Saturday, November 9, 2013

மிக மிக மிக அருமையான பதிவு.... இப்போதுதான் விஞ்ஞானம் சரியான பாதையில் பயனிப்பதாக நான் எண்ணுகிறேன்...

இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா? (எம் தியரி, பல்பரிமாணங்கள்) -ராஜ்சிவா

20ம் நூற்றாண்டில் நம்பவே முடியாத அறிவியல் விதிகளை வெளியிட்டு, உலகையே நிமிர்ந்து உட்கார வைத்தவர் அல்பேர்ட் ஐன்ஸ்டைன். சாத்தியமே இல்லை என்று நினைக்கும் பல இயற்பியல், கணிதக் கோட்பாடுகளை அவர் வெளியிட, திகைத்துப் போனது உலகம். நேரம் (Time) ஒரு வெளியில் (Space) இயங்கும் போது சுருங்குகிறது என்றும், ஒளியானது ஈர்ப்பு விசையினால் வளைகிறது என்றும் ஆச்சரியமான இயற்பியல் கோட்பாடுகளை ஐன்ஸ்டைன் சொன்னார். இவற்றை எல்லாம் பின்னர் பரீட்சித்துப் பார்த்த போது உண்மை என்று தெரிய வந்தது. ஐன்ஸ்டைன் மேல் அதீத நம்பிக்கையும், மரியாதையும் உலகெங்கும் உருவாகியது. இவர் சொன்னவை எதுவுமே தப்பாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு சக விஞ்ஞானிகள் வர ஆரம்பித்தனர். ஐன்ஸ்டைன் வெளியிட்ட வேறொரு கோட்பாடுதான் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்' (Theory of everything) என்பதாகும். அதாவது, பெரிதாக விரிந்திருக்கும் அண்டத்திற்கும், சிறிதாக இருக்கும் அணுவுக்கும் அடிப்படையாக இருக்கும் விசைகள் (forces) அனைத்தும் ஒரே கணிதச் சமன்பாட்டில் அடங்கும் என்று அந்த விதி சொன்னது. ஐன்ஸ்டைன் உயிருடன் இருக்கும் வரை அப்படி ஒரு சமன்பாட்டை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் ஐன்ஸ்டைனில் இருக்கும் நம்பிக்கையினால், அப்படி ஒரு கணிதச் சமன்பாடு நிச்சயம் இருக்குமென, அந்தக் கணிதச் சமன்பாட்டைத் தேடிப் புறப்பட்டனர் இளம் நவீன இயற்பியலாளர்கள். 


இறுதியாக அந்தச் சமன்பாட்டை நவீன இயற்பியலாளர்கள் கண்டும் பிடித்தனர். ஆனால், ஒரு சமன்பாடு மட்டுமே இருக்க வேண்டிய நிலையில், ஐந்து சமன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கணிதச் சமன்பாடுகள் பெரும்பாலும் ஒரு மாறாத விதிக்கு (Law) உட்பட்டே அமைகின்றன. ஒரு விதிக்கு உட்பட்டு அமையும் கணிதச் சமன்பாடு, எந்தக் காலத்துக்கும் மாறாமல் உண்மையானதாக இருக்கும். உண்மை எப்போதும் ஒன்று என்பதால், ஒரு விதிக்கு எப்போதும் ஒரு கணிதச் சமன்பாடே இருக்க முடியும். ஆனால் இங்கு ஐந்து சமன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் குழப்பமே அதிகரித்தது. காரணம் அந்த ஐந்து சமன்பாடுகளும் சரியானதாக இருந்தன. கண்டுபிடிக்கவே முடியாது என்று நம்பிய 'தியரி ஆஃப் எவ்ரிதிங்' என்னும் கோட்பாட்டிற்கு முடிவு கிடைத்தாலும், அந்த முடிவில் ஒரு குழப்பம் இருந்தது. ஒரு சமன்பாட்டைத் தேடிப் போகும் போது, கிடைத்ததோ ஐந்து சமன்பாடுகள். அந்தச் சமன்பாடுகளின் அடிப்படைக் கோட்பாட்டின் பெயர்தான் 'ஸ்ட்ரிங் தியரி' (String Theory) என்பதாகும். அதாவது அணுவுக்குள் இருக்கும் துகள்களைப் பிரித்துப் பார்த்தால், அங்கே இறுதியாகக் காணப்படுவது 'அதிர்ந்து கொண்டிருக்கும் நுண்ணிய இழைகள்தான்' என்கிறது ஸ்ட்ரிங் தியரி. அத்துடன் அணு முதல் அண்டம் வரை எங்கும் அதிரும் இழைகளே பரவியிருக்கின்றன என்றும் சொல்கிறது ஸ்ட்ரிங் தியரி. 

இதுவரை நாம் டிசம்பர் மாத உயிர்மை இதழில் பார்த்திருந்தோம். இந்தச் சிக்கலை விஞ்ஞானிகள் எப்படி எதிர் கொண்டார்கள்? அதன் மூலமாக அவர்கள் கண்டுகொண்ட புதிய முடிவுகள் என்ன? என்பவற்றைத்தான் நாம் இப்போது விரிவாகப் பார்க்கப் போகின்றோம். ஸ்ட்ரிங் தியரியின் சிக்கல் முடிச்சு அவிழ்க்கப்பட்ட போது, நமக்குக் கிடைத்த அனைத்துமே பிரமிப்பூட்டும் ஆச்சரியங்கள்தான். நம்பவே முடியாத கோட்பாடுகள் அவை. நமது அடிப்படை நம்பிக்கைகளைக் கூட அசைத்துப் பார்க்கும் முடிவுகளாக அவை இருந்தன. 'எம் தியரி' (M Theory), பல்பரிமாணங்கள் (Multi dimensions), மெம்பிரான் (Membrane), பாரலல் யூனிவேர்ஸ் (Parallel Universe), மல்டிவேர்ஸ் (Multiverse) எனப் புதிய பிரமிப்பூட்டும் ஆச்சரியங்களாக அவை இருந்தன. அவை எல்லாவற்றையும், ஒவ்வொன்றாக முடிந்த அளவுக்கு நாம் நாம் பார்க்கலாம்.

பிக் பாங்க் வெரு வெடிப்பினால் உருவான 'யூனிவேர்ஸ்' என்று அழைக்கப்படும் அண்டத்தில், பில்லியன் பில்லியன் அளவில் காலக்ஸிகளும், நெபுலாக்கள் என்றழைக்கப்படும் தூசுப்படலமும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஈர்ப்பு விசையினால் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அண்டம் முழுவதும் பரவியிருக்கின்றன. ஈர்ப்பு விசை ஏற்படுவதே கிராவிட்டான்கள் (Graviton) என்னும் துகள்கள் மூலம்தான். அதனால் இந்த கிராவிட்டான்கள் பிரபஞ்ச விண்வெளியெங்கும் பரவி, ஈர்ப்புவிசையாக மாறி இருக்கின்றன. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளும், துகள்களும் மட்டுமில்லாமல் கிராவிட்டான்களும் கூட அதிர்விழைகளாகவே (Strings) அதிர்ந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் அடிக்கடி பார்க்கும் 'ரப்பர் பாண்ட்' (Rubber Band) எப்படி இருக்குமோ, அதேபோல மிக மிக நுண்ணிய வடிவத்தில் இந்த அதிர்விழைகள் காணப்படும். ஒரு ரப்பர் பாண்ட் வட்ட வடிவமாகவும் இருக்கும். அதே நேரத்தில் இடையில் அறுத்து விட்டால் இரண்டு நுனிகளையுடைய ஒரு நேரான வடிவத்திலும் இருக்குமல்லவா? அது போல, இந்த அதிர்விழைகளும் 'மூடிய இழை' (Closed String), 'திறந்த இழை' (Open String) என இரண்டு விதமான வடிவங்களில் காணப்படுகின்றன. கிராவிட்டான்கள் மூடிய வட்டவடிவமான அதிர்விழைகளாகவும், ஏனைய அனைத்தும் திறந்த அதிர்விழைகளாகவும் இருக்கின்றன. 

இந்த ஸ்ட்ரிங்குகளை (அதிர்விழைகளை) மையமாக வைத்து உருவாகியதுதான் ஸ்ட்ரிங் தியரியாகும். ஆனால் உருவாகியதோ ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளாகும். அந்த ஐந்து தியரிகளுமே உண்மையானவை. தப்பே இல்லாதவை. இங்குதான் குழப்பம் ஏற்பட்டது. இந்த இடத்தில் ஏதோ தப்பு நடக்கின்றது என்பதை நவீன இயற்பியலாளர்கள் நன்றாகப் புரிந்து கொண்டனர். இறுதியில் அந்தத் தப்பும் என்னவென்று கண்டுபிடிக்கப்பட்டது. எட்வார்ட் விட்டன் (Edward Witten) என்பவர் 1990 இல் இந்த ஐந்து சமன்பாடுகளையும் ஒன்று சேர்த்துப் புரட்சிகரமான கோட்பாடொன்றை வெளியிட்டார். அவர் கூறிய கோட்பாடு 'எம் தியரி' (M theiry) என்ற பெயரையும் பெற்றுக் கொண்டது. ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளுக்கும் பொதுவாக ஒரே சமன்பாட்டுடன் அந்த எம் தியரியும் உருவாக்கப்பட்டது. 

விட்டன் வெளியிட்ட 'எம் தியரி' சொல்வது இதுதான். "இதுவரை நாம் அண்டத்தில் மூன்று பரிமாணங்கள் உள்ளதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனுடன் ஐன்ஸ்டைன் கூறிய ஸ்பேஸ்டைம் (Spacetime) நான்காவது பரிமாணமாகிறது. அத்துடன் பரிமாணங்கள் நின்றுவிடவில்லை. இவை தவிர்ந்து மேலும் ஆறு பரிமாணங்கள் உள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளும் ஒவ்வொரு பரிமாணத்துக்கும் உரியவை. ஆறாவது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஐந்து ஸ்ட்ரிங்க் தியரிகள் இருப்பதற்கும், அவை உண்மையான சமன்பாடுகளாக இருப்பதற்கும் இதுதான் காரணம். ஒன்றை ஒன்று பிரதிபலிக்கக் கூடிய விம்பங்கள் போன்றவைதான் இந்தப் பரிமாணங்கள். மொத்தமாக பத்துப் பரிமாணங்கள் உள்ளன."

நாம் வாழும் பூமியிலும், அண்டத்திலும் முன்பின், இடம்வலம், மேல்கீழ் என்ற மூன்று பரிமாணங்கள் இருக்கின்றன என்பதை மட்டுமே நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. அதற்கு மேல் நான்காவதாக இன்னுமொரு பரிமாணம் உள்ளதென்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் மொத்தமாக 10 பரிமாணங்கள் இருக்கின்றன என்று எம் தியரி சொல்கிறது. அவற்றை எப்படி நம்மால் நினைத்துப் பார்க்க முடியும்? நவீன இயற்பியல் இந்த முடிவை ஏனோதானோவென்று ஒரு கட்டுக்கதையாகச் சொல்லிவிடவில்லை. அனைத்தையும் கணித, இயற்பியல் சமன்பாடுகளுக்குள் உள்ளடக்கி, அறிவியல் ஆதாரச் சான்றுகளுடன், முழுமையான ஒரு கோட்பாடாகத்தான் சொல்கிறது. இந்த முடிவை உலகில் உள்ள எந்த ஒரு இயற்பியல் விஞ்ஞானியும் மறுத்ததில்லை. அனைவரும் இதைச் சரியென்றே ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். நவீன இயற்பியலின் இந்த ஆராய்ச்சிகளின் இறுதி முடிவாக சுப்பர் கிராவிட்டேசன் (Supergravitation) என்பதும் ஒரு பரிமாணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மொத்தமாக 11 டைமென்சன்கள் (பரிமாணங்கள்) அண்டத்தில் உண்டு என்ற முடிவு தீர்மானமாக எடுக்கப்பட்டது. 

பூமியில் வாழும் மனித இனத்தால் இடம்வலம், மேல்கீழ், முன்பின் என்ற மூன்று பரிமாணங்களூடாக மட்டுமே தற்சமயம் பிரயாணம் செய்ய முடியும். ஆனால் ஐன்ஸ்டைனின் சார்புவேகக் கோட்பாட்டின்படி, நான்காவது பரிமாணமான நேரத்தினூடாகவும் மனிதனால் பிரயாணம் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தற்சமயம் நேரத்தினூடாகப் பிரயாணம் செய்ய முடியாவிட்டாலும், அதற்கான சாத்தியக் கூறுகளை இப்போதும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இது தாண்டி ஐந்திலிருந்து பதினோராவது பரிமாணங்களுக்குள் மனிதன் பிரயாணம் செய்ய முடியுமா? முடியாதா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஆனால் இன்னுமொன்றையும் சொல்கிறது இயற்பியல். அனைத்துப் பரிமாணங்களும் ஒரு நுண்ணிய தோல் போன்ற ஒன்றினால் பிரிக்கப்பட்டு மிக மிக அருகில் காணப்படுகின்றன. இந்த மெல்லிய நுண்ணிய தோல் போன்ற ஒன்றைத்தான் பிரான் (Brane)அல்லது மெம்பிரான் (Membrane) என்கிறார்கள். இந்த மெம்பிரான் என்பதிலிருந்துதான் M Theory என்பதில் உள்ள M தோன்றியதாகவும் சொல்வார்கள். 

பரிமாணங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே காணப்படுகின்றன என்பதை வார்த்தைகளால் சொல்லும் போது, உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது. அதனால் இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு புள்ளியை ஊடறுத்துச் செல்லும் முன்பின் நேர்கோடு ஒரு பரிமாணம் ஆகும். அந்த நேர்கோட்டில் முன்னும் பின்னுமாக மட்டும் ஒரு உயிரினம் இயங்கினால், அது ஒரு பரிமாணத்தில் இயங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த ஒரு பரிமாண நேர்கோட்டிற்கு வலமாகவோ, இடமாகவோ ஒரு மில்லிமீட்டர் அளவிலாவது அந்த உயிரினம் நகர்ந்தால் அது இரண்டாம் பரிமாணம் என்றாகிவிடும். அதாவது முதலாவது பரிமாணத்தின் இடது பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ ஒரு மில்லிமீட்டருக்கு குறைவான இடத்திலேயே இரண்டாவது பரிமாணம் ஆரம்பமாகிவிடுகிறது. அதே போல, இந்த இரண்டு பரிமாணங்களுக்கு மேலாகவோ, கீழாகவோ ஒரு மில்லிமீட்டருக்குக் குறைவான உயரத்தில் மூன்றாவது பரிமாணம் ஆரம்பமாகிவிடுகிறது. இந்த மூன்று பரிமாணங்களும் மிகச் சிறிய இடைவெளியுடன் அருகருகே இருக்கின்றன. இது உங்களுக்குப் புரிகின்றதா? அதாவது முதல் மூன்று பரிமாணங்களும் மிக மிக மெல்லிய கோடொன்றினால்தான் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அது போலவே நான்காவது பரிமாணமும், ஐந்தாவது பரிமாணமும் அப்படியே பதினோராவது பரிமாணமும் ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே காணப்படுகின்றன. எல்லாமே நானோ மீட்டர் அளவு இடைவெளிகளில் காணப்படுகின்றன.

பரிமாணங்கள் பற்றி நான் சொல்வது உங்களுக்குப் புரிந்திருந்தால், இந்தப் பரிமாணங்கள் சம்மந்தமாக இனி நான் சொல்லப் போவதுதான் நீங்கள் எதிர்பார்க்காத, ஆச்சரியமான தகவல்களாக இருக்கும். இந்தத் தகவல்களை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் கூடப் போகலாம். இப்போது நான் சொல்லப் போவதே இந்தக் கட்டுரையின் தலைப்புக்கு அடிப்படையாகவும் அமைந்தது. இனி விசயத்துக்கு வருகிறேன்.

மூன்று உயிரினங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒன்று முன்பின்னாக நகரும் ஒரு பரிமாணத்தில் மட்டும் வாழும் ஒரு உயிரினம். மற்றது முன்பின், இடம்வலம் என்று தட்டையான இடத்தில் நகரக் கூடிய இரண்டு பரிமாணத்தில் வாழும் ஒரு எறும்பு. மூன்றாவது முன்பின், இடம்வலம், மேல்கீழ் என அனைத்திலும் நகரக் கூடிய முப்பரிமாணத்தில் வாழும் ஒரு மனிதன். ஒரு பரிமாணத்தில் வாழும் உயிரினத்தால், இடம்வலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எறும்பைக் காணவே முடியாது. எறும்பு இடம்வலமாக நகரும் போது, முன்பின்னாக நகரும் கோட்டை எப்போது வெட்டுகிறதோ, அப்போது மட்டும் அந்த உயிரினத்தால் அந்த எறும்பைக் காண முடியும். ஆனால் எறும்பினால் அந்த உயிரினத்தை எப்போதும் காண முடியும். இது போல, மூன்று பரிமாணத்தில் நகரக் கூடிய மனிதனால், இரண்டு பரிமாணத்தில் நகரும் எறும்பையும், அந்த உயிரினத்தையும் எப்போதும் காண முடியும், அவை இரண்டினாலும் மனிதனை முழுமையாகக் காணவே முடியாது.

மேலே நான் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால், இப்பொழுது நான் சொல்லப் போவதைச் சிந்தித்துப் பாருங்கள். பூமியிலோ, அண்டத்திலோ மொத்தமாக 11 பரிமாணங்கள் உள்ளன என்று அறிவியல் சொல்கின்றது அல்லவா? அப்படி 11 பரிமாணங்கள் இருக்கும் பட்சத்தில், அந்த ஒவ்வொரு பரிமாணங்களிலும் ஏன் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது? இரு பரிமாணத்தில் இயங்கும் எறும்புக்கு கழுகு என்ற ஒரு பறவை இருக்கிறது என்று சொன்னால் அதனால் அதை நம்பவே முடியாது. காரணம் கழுகு மூன்றாவது பரிமாணத்திலேயே எப்போதும் பறந்து கொண்டிருப்பது. அதுவாக இரண்டாம் பரிமாணத்தில் நுழைந்தால் மட்டுமே அப்படி ஒன்று உண்டு என்பதை எறும்பு நம்பும் அல்லவா? அது போல, நாமும் நான்காவது ஐந்தாவது ஆறாவது என இப்டியே...... பதினோராவது பரிமாணங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்று சொல்லும் போது, நம்பப் போவது இல்லை. அதிகம் ஏன் அதை நம்மால் கற்பனை கூடச் செய்ய முடியாது. ஆனால் கடந்து வந்த மனித வரலாற்றில், ஆவி போன்ற உருவங்களையும், பேய்கள் போன்ற உருவங்களையும், அரக்கர்கள் போன்ற உருவங்களையும், தேவர்கள் போன்ற உருவங்களையும், கடவுள் போன்ற உருவங்களையும் மனிதன் கண்டிருக்கிறான் என்று படித்திருக்கிறோம், அதை நம்புகிறோம். இவையெல்லாம் ஏன் கடவுளாகவும், பேய்களாகவும், அரக்கர்களாகவும் இல்லாமல் வெவ்வேறு டைமென்சன்களில் வாழும் உயிரினங்களாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு பரிமாணமும் அதிகரிக்க, அதில் வாழும் உயிரினத்தின் சக்தி அதிகமானதாக இருக்க வேண்டும் அல்லவா? ஒரு பரிமாணத்தில் வாழ்பவனை விட இரண்டு பரிமாணத்தில் வாழ்பவன் அதிக சக்தியுடையவனாகவும், அதைவிட மூன்றாவது பரிமாணத்தில் வாழ்பவன் அதிக சக்தியுடையவனாகவும், இப்படியே படிப்படியாக அதிகரித்து 11வது பரிமாணத்தில் வாழ்பவன் மிக அதியுயர் சக்தி வாய்ந்தவனாக இருப்பான் அல்லவா? அவனைத்தான் நாம் கடவுள் என்று சொல்கிறோமா?

கொஞ்சம் அமைதியாக இதை யோசனை செய்து பாருங்கள். கடவுள் என்றோ, தேவர்கள் என்றோ, அரக்கர்கள் என்றோ, பேய்கள் என்றோ, ஆவிகள் என்றோ நாம் நினைக்கும் எவையும் நம் கதைகளில் வருபவை போலல்லாமல், ஒவ்வொரு பரிமாணத்திலும் வாழும் உயிரினங்களாக அவை ஏன் இருக்கக் கூடாது? இப்போது இதை நம் சமய இலக்கியங்கள் சொன்ன சில கருத்துகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மேலுலகம், கீழுலகம் என ஈரேழு உலகங்கள் உண்டெனவும், ஒவ்வொரு உலகங்களிலும் ஒவ்வொருவர் வாழ்வதாகவும் சொல்லியிருக்கிறதல்லவா? இந்த உலகங்கள் ஏன் ஒவ்வொரு டைமென்சனிலும் அமைந்தவையாக இருக்கக் கூடாது? மேல் பரிமாணங்களில் வாழ்பவர்கள் அப்பப்போ நாம் வாழும் மூன்றாவது பரிமாணத்திற்குள் நுழையும் போது, அவர்களைச் சிலர் கண்டு கொள்கின்றனர் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? ஆதிகாலத்தில் மனிதனுடன் அவர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் அடிக்கடி தொடர்புகளையும் வைத்திருந்திருக்கலாம் அல்லவா? இவையெல்லாவற்றுக்கும் சான்றாக பண்டைய சமய இலக்கியங்களில் பல உதாரணங்களை நீங்கள் கண்டு கொள்ளலாம். ஆதிகால மனிதனால் செய்திருக்கவே முடியாத சாத்தியமில்லாத பல விசயங்கள் நடைபெற்றிருப்பதற்கு நிறையச் சான்றுகள் இன்றும் நம் கண் முன்னே உள்ளன. அந்த ஆதி மனிதனுக்கு ஏதோ ஒரு மேல் பரிமாணத்தில் வாழும் ஒரு இனம் உதவியிருக்கலாம் அல்லவா? இப்படி நான் சொல்லும் போது, நீங்கள் முழுமையான ஆன்மீகவாதியாக இருந்தால் கோபப்படவே செய்வீர்கள். ஆனால் இந்தச் சாத்தியங்களை கோபம் என்ற உணர்வில்லாமல் அறிவியலாகச் சிந்தித்துப் பாருங்கள். நமக்கு முன்னால் இருக்கும் சகல பஸில் துண்டுகளும் (Puzzle) முறையாக அதனதன் இடத்தில் தானாகப் பொருந்துவதைக் காண்பீர்கள். 

இத்துடன் இது முடிந்துவிடவில்லை. நவீன இயற்பியல் பல பரிமாணங்கள் உள்ளது போல, பல அண்டங்களும் உள்ளன என்று நம்புகிறது. அதாவது இதுவரை ஒரே அண்டம் இருக்கிறது என்றுதான் நம்பியிருந்தோம். அதனால்தான் அண்டத்திற்கு 'Uni'verse என்றே பெயரிட்டிருந்தோம். ஆனால் இப்போது இருப்பது யூனிவேர்ஸ் அல்ல மல்டிவேர்ஸ் (Multiverse) என்கிறது நவீன இயற்பியல். மல்டிவேர்ஸ் என்று சொல்லும் போது, பத்து அண்டம், நூறு அண்டம் அல்ல, ஒரு சமுத்திரத்தில் எத்தனை நீர்க்குமிழிகள் இருக்கின்றனவோ அத்தனை அண்டங்கள் இருக்கின்றன என்கிறார்கள். இதையெல்லாம் சிந்தித்தால் நாம் பைத்தியமாகிப் போகும் நிலைதான் உருவாகும்.

நவீன இயற்பியலால் குறிப்பாகச் சொல்லப்பட்ட இன்னுமொரு விசயமும் உண்டு. அதுதான் 'பாரலல் யூனிவேர்ஸ்' (Parallel Universe) என்பது. உலகில் உள்ள அனைத்துக்கும் சமனானதும், நேரெதிரானதுமான இன்னுமொன்று இருந்தே தீரும் என்கிறது அறிவியல். பூமி சமநிலையில் இருப்பதற்கு இந்த இரட்டைச் சமர்ச்சீர்த்தன்மை மிகவும் அவசியமானது. மனிதனை எடுத்துக் கொண்டாலே வலது இடது என இரண்டு சமபகுதிகளாகவும், நேரெதிராகவும் சமச்சீராகப் பிரிக்கப்பட்டு இருப்பான். நேர் (Plus) என்ற ஒன்றிருந்தால், எதிர் (Minus) என்ற ஒன்று இருந்தே தீர வேண்டும். இரவு பகல், ஆண் பெண், கடவுள் சாத்தான், நீர் நெருப்பு, கிருஸ்து ஆன்டி கிருஸ்து, சொர்க்கம் நரகம், குளிர் வெப்பம் என்று எல்லாமே இரட்டையாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும். இது போல, அண்டத்தில் மாட்டர் (Matter) நிறைந்திருக்க, அதற்கு எதிரான ஆன்டி மாட்டர்களும் (Antimatter) நிறைந்திருக்கின்றன. அணுக்களானாலென்ன, அண்டமானாலென்ன அனைத்துமே சமச்சீராகத்தான் (Symmetry) இருக்கின்றன. இதனால்தான் விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு உப அணுத்துகள்களுக்கும் (Subatomic particle) சமமானதும் எதிரானதுமான இன்னுமொரு உப அணுத்துகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோல நமது அண்டத்துக்குச் சமச்சீராகவும், எதிரானதுமான ஒரு அண்டம், நமது அண்டத்துக்குச் சமாந்தரமாகவே இருக்கிறது என்று அறிவியல் வல்லுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். அதைத்தான் சமாந்தர அண்டம் (Parallel Universe) என்று பெயரிட்டும் அழைக்கிறார்கள். இந்தச் சமாந்தர அண்டம், நமது அண்டத்துக்கு மிக அருகில், நமது அண்டத்தை அப்படியே காப்பியடித்தது போல இருக்கிறது. நான், நீங்கள், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என எல்லாரும், இங்கிருப்பது போல அங்குமிருப்போம். ஆனால் எல்லாமே எதிரெதிராக. இங்கு நீங்கள் இறந்து போனாலும் அங்கு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இங்கு கெட்டவனாக இருக்கும் நீங்கள் அங்கு நல்லவனாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். உங்கள் நெருங்கிய உறவினர்கள் யாராவது இறந்திருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையே இல்லை. அவர்கள் உங்களுக்கு மிக அருகிலேயே பாரலலாக உள்ள அண்டத்தில் இப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

'என்ன இது, அறிவியல் இப்படியெல்லாம் மூடத்தனமாக பேசுகிறதே!' என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். இதில் சொல்லப்பட்ட எதையும் அறிவியல் தகுந்த காரணம் இல்லாமல் சொல்லிவிடவில்லை. இதில் சொல்லப்பட்ட அனைத்தையும் அறிவியல் அறிஞர்கள் அனைவரும் தீர்மானமாக ஏற்றிருக்கிறார்கள். பல விசயங்களை முடிவான முடிவாக அறுதியிட்டுச் சொல்லும் அளவுக்கு நமது விஞ்ஞானக் கருவிகள் இன்னும் வளரவில்லை. எப்போது அந்த வளர்ச்சிகள் ஏற்படுமோ அப்போது இவை எல்லாம் நம் கண் முன்னே சாத்தியமாகலாம். அதுவரை இவை அறிவியல் கோட்பாடுகளாக நம்மிடையே இருந்து கொண்டே இருக்கும். 

-ராஜ்சிவா-

No comments: