமைக்கும் வழக்கம் மேற்கண்ட நாடுகளிலும் காணப்படுவதே இதற்குப் போதிய சான்றாகும்.

மன்னர் குலம்
தென்கிழக்காசிய நாடுகளை ஆண்ட பல்வேறு மன்னர் குலங்களுக்கும் தமிழக மன்னர் குலங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருப்பதற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. பல்லவ, சோழ, பாண்டிய மன்னர் குலங்களைச் சேர்ந்தவர்களே தென்கிழக்காசிய நாடுகளின் அரச பரம்பரைகளைத் தோற்றுவித்தவர்கள் என்றும் கருதப்படுகிறது.

தமிழக மன்னர் குலங்களுக்குரிய குடிப்பெயர்களை தென்கிழக்காசிய மன்னர்கள் தங்களுக்கும் சூட்டிக் கொண்டார்கள். மணவினை உறவும் இவர்களுக்குள் இருந்தது. சமய, பண்பாடு ரீதியான தொடர்புகளும் அந்நாடுகளுக்கும் தமிழர்களுக்குமிடையே நெருக்கமாக இருந்தது.

வர்மன் என்னும் குடிப்பெயரை கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ அரச மரபினர் தங்கள் பெயரோடு சேர்த்து வழங்கினர். இந்த வர்மன் என்னும் பெயரைத் தம்முடைய சிறப்புப் பெயராகத் தென்கிழக்காசிய நாடுகளை ஆண்ட பல்வேறு மன்னர் குலங்களைச் சேர்ந்தவர்கள் தத்தம் பெயர்களோடு சேர்த்துப் பயன்படுத்தியுள்ளனர்.

மியான்மரைச் சேர்ந்த மோன் பழங்குடி மன்னர்கள் விக்கிரவர்மன், பிரபுவர்மன் என்னும் பெயர்களை உடையவர்களாகத் திகழ்ந்தனர்.

பியூனானை ஆண்ட அரசன் ஒருவர் குணவர்மன் என்று குறிப்பிடப்படுகிறான்.

சம்பாவின் புகழ்மிக்க அரசன் பத்திரவர்மன் ஆவான். காம்போசத்தை ஆண்ட முதல் அரச மரபைச் சேர்ந்தவன் உருத்திரவர்மன் ஆவான்.

மலேயாவை ஆண்ட மன்னர்கள் சிலரும் வர்மன் என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டனர். அவர்களில் விஷ்ணுவர்மன் முக்கியமானவன். சாவகத்தை ஆண்ட மன்னர்களுள் தேவவர்மன், பூர்ணவர்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். போர்னியோவை அசுவவர்மன் என்னும் மன்னன் ஆண்டான்.

இந்த வர்மன் என்னும் குடிப்பெயரை முதலில் சூட்டிக்கொண்ட பியூனான், சம்பா, காம்போச அரசர்கள் பல்லவ அரசர்களுடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையவர்களாக இருந்திருக்கவேண்டும். மாறன் என்னும் பெயருடைய அரசன் ஒருவன் சம்பாவை ஆண்டுள்ளான். அவன் பாண்டிய அரச மரபினைச் சேர்ந்தவன் என்பது அறிஞர் பிலியோசாயின் கருத்தாகும்.

இராசாதிராசன் என்னும் பட்டப்பெயரை 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயினவுங்கு என்னும் அரசன் சூட்டிக்கொண்டுள்ளான். இப்பெயர் இராசேந்திர சோழனின் மூத்த மகனின் பெயராகும். இதே பட்டப்பெயரை காம்போசத்தை ஆண்ட சூரியவம்ச இராம மகாதரன் என்பவனும் சூட்டிக்கொண்டுள்ளான். பிற்காலச் சோழ மன்னர்கள் பயன்படுத்திய திரிபுவன சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை மியான்மரை 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கியாசித்தன் பயன்படுத்தியுள்ளான்.

12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சாவகத்தை ஆண்ட சைலேந்திர அரசன் ஒருவன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியன் என்னும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டுள்ளான். இவன் பாண்டிய குலத்தோடு தொடர்பு கொண்டவனாகத் தோன்றுகிறது.

திருமுறை இலக்கியம்
தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ் நாகரிகம், பண்பாடு, சமயம் ஆகியவை கடல் கடந்து தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியிருந்தன. தாய்லாந்து நாட்டில் நடைபெறும் மன்னருக்கு முடிசூட்டும் விழாவில் திருமுறைகள் ஓதப்பட்டன. திருஞானசம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதல் பதிகமும், சுந்தரரின் பித்தா பிறைசூடி பெருமானே என்ற முதல் பதிகமும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும் தென்னாட்டுக்குரிய கிரந்த எழுத்தில் எழுதப்பெற்று இன்றும் தாய்லாந்து நாட்டின் அரச விழாக்களில் பாடப்பட்டு வருகின்றன.

காம்போசம், தாய்லாந்து, வியட்நாம் முதலிய நாடுகளில் காரைக்கால் அம்மையாரின் கோயில்கள் காணப்படுகின்றன. எனவே, தமிழர்களின் திருமுறைகள் தென்கிழக்காசிய நாடுகளில் பல்லவர், சோழர் காலங்களில் பரவியிருக்கவேண்டும்.

தமிழ்க்காப்பியமான மணிமேகலை கதைத்தலைவி மணிமேகலை சாவகத்துக்குச் சென்று தருமசாவகனைச் சந்தித்து வந்ததைப் பற்றிய செய்தி குறிப்பிடத்தக்கதாகும். சிலப்பதிகாரத்தால் சுட்டப்படும் மணிமேகலை என்னும் கடல் தெய்வம் தாய்லாந்து மக்களால் வழிபாடு செய்யப்பட்டது. மணிமேகலை வரலாற்றைக் கூறும் கதைப் பாடல்களும் அம்மானைப் பாடல்களும் இன்னும் தாய்லாந்தில் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சமயம்
தென்கிழக்காசிய நாடுகளில் புத்த சமயம் மட்டுமல்ல சைவ சமயமும் பரவியிருந்தது. இந்நாடுகளில் அகத்தியர் வழிபாடு இருந்தது என்பதைத் தொல்பொருள் சின்னங்கள் புலப்படுத்துகின்றன. காம்போசம், மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகளில் அகத்தியரின் சிலைகள் கிடைத்துள்ளன.

அதைப்போலவே காரைக்கால் அம்மையாரின் செப்புச் சிலைகள் காம்போசம், பினிசியா போன்ற நாடுகளில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டு வணிகர்கள் தங்களின் குலதெய்வமான காரைக்கால் அம்மையாரைத் தாங்கள் செல்லும் இடமெல்லாம் எடுத்துச்சென்றிருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

நடராசர் வழிபாடு
தமிழர்களுக்கே உரியதும் சோழர் காலத்ததுமான நடராசர் வழிபாடு தாய்லாந்து, காம்போசம், இந்தோ னேசியா போன்ற நாடுகளில் பரவி இருப்பதற்கான சான்றுகள் கிடைத் துள்ளன. இந்நாடுகளில் உள்ள கோயில் சிற்பங்களில் நடராசர் உருவமும் காரைக்கால் அம்மையார் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லாலும் செம்பாலும் செய்யப் பட்டுள்ள இந்தச் சிலைகள் இன்ன மும் அந்த நாடுகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன.

பல்லவ நாட்டுத் தலை நகரமாக விளங்கிய காஞ்சிபுரம் புத்த மதத்தின் தலையாய இடமாக ஒரு காலகட்டத்தில் விளங்கிற்று. இந்த காஞ்சியிலிருந்து 6ஆம் நூற்றாண்டில் போதிதர்மன் என்ற புத்தத் துறவி சாவகத்தின் வழியாக சீனா சென்றார். மாபெரும் தத்துவஞானியாக விளங்கிய தருமபாலர் தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று வந்தார். 10ஆம் நூற்றாண்டு முடிவுவரை காஞ்சியைச் சேர்ந்த தமிழ் புத்தத் துறவிகள் தென்கிழக்காசிய நாடுகளில் புத்த சமயப் பரப்புரையில் ஈடுபட்டனர்.

மன்னர் நில உறவுகள்
தென்கிழக்காசிய நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டியிருக்கிறார்கள். சம்பா என்னும் நாட்டின் பெயர் காவிரிப் பூம்பட்டினத்தின் சிறப்புப் பெயரான சம்பாபதியின் திரிபாகும். மலேயாவின் இக்காலப் பெயர் முதலாம் இராசேந்திரனின் காலத்தில் மலையூர் என விளங்கியது. சிங்கப்பூரின் பழங்காலப் பெயர் சிங்கபுரம் என்பதாகும். இந்தோனேசியாவில் சிறப்புற்று விளங்கிய மதுரா பாண்டியரின் தலைநகரமான மதுரையோடு கொண்டிருந்த தொடர்பைப் புலப்படுத்துகிறது.

தென்கிழக்காசிய நாடுகளில் அரசோச்சிய மன்னர்கள் தமிழ்நாட்டிலிருந்த பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்கள். மியான்மரின் அரசர்கள் பல்லவ அரசர்களோடு தொடர்பு கொண்டிருந்தனர். பியூனான் அரச மரபின் தோற்றம் பற்றிய கதை பல்லவரின் அரச குடியின் தோற்றம் பற்றிய செப்பேடு செய்திகளோடு பெரிதும் ஒத்திருக்கிறது.

சம்பாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின் மூலம் அந்நாட்டு அரச மரபு பல்லவரோடு கொண்டிருந்த உறவு வெளிப்படுகிறது.

காம்போச இளவரசி ரெங்கபதாகையை இரண்டாம் நரசிம்ம பல்லவன் மணந்து கொண்ட வரலாறு குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாம் நரசிம்மன் என அழைக்கப்பட்ட இராசசிம்மனின் ஆட்சிக்கு தீவாந்திர பிரதேசத் தீவுகள் உட்பட்டிருந்ததை வரலாறு எடுத்துக்காட்டுகிறது. இரண்டாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன் காம்போசத்திலிருந்து அழைத்துவரப்பட்டு தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசனாக முடிசூட்டப்பட்டான்.

சுமத்திராவை ஆண்ட சைலேந்திர மன்னர்கள் பல்லவ குலத்தோடு தொடர்புடையவர்கள்.

மலேசியாவில் கங்க, பல்லவர் அரச குடிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சிசெய்துள்ளனர்.

கி.பி.9ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சோழப் பேரரசு எழுச்சிபெற்றபோது தென்கிழக்காசிய நாடுகள் சோழர்களோடு நெருக்கமான அரசியல் உறவு கொண்டிருந்தன.

மியான்மரை ஆண்ட கியாசிந்தன் என்னும் அரசன் சோழ இளவரசியை மணம் செய்து கொண்டான்.

மாமன்னன் இராசராசன் ஆட்சி காலத்தில் சைலேந்திர அரசரின் முயற்சியால் நாகைப்பட்டினத்தில் சூளாமணி பெளத்த விகாரம் கட்டப்பட்டது. சைலேந்திர அரசரின் மகளைச் சோழப் பேரரசன் இராசேந்திரன் திருமணம் செய்து கொண்டதாக மரபுவழிச் செய்தி ஒன்றுண்டு. நாகப்பட்டினத்தில் எழுப்பப்பட்ட சூளாமணி விகாரத்திற்காக ஆனைமங்கலம் என்னும் ஊரையே இராசேந்திரசோழன் தானமாக அளித்தான்.

முதலாம் இராசராசன் காலத்தில் சைலேந்திரர்களுக்கும் சோழப் பேரரசுக்குமிடையே நெருக்கமான நட்புறவு நிலவியது. ஆனால் இராசேந்திர சோழன் காலத்தில் அவனுடைய படைகள் cவிசய அரசைத் தாக்கி அதன் அரசனைச் சிறைப்படுத்திச் சென்றதாக வரலாறு கூறுகிறது. கி.பி.1025இல் நடைபெற்ற இந்த படையெடுப்பில் சுமத்திராவில் உள்ள பண்ணை, மலையூர் ஆகியவற்றையும் மலேயாவில் இருந்த மாயிருமங்கம், இலாமுரி தேசம் ஆகியவற்றையும் நிக்கோபார் என இன்று வழங்கும் நக்காவரம் தீவினையும் சோழர் படை கைப்பற்றிக்கொண்டு தமிழகம் திரும்பியது.

கி.பி.1068இல் விசய அரச குடும்பத்தினரிடையே போர்ப்பூசல் உண்டாயின. அவர்களுக்குள் ஒரு குழுவினர் சோழப் பேரரசனான வீரராசேந்திர சோழனிடம் உதவியை நாடினர். அந்த வேந்தனும் தனது கடற்படையை அனுப்பி கடாரத்தை வென்று உரியவனிடம் அதைக் கொடுத்து அரசனாக்கினான்.

சுமத்திராவிலுள்ள ஒரு கல்வெட்டு நானா தேசத்துத் திசை ஆயிரத்து ஐநூற்றுவர் என்று தமிழகத்து வணிகர் குழாம் ஒன்றைப்பற்றிக் குறிப்பிடுகிறது.

பண்டைய மன்னர்களுக்கும் சுமத்திராவை ஆண்ட சைலேந்திரனுக்கும் நெருக்கமான உறவு இருந்து வந்தது. மாறன் என்னும் குடிப்பெயர் கொண்ட மன்னர்கள் சாவகத்தை ஆண்டுள்ளனர். இம்மன்னர்கள் பாண்டியர்களுக்குரிய இரட்டைக்கயல் சின்னத்தைத் தங்கள் இலச்சினையாகக் கொண்டிருந்தனர். சாவக மன்னன் ஒருவனின் பெயர் பாண்டியன் விக்கிரமதுங்கன் என்பதாகும்.

மணவினை உறவுகள்
தமிழ்நாட்டின் பல்வேறு அரச குடிகளைச் சேர்ந்த பெண்களைத் தென்கிழக்காசிய நாடுகளின் அரசர்கள் மணந்த வரலாறு குறிப்பிடத்தக்கதாகும்.

பழக்கவழக்கங்கள்
தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வியலில் இடம்பெற்ற பல பழக்கவழக்கங்கள் தமிழர்களிடமிருந்து பெறப்பட்டவையாகும். திருமண விழா, சடங்குகள், இறந்தவரை அடக்கம் செய்தல், திருவிழாக்கள் போன்ற பல்வேறு பழக்கவழக்கங்களைத் தமிழர்களிடமிருந்து அவர்கள் பெற்றார்கள்.

பியூனான் திருமணச் சடங்குகளும் விருந்தோம்பலும் தமிழர்களின் பழக்கவழக்கங்களைப் பெரிதும் ஒத்துள்ளன. வேட்டி, சேலை அணியும் பழக்கமும் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கவேண்டும்.

காம்போசத்தில் திருமண விழாவில் பரிசம் போடுதல், குழந்தை பிறந்த 9ஆம் நாள் சடங்கு செய்தல் ஆகியவை தமிழ்நாட்டோடு நெருக்கமான தொடர்புடையன.

உணவு முறையில் அப்பம், கொழுக்கட்டை போன்றவற்றை கெமருகள் செய்து முன்நின்றனர். கெமருகளின் நாட்டியக்கலை தமிழக நாட்டிய வழித்தோன்றலே ஆகும்.

தாய்லாந்தில் குழந்தையைத் தொட்டிலில் இடுதல், 3 ஆண்டுகளுக்குப் பின் மொட்டை அடித்துக் காது குத்துதல் ஆகியவை இன்னமும் வழக்கத்தில் உள்ளன.

திருவிழாக் காலங்களில் அன்னதானம் தாய்லாந்தில் காணப்படுகிறது.

திருவிழாத் தொடக்கத்தில் கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் ஆகிய பழக்கவழக்கங்கள் உள்ளன. இறைவழிபாட்டின்போது பழங்களைப் படைப்பதும், பூக்களால் வழிபடுவதும் நடைமுறையில் இருக்கின்றன.

திருப்பாவை, திருவெம்பாவை விழாவினை மார்கழி மாதக் கடைசியில் தாய்லாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

மலேசியாவில் நன்னிகழ்ச்சிகளில் மலர், வெற்றிலை-பாக்கு கொடுத்தல் செய்யப்படுகிறது.

சிங்கப்பூரில் விருந்தினர்களை வழியனுப்பும்போதும், பெரியோரிடம் பேசிவிட்டுத் திரும்பும்போதும் ஏழு அடி பின்சென்று திரும்புகின்றனர். மன்னரை வாழ்த்தும் மரபு சிங்கப்பூரில் தமிழர்களின் வழக்கத்தைப் போலவே அமைந்திருக்கிறது.

மலாய் மக்களின் திருமணச் சடங்கில் ஓம் என்னும் மந்திரம் ஓதப்படுகிறது. மலாக்காவில் தீமிதித்தல் திருவிழா நடைபெறுகிறது.

பாலித் தீவில் பொங்கலைப் போன்று அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

போர்னியோவில் தமிழ் மாதங்களின் பெயர்களே வழக்கில் இருந்து வருகின்றன.

பியூனானில் இறந்தவரை அடக்கம் செய்தலில் தமிழர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றிவருகின்றனர்.

காம்போசத்தில் இறப்பு நிகழுமாயின் 15 நாட்கள் துக்கம் காத்தல் வழக்கத்தில் உள்ளது. 16.ஆம் நாள் தலை மழித்தல் சடங்கும் நடத்தப்படுகிறது.

சம்பாவில் இறந்தவருக்காக உறவினர், பங்காளிகள் தலையை மழித்துக் கொள்கின்றனர். தாய்லாந்தில் ஈமச்சடங்குகள் தமிழர்களின் சடங்குகளைப் போலவே நடைபெறுகின்றன.

பாலியில் சவ அடக்கத்தில் எலும்புகளைப் பானையிலிட்டு கடலில் விடுவது வழக்கமாக இருக்கிறது.

போர்னியோவில் புருனா என்னும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில் தமிழ்நாட்டு சைவசமயச் சித்தாந்தக் குறிப்புகள் கிடைத்துள்ளன. பாலியில் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்கள் தமிழர்களுடையவை போன்றே உள்ளன. தாலாட்டுப் பாடல் பாடுவதும், பொன்னால் செய்யப்பட்ட தாலியைக் கட்டுவதும் அங்கே உள்ளது.

குழந்தைகளுக்கு பெயரிடுதல், தொட்டிலில் இடும் சடங்கு முதலியன தமிழ்நாட்டைப் போன்றவையாக அமைந்திருக்கின்றன.

மியான்மர் எழுத்துக்களில் 33 உயிர் எழுத்துகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான எழுத்துகள் அப்படியே தமிழ் எழுத்துகளால் குறிக்கப்படுகின்றன. 33 மியான்மர் உயிர் எழுத்துக்களும் தமிழ் உயிர் எழுத்துகளின் ஒலியையே கொண்டிருக்கின்றன.

சங்கத் தொகை நூல்களில் வெற்றிலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பிற்கால நூல்களில் வெற்றிலை பற்றிய குறிப்புகள் உண்டு. மலாய் தீபகற்பத்தில் இருந்தவர்கள், மலாய் தீவுகளில் இருந்தவர்கள்தான் வெற்றிலையைத் தமிழ்நாட்டுக்கு முதலில் கொண்டு வந்தார்கள் எனக் கருதப்படுகிறது.

சுமத்திராவில் வாழும் மக்களிடையே காணப்படும் பழங்குடிப் பெயர்கள் தமிழகத்தினைப் பின்பற்றியவை ஆகும். சோழியன், பாண்டியன், பல்லவன், தக்கன் முதலிய பெயர்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை.


No comments: