Friday, May 29, 2015

எவரெஸ்ட் சிகரம் முதன் முதலில் தொடப்பட்ட தினம் இன்று(மே 29)....



எவரெஸ்ட் சிகரம் முதன் முதலில் தொடப்பட்ட தினம் இன்று(மே 29)

மனிதனின் கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன எவரெஸ்ட் தொடுதல் நிகழ்ந்த தினம் இன்று தான்

உலகின் மிக உயரமான அந்த சிகரத்தை தொடுவதற்கான முன்னெடுப்புகள் நெடுங்காலமாக நடைபெற்றன. தொட பத்துக்கும் மேற்பட்ட முயற்சிகள் .கொஞ்சம் மரணங்கள் இதுதான் அதுவரைக்கும் எவரெஸ்ட் நோக்கி போனவர்களின் கதை. உச்சிக்கு போக போக பிராண வாயு அளவு குறையும், எண்ணற்ற சிக்கல்கள் உருவாகும்.தலைவலி, ஞாபக மறதி, மயக்கம், பசி இழப்பு, உடல் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பின்மை,மனப்பிறழ்வு கொஞ்சம் போனால் கோமா இதெல்லாம் வந்து சேரும்

ஜான் ஹன்ட் எனும் இங்கிலாந்து நபர் தலைமையில் பதினோரு பேர் கொண்ட குழு கிளம்பியது.அதில் ஒருவர் தான் எட்மன்ட் ஹிலாரி நியூசிலாந்து நாட்டில் பிறந்த எட்மன்ட் குட்டிப்பையனாக படிப்பில் சுமார் தான்;கூச்ச சுபாவம் வேறு -பள்ளிக்கு போகும் பொழுது இரண்டுமணிநேர ரயில் பயணத்தில் அவர் படித்த சாகச கதைகள் அவரை வேறு கனவு உலகத்திற்கு சென்றது கூட்டி போனது;அந்த கதைகளில் வரும் நாயகர்கள் போல சாகசங்கள் செய்ய குத்துசண்டை கற்றுக்கொண்டார் ;மலையேற்றம் என ஈடுபாட்டுடன் விஷயங்களை செய்தார் .

தேனீ வளர்ப்பில் வெயில் காலங்களில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தில் ஏறவே கடினமான சிகரங்களுக்கு நண்பர்களோடு போவார் .உலகப்போரில் ஈடுபட போய் தீக்காயங்களுக்கு உள்ளாகி மீண்டு வந்தார் ;எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது விட வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார் .வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அச்சிகரம் செல்லும் பார்டர் திறக்கபபடும் அப்பொழுது அங்கு போய் சேர்ந்தார் -உடன் நேபாளிய செர்பா மக்களுள் ஒருவரான டென்சிங் சேர்ந்து கொண்டார் .

நெருங்கிபழகிய இருவரும் முன்னேறினார்கள் ;கடுமையான சூழலில் ,பனி பள்ளங்களில் தப்பித்து சென்று சிகரத்தை 1953 இல் இதே நாளில் தொட்டார்கள் .காலை நான்கரை மணிக்கு எழுந்து எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்த பொழுது இருவரும் கிளம்பி போய் உச்சத்தை அடைந்தார்கள்.யார் முதலில் தொட்டார்கள் என இறுதிவரை சொல்லாமல் பெருந்தன்மையாக இருவரும் சேர்ந்தே தொட்டதாக சொன்னார்கள் .அதற்கு பிறகும் தன் சாகசத்துக்கான தேடலை விடாமல் ஹில்லாரி தென் மற்றும் வட துருவங்களை தொட்டார் .

நேபாளில் ஹிமாலய அறக்கட்டளையை உருவாக்கி பல பழங்குடியினரின் மருத்துவ மற்றும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உதவினார் .எப்படி இப்படி சாதனைகள் செய்கிறீர்கள் என கேட்ட பொழுது ,"இயல்பான எளியவன் நான் !புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான் .அசாதரணமான கனவுகளை கண்டு அசாதரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன் .சிம்பிள் !" என்றார் . மனிதனின் கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன எவரெஸ்ட் தொடுதல் நிகழ்ந்த தினம் இன்று

No comments: