Wednesday, November 28, 2012

பெயர் வைப்பவர்கள் கவனத்திற்கு...

இன்னாருடைய மகன்/மகள் என்பதைத் தாண்டி ஒருவரின் முதல் அடையாளம் அவருடைய பெயர்தான்.ஆனால் இப்போதைய பெற்றோர்கள் போல 20 வருடங்களுக்கு முந்தைய பெற்றோர்கள் பெயருக்கு அவ்
வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கூப்பிட ஒரு நல்ல பெயர் என்பதைத் தாண்டி அவர்கள் அதிகம் யோசிக்கவில்லை.

இப்போது பள்ளியின் வருகை பதிவை எடுத்துபார்த்தால் ஒரே பெயர் இருவருக்கு இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.அதாவது இப்போதைய பெற்றோர்கள்,தம் பிள்ளைகளுக்கு யாருக்கும் இல்லாத பெயர் இருக்க வேண்டும் என்று தேடித்தேடி வைக்கிறார்கள். அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வைக்கும் பெயர் நன்றாகத் தான் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

என் அண்ணன் மகளின் பெயர் 'ரிஸ்மிதா', என் தோழியின் குழந்தை பெயர் 'தனிஷ்தா'. நண்பனின் பையன் பெயர் 'மிதுல்’. அந்தப் பெயரை விட அதற்கு அவன் சொன்ன காரணம் தூக்கிவாரிப் போட்டது.

"மிதுல்-னா என்ன அர்த்தம்டா?" என்றேன்.

"'அதுல்' மாதிரி மிதுல் " என்றான்.

இன்னொரு நண்பன் நல்ல நல்ல தமிழ்ப் பெயர்களை பரிசீலனை செய்துவிட்டு கடைசியில் 'ஹர்ஷிதா’ என்று வைத்திருக்கிறான்.

அதாவது 'ஷா, ஸ், ஹா, ஜா’ இது போன்ற எழுத்துக்கள் இல்லாமல் பெயர் வைக்கக் கூடாது என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

அஜித்,விஜய்,விஷால்,தனுஷ்,த்ரிஷா,ஜெனிலியா,குஷ்பு,ஹன்சிகா என முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பெயர்களால் உந்தப்பட்டு,அதன் பாதிப்பு இந்த தலைமுறையினர் இப்படி பெயர் வைக்க காரணமாக இருக்கலாம்.

பெயரிலே தன் மகள்/மகன் தனியாக தெரிய வேண்டும் நினைப்பதெல்லாம் சரி தான். ஆனால் அத்தனை பேரும் தனித்தனியாக தெரிகிறார்களே, எப்படி கவனம் பெற முடியும்?

'பேண்டஸி' படங்களை பார்த்து விட்டு வரும் போது, திருப்தியை தாண்டி ஒருவித அயர்ச்சியாக இருக்கிறது. காரணம், அத்தனை சீன்களிலும் புதுமை, மெனக்கெடல், பார்வையாளர்களின் கவனத்தை தக்கவைக்க ஆசை. எதாவது ஒரு சீன் கொஞ்சம் சுமாராக இருந்தால் தான் அடுத்த சீன் பார்க்கிற மாதிரி இருக்கும். கொஞ்சம் கூட கவனத்தை திருப்ப முடியாததால் படம் முடிந்த பிறகு அயர்ச்சி தான் வருகிறது.

அதே போல கேட்கிற அத்தனை குழந்தைகளின் பெயரும் புதிய பெயர்களாக இருப்பதினால் எந்த பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை.

முன்னர் பள்ளிகளில் ஒரு வகுப்பில் நான்கு பேருக்கு ஒரே பெயர் இருந்திருக்கிறது. நான்கு 'கார்த்திகேயன்’கள், மூன்று 'செந்தில்குமார்’கள், மூன்று 'சரவணகுமார்’கள், இரண்டு 'சரண்யா’க்கள், மூன்று 'பிரியா'க்கள் என ஒரே பெயரில் எத்தனை பேர் இருந்தாலும் 'மொட்டை' கார்த்தி, குண்டு கார்த்தி, ஆர். பிரியா, வீ. பிரியா என ஒரே பெயரில் பலர் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருந்தது.

அந்த 'பேட்ச்’ இப்போது அப்படியே அலுவலகத்தில் இருக்கிறது. அலுவலகத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. ஆனால் அடுத்து 20 வருடங்களுக்கு பிறகு வருபவர்களுக்கு பு்துமையான பெயராக இருந்தாலும் அது ஒரு அடையாளத்தை பெற்றுத்தருமா என்பது கேள்விக்குறிதான். எப்போதுமே ஒருவரது திறமை தான் அடையாளத்தை கொடுக்கும்.

இதைத் தாண்டி உள்ளூர் மற்றும் சர்வதேச தலைவர்களின் பெயர்களை, கடவுளின் பெயர்களை, தாத்தா / பாட்டிகளின் பெயர்கள், ராகங்களின் பெயர்கள் போன்றவற்றை வைப்பார்க்ள் இப்போது அப்படி ஒரு பழக்கம் இருப்பது போல தெரியவில்லை. தியாகராஜன்(திருவாரூர்), பாண்டியன்(மதுரை), ரங்கநாதன், ரங்கராஜன் (ஸ்ரீரங்கம்), காந்திமதி, இசக்கிமுத்து (திருநெல்வேலி),சப்தரிஷி, ஸ்ரீமதி (லால்குடி),மீனாட்சி (மதுரை), காமாட்சி (காஞ்சிபுரம்) என்று பேரை வைத்தே அவர் எந்த ஊர் என்பதையும் ஓரளவுக்கு கண்டுபி்டிக்க முடியும். இப்போது இது போன்ற பெயர்களையே பார்க்க முடியவில்லை.

தனது ஆசிரியரின் பெயரையே தங்களது குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கமும் இருந்தது. தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைப்பார்கள். பாட்டியின் பெயரை பேத்திக்கு வைப்பார்கள். ஆனால் இப்போது அர்த்தமற்ற பெயர்களையே வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த தலைமுறை குழந்தைகளில் யாருக்காவது தாத்தா / பாட்டியின் பெயர் வைத்திருக்கிறார்களா என்று யோசித்து பாருங்கள்.

நமது வாழ்வியலை,கலாசாரத்தை பிரதிபலிப்பதில் பெயர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இனியாவது பிறமொழி கலக்காமல், அர்த்தமுள்ள,நல்ல தமிழ்பெயர்களையும் பரிசீலிக்கலாமே!



நன்றி : விகடன்

No comments: