Wednesday, May 8, 2013

புதுச்சேரி, மின் துறையில் நவீனத்துவம்...

நாட்டிலேயே முன்னோடித் திட்டமாக, "ஸ்மார்ட் கிரீட்' திட்டம், புதுச்சேரியில் அறிமுகம்.
******************************************

அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை, கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கும், "ஸ்மார்ட் கிரீட்' திட்டம், புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய பவர் கிரீட் கார்ப்பரேஷன் சார்பில், நாட்டிலேயே முன்னோடித் திட்டமாக, "ஸ்மார்ட் கிரீட்' திட்டம், புதுச்சேரியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, இந்திய பவர் கிரீட் கார்ப்பரேஷன்-புதுச்சேரி அரசின் மின் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

"ஸ்மார்ட் கிரீட்' திட்டத்தின் கீழ், புதுச்சேரி நகரத்தில் உள்ள 87 ஆயிரம் வீடுகளிலும் "ஸ்மார்ட் மீட்டர்' எனப்படும், அதிநவீன மின்சார மீட்டர்களை பொருத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, சாரம் பகுதியில் 400 வீடுகளில், "ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்பட்டு விட்டது. படிப்படியாக, நகரம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் "ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்படும்.

அனைத்து மின் நுகர்வோர்களும், ஒரே நேரத்தில், அளவுக்கு அதிகமான மின்சாரத்தை பயன்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட பகுதியின் டிரான்ஸ்பார்மர்கள் "லோடு' தாங்க முடியாமல் சூடாகி, வெடித்து பழுதடைந்து விடுகின்றன.
உதாரணமாக, தற்போது கோடைக்காலம் என்பதால், மாலை மற்றும் இரவு நேரங்களில் அனைவரும் ஒரே நேரத்தில் "ஏசி' போடுகின்றனர். இதனால், மின்சார பயன்பாடு கிடுகிடுவென உயர்ந்து, பல ஆயிரம் யூனிட் மின்சாரம் தாறுமாறாக உறிஞ்சப்படுகிறது.

பிறக்குது விடிவுகாலம்

டிரான்ஸ்பார்மர் சூடாவதை தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட பகுதியில், அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என, மின் வினியோகத்தை மின்துறையினர் துண்டிக்கின்றனர். இதனால், பொதுமக்களுக்கு தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுகின்றன.
இந்த பிரச்னைக்கு, அனைத்து வீடுகளிலும் "ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்படும்போது, எளிதாக தீர்வு காண முடியும்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு, "ஓவர் லோடு' ஆக எடுக்கப்படும் மின்சாரத்தை மட்டும் துண்டித்துவிட முடியும். ஒட்டுமொத்தமாக, சம்பந்தப்பட்ட பகுதிக்கே மின் வினியோகத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மின் திருட்டுக்கு "செக்'

ஒவ்வொரு வீட்டுக்கும் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது, சிங்கிள் பேஸ், டபுள் பேஸ், ட்ரிபிள் பேஸ் உள்ளிட்ட எந்த வகையான இணைப்பு பெற்றுள்ளனர், அனுமதிக்கப்பட்ட அளவு மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துகின்றார்களா என்பதையும் கட்டுப்பாட்டு அறையின் கம்ப்யூட்டர் உதவியுடன் எளிதாக கண்காணிக்க முடியும்.
அளவுக்கு அதிகமான மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தினால், உடனே கண்டுபிடித்து, மின் இணைப்பை துண்டிக்க முடியும். மேலும், மீட்டரை நிறுத்திவிட்டு, மின்சாரத்தை திருடி பயன்படுத்தினாலும், உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு கடைசி தேதி முடிந்த, அடுத்த நிமிடமே, ஸ்மார்ட் மீட்டரில் இருந்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பறந்து விடும். உடனடியாக, கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே, சம்பந்தப்பட்ட வீட்டுக்கான மின்சார இணைப்பை துண்டிக்க முடியும்.
மின்துறை ஊழியர்கள், சம்பந்தப்பட்ட வீட்டை தேடி சென்று, பியூசை பிடுங்கி, ஒயரை துண்டித்து, மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது.

நன்றி-dinamalar

No comments: