Saturday, November 9, 2013

மற்றுமோர் அற்புதப்பதிப்பு....

சிருஷ்டியின் இரகசியமும், ஸ்ட்ரிங் தியரியும் (பகுதி 1) ஸ்ட்ரிங்க் தியரி பற்றி கொஞ்சம் அடிப்படையாக ஒரு கட்டுரை எழுதினேன். கொஞ்சம் நீளம் அதிகம்தான். விருப்பினால் படியுங்கள். இது பிடித்தது என்று நீங்கள் சொல்லும் பட்சத்தில், இதன் இரண்டாம் பகுதியைப் பதிகிறேன். எப்போழுதாவது நீங்கள் இதை யோசித்தது உண்டா? மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் கிலோமீட்டர்களுக்கு (384,403 km) அப்பால் இருக்கும் சந்திரனைத் தனது ஈர்ப்பு விசையால் பூமி இழுத்துவைத்துக் கொண்டிருக்கிறது அல்லவா? இவ்வளவு தூரத்தில் இருக்கும், பெரிய அளவுள்ள சந்திரனைப் பூமி கவர்ந்து வைத்திருக்க வேண்டுமென்றால், அந்த ஈர்ப்பு சக்தி எவ்வளவு வலிமையுள்ளதாக இருக்க வேண்டும் சொல்லுங்கள்? அதுமட்டுமில்லாமல், பூமியில் இருக்கும் எதையுமே தன்னை விட்டுப் பிரிந்து போகாமல் கவர்ந்து வைத்திருக்கிறது புவியீர்ப்பு விசை. பாரசூட்டின் உதவியுடன் ஒருவர் கீழே குதித்தால், பூமி தன்னை எந்த அளவுக்கு இழுக்கிறது என்பதை நன்றாக அறிந்து கொள்வார். அவ்வளவு மிகையான வலுவுடையது ஈர்ப்பு விசை (Gravitational Force) என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். ஆனால், உண்மை அதுவல்ல. தரையில் கிடக்கும் பந்தைத் தனது கையால் எந்த ஒரு சிரமமுமில்லாமல் ஒரு குழந்தை தூக்குகிறது. பூமி, தனது ஈர்ப்பு விசையால் பந்தைத் தரையில் இழுத்து வைத்திருக்கிறது அல்லவா? அந்த ஈர்ப்புவிசை பந்தை இழுத்து வைக்காவிட்டால், பந்து தரையில் நிற்காமல் மேலே பறந்து போய்விடுமல்லவா? இது போலத்தானே, நியூட்டனும் அப்பிள் மரத்திலிருந்து அப்பிள் பழங்கள் ஏன் மேலே பறந்து போகாமல் கீழே விழுகின்றன என்று சிந்தித்து ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். சந்திரனையே இழுத்துவைத்திருக்கும் அளவுக்குப் பெரிய விசையைக் கொண்ட அதே புவியின் ஈர்ப்பு விசைதானே, பந்தையும் இழுத்து வைத்திருக்கிறது. ஆனால், ஒரு குழந்தையால் ஈர்ப்பு விசையை எதிர்த்துப் பந்தைச் சுலபமாகத் தூக்கக் கூடியதாக இருக்கிறது அல்லவா? இப்போது ஈர்ப்பு விசையென்பது மிகமிக வலிமை குறைந்த ஒன்றாக அல்லவா தெரிகிறது? எங்கோ குழப்பமாக இருக்கிறதல்லவா? ஒருபுறம் அதிக வலிமையானதாக இருக்கும் ஈர்ப்புவிசை, இன்னொருபுறம் மிக மோசமான அளவுக்கு வலிமை குறைந்ததாக இருக்கிறது. இது எப்படிச் சாத்தியம்? விஞ்ஞானிகள் 'தலையால் மண்கிண்டி நீர் எடுக்கும்' பிரயத்தனமாக இவ்வளவு காலமும் இந்தக் கேள்விக்கு இருட்டிலேயே பதிலைத் தேடிக் கொண்டிருந்தனர். இப்பொழுதுதான் வெளிச்சம் மெல்லத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிய போதுதான், எப்பொழுதும் மோதிக் கொள்ளும் ஆன்மீகமும், அறிவியலும் இணைந்து ஒரு புள்ளியில் ஒடுங்கும் நிலைக்கு வருவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். இதைப் பற்றி விபரமாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமும் கூட. அறிவியலும், ஆன்மீகமும் தமக்கென வேறு வேறான பாதைகளைக் கொண்டவை. இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. ஆன்மீகம் இயங்கும் தளத்தில் அறிவியலும், அறிவியல் இயங்கும் தளத்தில் ஆன்மீகமும் இயங்குவதில்லை. இயற்பியல் விதிகள், தர்க்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தளத்தில் அறிவியலும், நம்பிக்கை என்னும் தளத்தில் ஆன்மீகமும் இயங்குகின்றன. ஆனால் இவை இரண்டுமே சமயங்களில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. ஆன்மீகம் அறிவியலின் தளத்திற்கோ, அறிவியல் ஆன்மீகத்தின் தளத்திற்கோ நுழைய முற்படும் போது இந்த மோதல்கள் ஏற்படுகின்றன. சூரியன், பூமியைச் சுற்றுகின்றது என்று நம்பிக்கையை முன்வைத்து மதங்களால் கருத்துச் சொல்லப்பட்ட போது, கோபெர்னிகஸ் (Nocolaus Copernicus) அதை மறுத்து, சூரியனைத்தான் பூமி சுற்றுகின்றது என்று கூறியதில் ஆரம்பித்து, கலிலியோ, டார்வின் என இந்த மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. இவை படிப்படியாக அதிகரித்து, 'பிக் பாங்க்' (Big Bang) என்று சொல்லப்படும் அண்டத்தின் பெருவெடிப்பு வரை வந்திருக்கின்றது. அண்டத்தின் (Universe) தோற்றம், ஒரு மிகச்சிறிய புள்ளி பெரிதாக வெடித்ததால் ஏற்பட்டது என்று சொல்வதை மதங்களும் ஆன்மீகமும் இன்றுவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றன. இதை ஏற்றுக் கொண்டால் வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளுக்கு எதிராக நடந்து கொள்வதாகிவிடும். 'கடவுள் வானத்தையும், பூமியையும் படைத்தார். பூமி வெறுமையுமாகவும், இருளுமாகவும் இருந்தது. கடவுள் ஒளி உண்டாகட்டும் என்றார். வெளிச்சம் உருவாகியது. பின்னர் ஜீவராசிகளையும், மனிதனையும் உருவாக்கினார்'. பூமியும், அண்டமும், மனிதனும் உருவாகிய விதத்தை வேத நூல்கள் இப்படித்தான் சொல்கின்றன. இந்தக் கருத்தையே உலகில் உள்ள அனைத்து ஆன்மீகவாதிகளும் நம்புகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரு பொதுமைக் கருத்தாக இது முதன்மை வகிக்கிறது. ஆனால், குறுகிய காலத்தில் மிகப் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்த அறிவியல், இந்தக் கருத்துக்கு எதிராகத் திடீரென ஒரு முட்டுக்கட்டையைப் போட்டுக் கொண்டது. 'பூமியோ, சூரியனோ, அண்டமோ கடவுளால் உருவாக்கப்பட்டவை அல்ல. சிறு புள்ளியாக இருந்த ஒரு பருப்பொருள், தவிர்க்க முடியாத ஒரு கணத்தில் பெருவெடிப்பாக (Big Bang) வெடித்ததன் மூலம் உருவாகியதுதான் அண்டம், சூரியன், பூமி எல்லாமே என்று நவீன அறிவியல் கூறியது. அண்டத்தைப் படைத்தது கடவுள்தான் என்று சொல்லும் ஆன்மீகத்தின் முன்னால், இந்தக் கருத்து மிகப்பெரிய தடைக் கல்லாக வந்து விழுந்தது. மதங்களின் வேத நூல்களில் சொல்லப்பட்டவைகளை, இந்தக் கருத்து மறுக்கின்றது என்ற அளவில், இதற்கு என்ன பதில் சொல்வது என்று மதங்கள் திகைத்தாலும் விரைவில் சுதாரித்துக் கொண்டன. அறிவியல் சொல்லிய இந்தக் கருத்துக்கு எதிரான, மிகச் சரியான ஒரு வாதத்தை மதங்களும் முன்வைத்தன. அந்த வாதம், அறிவியலுக்கு மிகப்பெரிய அடியாக விழுந்தது. 'மிகச் சிறிய ஒரு பருப்பொருள் பெரிதாக வெடித்ததனால் இந்த அண்டம் தோன்றியது என்றால், அந்த மிகச் சிறிய பருப்பொருளை உருவாக்கியது யார்? ஒரு பொருள் உண்டு என்றால், அதைப் படைத்தவன் ஒருவன், அல்லது ஒரு சக்தி நிச்சயம் இருக்க வேண்டும் அல்லவா? ஆகவே அண்டத்தையே உருவாக்கும் அளவுள்ள சக்தி வாய்ந்த அந்தச் சிறிய பருப்பொருளையும் ஒருவர் படைத்திருக்க வேண்டும். அதைப் படைத்தவனை அல்லது ஒரு சக்தியைத்தான் நாம் கடவுள் என்கிறோம்' என்று மிக எளிமையாக, தனது வாதத்தை முன்வைத்தது ஆன்மீகம். இந்த வாதத்துடன் எல்லாமே முடிந்து போனது. மிகச் சரியானதும், யாரும் முறியடிக்க முடியாததுமான பதிலடியாக இது இருந்தது. சமீபத்தில் கூட, தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான ஒருவர், இலக்கியப் பாராட்டு விழாவொன்றில் இந்தக் கருத்தைக் கூறியுமிருந்தார். மறுக்கவே முடியாத இந்த வாதத்துக்கு அறிவியலால் முதலில் பதில் கூறவே முடியவில்லை. 'பிக் பாங்க்' பற்றிப் பேசும் போது, ஆன்மீகவாதிகளால் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அறிவியலாளர்கள் குழம்ப ஆரம்பித்தனர். ஆனால், இந்த குழப்பமும் சிலகாலம்தான் நீடித்தது. எந்தக் கேள்விக்கு அறிவியலால் பதில் கூற முடியாது என்று நம்பப்பட்டதோ, அதற்கு அறிவியல் ஒருநாள் பதில் கூறியது. தன்னை நிதானப்படுத்திக் கொண்ட அறிவியல், "அண்டம் உருவாகக் காரணமான 'மிகச் சிறிய பருப்பொருளை' யாராவது ஒருவர்தான் உருவாக்க வேண்டும், அது தானாக உருவாக முடியாது என்று சொல்வதையும், அதைக் கடவுள்தான் உருவாக்கினார் என்பதையும் உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால், இப்போது கடவுளை யார் உருவாக்கினார்கள் என்ற கேள்வி மிஞ்சுகிறதல்லவா? இந்தக் கேள்விக்கு, 'அப்படி இல்லை, கடவுளை யாரும் உருவாக்கவில்லை. கடவுளை யாரும் உருவாக்கவும் முடியாது. அவர் தானே தோன்றியவர்' என்று பதில் சொல்லப்பட்டால், அண்டம் உருவாகக் காரணமான பருப்பொருளும் ஏன் தானே தோன்றியிருக்க முடியாது?" என்று தனது எதிர் வாதத்தை முன்வைத்தது. இதற்கு மேல் இந்த விசயத்தில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கு தர்க்க ரீதியான பதிலாக அது இருந்தது. அறிவியலுக்கு எதிராக ஆன்மீகம் ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது. "நேற்று ஒன்றை உண்மையென்று அறிவியல் சொல்லிவிட்டு, இன்று வேறு ஒன்றை உண்மையென்று அதுவே மறுத்துச் சொல்கிறது. இன்று உண்மையென்று சொல்லப்படுபவையும் நாளை மறுக்கப்படாலாம். நாளை வேறு ஒன்று உண்மையாகலாம். எனவே அறிவியல் சொல்லும் எதுவும் நிரந்தர உண்மை கிடையாது" என்கிறது ஆன்மீகம். இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். ஆனால் அறிவியல், "இன்று இதுதான் உண்மையென்று தெரிந்துவிட்டால், நேற்றுச் சொன்னதை மறுத்து ஒதுக்க அறிவியல் தயாராக இருக்கிறது. ஆனால் மதம் அதற்கு எப்போதும் தயாராகவில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் எழுதியவற்றை இன்றும் உண்மை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறது. மதம் தன் கருத்துகளைக் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றத் தயங்குகிறது" என்று மதத்திற்கு எதிராக கேள்வியைத் திருப்பிக் கொள்கிறது. அத்துடன் அறிவியல் தன் முடிவுகளுக்கான தன்னிலை விளக்கம் ஒன்றையும் கொடுக்கிறது. "அறிவியல் தனது கண்டுபிடிப்புகளின் முடிவுகளைக் கோட்பாடுகள் (Theory), விதிகள் (Rule) என்ற இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. கோட்பாடுகள் எப்போதும் மாறக் கூடியவை. இன்று ஒரு கோட்பாடு உண்மையாக இருக்கும் போது, நாளை இன்னுமொரு கோட்பாடு வந்து அதை இடம் மாற்றும். ஆனால் விதிகள் அப்படியானவை அல்ல. விதிகள் எப்போதும் கணிதச் சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாண்மையான கணிதச் சமன்பாடுகள் மாற்றமில்லாதவை. என்றுமே உண்மையானவை. 1900 ஆண்டுகளுக்கு முன்னர் பைதகரஸினால் (Pythagoras) முன்வைக்கப்பட்ட கணிதச் சமன்பாடு இன்று கூட மாற்றமில்லாமல் இருப்பதை இதற்கு முக்கிய உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். எனவே கோட்பாடுகளாகச் சொல்லப்படும் அறிவியல் முடிவுகளை விடக் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு விதிகளாகச் சொல்லப்படும் முடிவுகளில் உண்மை முழுமையாக இருக்கும்". அறிவியல் கூறுவது போல, இயற்பியலாளர்களால் உருவாக்கப்பட்ட கணிதச் சமன்பாடு ஒன்றுதான் எதிரெதிராக மோதிக் கொண்டிருக்கும் அறிவியலையும், ஆன்மீகத்தையும் ஒரு புள்ளியில் ஒட்ட வைக்க முயற்சிக்கிறது. அதுதான், இன்று எல்லாராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படும் 'அதிர்விழைக் கோட்பாடு' (String Theory) ஆகும். நாம் ஸ்ட்ரிங்க் தியரிக்குள் நுழைவதற்கு முன் மிகத் தீவிரமான, சிக்கலான இயற்பியலுக்குள் நாம் காலடி வைக்க வேண்டும். புரிவதற்குச் சிரமமாக அவை இருந்தாலும், இன்றைய காலத்தில் அனைவருமே தெரிந்திருக்க வேண்டியவை. "சார்....! மூடி வைத்துவிட்டு எங்க போறீங்க? கொஞ்சம் நில்லுங்க........! நான் ஒன்றும் இயற்பியல் பாடம் எடுக்கப் போவதில்லை. நீங்கள் பயப்படவே தேவையில்லை. நான் என்னதான் சொல்கிறேன் என்று கொஞ்சம் அமைதியாகப் படித்துத்தான் பாருங்களேன்! இதுவரை இயற்பியல் பாடங்களாக இருந்த இவை இப்போது ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விசயங்களாக ஆகிக் கொண்டு வருகின்றன. அதனால் பொறுமையாக வாசியுங்க. சமீபத்தில் கூட 'கடவுள் துகள்' (Higgs Boson) கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இயற்பியல் சம்பவம், உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் பேசப்பட்ட ஒரு விசயமாகவில்லையா? அது போல இதையும் நினைச்சுக்கோங்க". நவீன விஞ்ஞானம் தனது வலது கையில் 'குவாண்டம்' (Quantum) என்னும் அணுக் கருவுக்குள் இருப்பவை பற்றிய ஆராய்ச்சியையும், இடது கையில் 'யூனிவேர்ஸ்' (Universe) என்னும் அண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியையும் வைத்துக் கொண்டு, இரண்டையும் எப்படி ஒன்றாக இணைப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கும் ஒரு கணித விதியை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற 'ஐன்ஸ்டைன்' (Einstein) கூடத் தனது இறுதி இருபது வருட காலங்களை அப்படி ஒரு கணிதச் சமன்பாட்டை உருவாக்கவே செலவிட்டார். எப்போதும் கையில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு அதைச் சிந்தித்துக் கொண்டிருப்பதே அவர் வேலையாயிற்று. இறுதியில் அப்படி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியாமலே அவர் இறக்கவும் நேரிட்டது. "கண்டுபிடிக்க முடியாத ஒரு கணிதச் சமன்பாட்டை அவர் ஏன் கண்டுபிடித்தே தீர வேண்டும் என நினைத்தார்? அப்படி ஒரு சமன்பாடே இல்லாமல் இருக்கலாம் அல்லவா?" என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஐன்ஸ்டைன் அப்படி நினைக்கவில்லை. "அணுக்களும், அண்டமும் 'பிக் பாங்க்' என்னும் வெடிப்பு நிகழும் கணத்திற்கு முன்னர் ஒன்றாக, ஒரே புள்ளியாக, சமப்படுத்தப்பட்ட நிலையில் இருந்திருக்கின்றன. அந்தக் கணத்தில் இந்தச் சக்திகள் எல்லாமே ஒன்றாக ஒரு கணித விதியின் கீழ் சேர்ந்து இருந்திருக்கின்றன. அதனால் அப்படி ஒரு கணிதச் சமன்பாடு நிச்சயம் இருந்தே தீர வேண்டும்" என்று நம்பினார். அந்தச் சமன்பாட்டைத்தான் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்' (Theory of Everything) என்பார்கள். பிணைக்கப்பட்டிருக்கின்றன. திட அணுக்கரு விசை (Strong Nuclear Force), திடமற்ற அணுக்கரு விசை (Weak Nuclear Force), மின்காந்த விசை (Electromagnetic Force), ஈர்ப்பு விசை (Gravitational Force) என்பவைதான் இந்த நான்கு அடிப்படை விசைகளுமாகும். இந்த நான்கு அடிப்படை விசைகளினாலேயே அணுக்கள், பூமி, சூரியன், நட்சத்திரங்கள், காலக்ஸிகள், கருந்துளைகள் என அண்டம் முழுவதுமே பிணைக்கப்பட்டிருக்கின்றன. 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், 'பிக் பாங்' என்னும் பெருவெடிப்பு நடந்தது. இந்தப் பெருவெடிப்பின் முன்னால் மிகச் சிறிய ஒரு புள்ளி போன்ற ஒன்றாகத்தான் அண்டம் இருந்திருக்கிறது. அண்டம் சிறியதாக இருந்த போது, மேலே குறிப்பிட்ட நான்கு விசைகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு, சமப்படுத்தபட்ட நிலையில் விசையற்று அமைதியாக இருந்திருக்கின்றன. ஆனால் ஏதோ ஒரு கணத்தில் அந்தப் பருப்பொருளில் இருந்து ஈர்ப்புவிசை முதலில் பிரிந்தது. அதைத் தொடர்ந்து திட அணுக்கரு விசையும் அதிலிருந்து விலகியது. அதனால் ஏற்பட்ட உந்தலினால் பாரிய வெடிப்பு நிகழ்ந்தது. வெடிப்பினால் 'வெளி' (Space) உருவாகப் போகும் கணத்தில் ஆறு விதமான குவார்க்குகள் (Quarks) உருவாகின. அதைத் தொடர்ந்து, திடமற்ற அணுக்கரு விசையும், மின்காந்த விசையும் பிரிந்தன. இப்போது அடிப்படையான நான்கு விசைகளும் தனித்தனியாகப் பிரிந்து நின்றன. இந்தக் கணத்தில் ஆறு விதமான லெப்டான்கள் (Leptons) உருவாகின. ஆறு விதமான குவார்க்களில் மேல்குவார்க் (Up Quark), கீழ்க்குவார்க் (Down Quark) ஆகிய இரண்டும் சேர்ந்து ப்ரோட்டான்களையும், நியூட்ரான்களையும் உருவாக்கின. அண்டம் மிகப் பெரியதாக விரிவடைந்தது. இவையெல்லாம் ஒரு செக்கனுக்குள் நடந்து முடிந்தது. அண்டமும் பாரிய வடிவில் உருவெடுத்தது. 'பிக் பாங்க்' பெருவெடிப்பின் அடுத்த கட்ட நிலையில் தோன்றியவை குவார்க்குளும். லெப்டான்களும்தான். இவற்றின் பெயர்களைப் பார்த்து நீங்கள் ஒன்றும் பயப்படத் தேவையில்லை. அணு ஒன்றைப் பிரித்துக் கொண்டு போகும்போது, அதனுள் காணப்படும் உப அணுத்துகள்கள்தான் (Subatomic Particles) இவை. அண்டம் தோன்றும் போது எவை உருவாகியனவோ, அவைதான் அணுவுக்குள்ளும் இருக்கின்றன. அணு என்பதைப் பிரிக்க முடியாது என்னும் கருத்து ஆரம்பத்தில் விஞ்ஞானிகளிடையே இருந்திருக்கிறது. ஆனால் இலத்திரன், புரோட்டான், நியூட்ரான் என்று அது பிரிக்கப்பட்டது. தொடர்ந்து நியூட்ரானும், புரோட்டானும் பிரிக்கப்பட்டன. அப்படிப் பிரித்துப் பார்த்த போது, அவை இரண்டுக்குள்ளும் இருந்தவை ஒரேவிதமான குவார்க்குகள் மட்டும்தான். அதாவது பூமியில் உள்ள அனைத்துமே குவார்க்குகளால் உருவானவைதான். இந்த நிலையில் நான்கு அடிப்படை விசைகளையும் இணைத்து ஒரே சமன்பாட்டில் கொண்டுவர முடியும் என்ற சிந்தனை உருவாகியது. ஆனால் கொண்டுவர முடியயாமல் போயிற்று. ஐன்ஸ்டைனில் ஆரம்பித்த இந்தத் தேடல் அதற்கு அப்புறம் அனைத்து இயற்பியலாளர்களையும் ஆட்டிப்படைத்தது. இதைக் கண்டுபிடிப்பதே தங்கள் நோக்கம், தங்கள் வாழ்வு என்று பலர் பாடுபட்டார்கள். ஒரு வகையில் இந்தக் கணிதச் சமன்பாடு சிருஷ்டியின் ஆரம்ப முடிச்சு என்றே சொல்லலாம். இதைக் கண்டுபிடித்துவிட்டால், அண்டத்தின் சிருஷ்டி இரகசியம் மொத்தமாகப் புரிந்துவிடும். இந்த நிலையில் மின்காந்த விசையையும், திடமற்ற அணுக்கரு விசையையும் ஒன்றாக இணைத்து மூன்று இயற்பியலாளர்கள் சாதனை செய்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் சலாம் (Abdul Salam), ஷெல்டன் கிளாஸ்கோவ் (Sheldon Glashow), ஸ்டீபன் வைன்பேர்க் (Steven Weinberg) ஆகிய மூவருக்கும் இதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது இயற்பியலாளர்களிடையே ஒரு நம்பிக்கையையும் உருவாக்கியது. அதனால் தொடர்ந்து கடுமையாக முயற்சித்தனர். ஆனால் ஏதோ ஒரு தவறு நேர்ந்து கொண்டே இருந்தது. ஈர்ப்பு விசையை மற்ற விசைகளுடன் இணைக்க முடியாமல் இருந்தது. அப்போதுதான், ஈர்ப்பு விசையையின் வலிமை, வலிமையற்ற தண்மைகள் பற்றிய சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. ஒரு வகையில் பார்த்தால் இந்த அண்டத்தில் உள்ள எல்லாமே ஈர்ப்பு விசையினால் ஒன்றையொன்று கவர்ந்தபடியே இருக்கின்றன. மிகவும் வலிமையான சக்தியாக அது இருக்க வேண்டிய நிலையில், வலிமையற்றதாகக் காணப்படுகிறது. அண்டத்தில் உள்ள வெற்றிடமெங்கும் இந்த ஈர்ப்பு விசை பரவியிருக்கிறது. 150 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் பூமியைத் தனது ஈர்ப்பு விசையினாலேயே இழுத்து வைத்துக் கொண்டிருக்கிறது சூரியன். சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் இருப்பதெல்லாமே மிகப்பெரிய வெற்றிடம். இந்த வெற்றிடத்தினூடாக எப்படிப் பூமியைச் சூரியன் இழுக்கிறது? எதைக் கொண்டு இழுக்கிறது? இழுக்கப் பயன்படுவது எதுவானாலும், அது பூமியில் இருந்து சூரியன் வரை 150 மில்லியன் கிலோமீட்டர்களுக்கு அண்ட வெளியெங்கும் நிறைந்திருக்க வேண்டுமல்லவா? அதைத்தான் கிராவிட்டான்கள் (Graviton) என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். இந்த கிராவிட்டான் என்பது ஒரு போஸான் (Boson) வகையைச் சேர்ந்தது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஹிக்ஸ் போஸான்' போல என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிராவிட்டானின் ஏதோ ஒரு செயல்பாட்டினால்தான், விசைகளை ஒன்றாக்கும் சமன்பாடு சாத்தியமாகவில்லை என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால் நவீன இயற்பியல், கிராவிட்டானின் இயக்கம் வயலினில் அல்லது கிட்டாரில் இருக்கும் அதிர்விழையில் (Strings) ஏற்படுத்தும் அதிர்வுகளின் தொழிற்பாடு போன்றதாக இருக்கிறது என்று கண்டுபிடித்தது. இந்த அதிர்விழைத் தண்மையினால், கிராவிட்டான்கள் இடம்விட்டு இடம் நகர்வதாலேயே வலிமையற்றதண்மை ஏற்படுகிறது என்ற முடிவுக்கும் வந்தது. விஞ்ஞானிகளின் இந்த முடிவுகள் எல்லாம் ஏதோ ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை. முழுமையான கணிதக் கணிப்பீடுகளை வைத்தே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. கணித முடிவுகள் என்றுமே மாறாதவை. அணுக்கருவுக்குள் இருக்கும் நியூட்ரான், புரோட்டான் இரண்டையும் பிரித்துப் பார்த்த போது அவற்றினுள் ஒரே விதமான குவார்க்குகள் இருந்தன அல்லவா? நவீன இயற்பியலில், குவார்க்குகளுக்குள் என்ன இருக்கும் என்று ஆராய்ந்த போது கிடைத்த முடிவுகள் ஆச்சரியமானவை. குவார்க்குகளுக்குள்ளும் கிராவிட்டான் போல, மிகமிகச் சிறிய அதிர்விழைகள் (Strings) அதிர்ந்து கொண்டிருந்தது புரிந்தது. அதாவது அணுவைக் கடைசி வரை பிரித்து இறுதியில் அதனுள் என்ன இருக்கிறதென்று பார்த்தால் அங்கு ஒன்றுமே இல்லை. அங்கு இருப்பது எல்லாம் இசை மட்டும்தான். நூண்ணிய இழைகள் அதிர்வதினால் ஏற்படும் இசை மட்டுமே அங்கு காணப்படுகிறது. நான், நீங்கள், கல், நாற்காலி என அனைத்துமே இசையினால் உருவாக்கப்பட்டவர்கள். என்ன நம்புவதற்கு கடினமாக இருக்கிறதா? ஆனால் இது உண்மை. அணுவுக்குள் இருக்கும் உப அணுத்துகள்கள் கூட இந்த அதிர்விழைகளாகத் துடித்துக் கொண்டிருக்கின்றன. அண்டம் முழுவதும் பரவியிருக்கும் கிராவிட்டான்களும் அதிர்விழைகளாய் துடித்துக் கொண்டிருக்கின்றன. அதாவது எங்கும் இசை. எங்கும் நாதம். 'அண்டத்தில் இருப்பது பிண்டத்தில்' என்று சொல்வது போல, அணுமுதல் அண்டம் வரை இசையின் இராச்சியம் நடந்து கொண்டிருக்கிறது. நமது ஒட்டு மொத்த அண்டமும் ஓயாத ஒரு சிம்பனி (Symphony) போல முழங்கிக் கொண்டிருக்கிறது. "நாத விந்து கலாதி நமோ நம" என்ற அருணகிரிநாதரின் திருப்புகழ் ஞாபகம் வருகிறதல்லவா? தாள லயத்துடன் சிவனால் ஆடப்படும் நடனம்தான் இந்தப் பிரபஞ்சம் என்ற கருத்து நம்மிடையே உள்ளதல்லவா? 'ஓம்' என்னும் ரீங்காரத்தில்தான் பிரபஞ்சமே இயங்குகிறது என்று ஆன்மீகம் சொல்கிறது அல்லவா? இவையெல்லாமே இங்கு சரியாக பொருந்துகின்றன. அது மட்டுமில்லை, "ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது" என்று பைபிள் சொல்கிறதும் அதுவும் இங்கு பொருந்துகிறது. வார்த்தை என்பதும் ஒலிதானே! அண்டம் இசையினால் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு அறிவியல் வந்துவிட்டது. இதை ஆன்மீகம் எப்போதோ சொல்லியிருக்கிறது. அறிவியல், ஆன்மீகம் இரண்டும் இந்தப் புள்ளியில் ஒன்றாகச் சந்திக்கின்றன. அறிவியலின் உச்சியில் இருந்த நம் முன்னோர்கள் இவற்றையெல்லாம் எப்படியோ அறிந்து கொண்டு அவற்றை ஆன்மீகத்தினூடாக நமக்கு விளக்க்க முயற்சித்தும் இருக்கலாம். அணு முதல் அண்டம் வரையுள்ள எல்லாமே அதிர்விழைகளால் (Strings) உருவாக்கபட்டன என்பதை மையமாக வைத்து ஸ்ட்ரிங்க் தியரி என்னும் புதிய கோட்பாடு உருவாகியது. அந்தக் கோட்பாட்டின் மூலம் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்க்' என்னும் கணிதச் சமன்பாட்டை தீர்க்க முயன்ற போது எல்லாமே சுலபமாகப் பொருந்தின. சரிசெய்யவே முடியாது என்று நினைத்த சமன்பாட்டை இதன் மூலம் சரிசெய்ய முடிந்தது. இயற்பியலாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். ஸ்ட்ரிங்ஸை அடிப்படையாக வைத்து கணிதச் சமன்பாடு ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே அனைத்து விசைகளையும் ஒன்றிணைக்கும் சமன்பாடு என்ற முடிவுக்கும் வந்தனர். அந்த வேளையில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஸ்ட்ரிங்க் தியரியை வைத்து இன்னுமொரு கணிதச் சமன்பாடு உருவாகியது. அதன் பின்னர் இன்னுமொன்று. இப்படிப் படிப்படியாக ஐந்து சமன்பாடுகள் ஸ்ட்ரிங்க் தியரியால் உருவாக்கப்பட்டன. எல்லாமே சரியான சமன்பாடுகள்தான். அனைத்தும் நான்கு அடிப்படை விசைகளை இணைத்து உருவாக்கப்பட்டவைதான். இப்போது இயற்பியலாளர்கள் குழம்ப ஆரம்பித்தனர். கணித முடிவு என்றாலே, அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஒரு சிக்கலுக்கு எப்படி ஐந்து தீர்வுகள் இருக்க முடியும்? இருந்தால் ஒரேயொரு கணிதச் சமன்பாடு மட்டும்தான் இருக்க முடியும். உண்மை என்பது ஒன்றுக்கு மட்டும்தான் சாத்தியமானது. இப்படி ஐந்து சமன்பாடுகள் எப்படிச் சாத்தியம் என்று குழம்பிப் போனார்கள். இந்த ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளைக் கண்டுபிடித்தவர்களில் அசோக் சென் (Ashoke Sen) என்னும் கல்கத்தாக்காரரும் ஒருவர். ஒரு உண்மைக்கு ஐந்து தீர்வுகள் இருக்க முடியாது என்னும் அடிப்படையில் இந்தச் சிக்கல்களுக்கும் 'எம் தியரி' (M Theory) என்னும் பெயரில் ஒரு முடிவு வந்தது. கிராவிட்டான்கள் மூலம் கிடைக்கும் ஈர்ப்பு விசை பெரிதாக இருந்தாலும் ஏன் இவ்வளவு வலுவற்றதாக இருக்கிறது என்ற சிந்தனை மூலம் இந்த 'எம் தியரி' பிறந்தது. 'எம் தியரி' மூலம், உருவாக்கப்பட்ட ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளும் வேறு வேறல்ல, எல்லாமே ஒன்றுதான் என்று நிரூபிக்கப்பட்டது. இறுதியாக ஒரே ஒரு கணிதச் சமன்பாடுதான் உண்மை என்ற முடிவும் கிடைத்தது. இந்த முடிவுகளுக்கு எப்படி இயற்பியலாளர்கள் வந்தார்கள்? ஏன் ஐந்து விதமான ஸ்ட்ரிங் தியரிகள் உருவாகின என்று பார்க்கப் போனால், பாரலல் யூனிவேர்ஸ் (Parallel Universe), மல்டிவேர்ஸ் (Multiverse), பல்பரிமாணங்கள் (Multidimensions), மெம்பிரான் (Membrane) என்று மிக நவீன இயற்பியலுக்குள் நான் செல்ல வேண்டும். இந்தக் கட்டுரையின் நீளம் கருதி அவற்றை இங்கு சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். உயிர்மை ஆசியர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் இன்னுமொரு முழுமையான கட்டுரையாக இவற்றை நான் உங்களுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம். -Raj Siva

No comments: