இவருக்கும் தமிழ் என்று பேர்! - தமிழால் வாழ்கையை தொலைத்த ‘ஜிப்மர் டாக்டர்’ புதுவை அரிமா மகிழ்கோ
************************************************
தமிழ் மொழியை மூலதனமாக வைத்து அரசியல் வியாபாரம் செய்பவர்கள் பலர் உண்டு. ஆனால், தமிழால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். புதுவையைச் சேர்ந்த ஆனந்தராஜ் மட்டும் விதிவிலக்கு.
பலருக்கு கனவுக் கல்லூரியான ஜிப்மர் மருத்துவமனையில் படித்து, பின் 20 வருடங்கள் மருத்துவராகப் பணி புரிந்து, பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆனந்தராஜ். 'நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டு களைத் தமிழில் எழுதிக்கொடுத்தார்’ என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு. தற்போது 62 வயதாகும் ஆனந்தராஜ், தமிழ் அறிஞர் களின் வீடுகளுக்குச் சென்று 'வெல்லும் தமிழ் நாடு’ என்ற தலைப்பில் ஒரு பக்க அளவிலான கையெழுத்துப்பிரதியை அளிக்கிறார். அவர்கள் அளிக்கும் ஐந்து ரூபாய் நன்கொடையை அவ்வளவு உவகையுடன் வாங்கிச் செல்கிறார்.தன் பெயரை அரிமா மகிழ்கோ என மாற்றிக்கொண்டார்..
''உருளையன்பேட்டைதான் இவரது சொந்த ஊர்..
இவரது அப்பா கிருஷ்ணன், கவர்னர்கிட்ட மொழி பெயர்ப்பாளரா இருந்தார். சின்ன வயசுல இருந்து தமிழ் மொழி மேல அதிகமான ஈடுபாடு. பள்ளிப் படிப்பு முடிஞ்ச உடனே ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு எழுதி மாநிலத்திலேயே இரண்டாவது இடம் ... கல்லூரி நான்காம் ஆண்டில் கல்லூரி ஆண்டுமலர் தயாரிக்கும் வேலை வந்தது. பாதி ஆங்கிலக் கட்டுரைகள், பாதி தமிழ்க் கட்டுரைகள் நிரம்பியதாக அந்த ஆண்டுமலரைத் தயாரித்தார்.
ஆனால், ஆண்டுமலர் வெளியானபோது, அந்தக் தமிழ்க் கட்டுரைகள் மட்டும் வரவேயில்லை.
படிப்பு முடிந்த பிறகு 1980-ல் கூடப்பாக்கம் பகுதிக்கு மருத்துவரா நியமிக்கப்பட்டு, அங்கே 10 ஆண்டுகள், காரைக்காலில் 3 ஆண்டுகள், மாகே-வுல சில ஆண்டுகள்னு மொத்தமா 19 வருஷம் மருத்துவர் வேலை ... மருத்துவரா இருந்தபோது தமிழில்தான் மருந்துச் சீட்டு எழுதிக் கொடுப்பார்..! இந்த ஒரு விஷயத்துக்காகவே வேலையை விட்டு தூக்கினார்கள். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சாதகமா தீர்ப்பும் வந்தது. ஆனா, அதுக்குள்ள 60 வயசு ஆயிடிச்சு.
“இந்தியாவில் ஆங்கிலத்தையும் சரியா கற்றுத்தருவது இல்லை... தமிழையும் கற்றுத் தருவது இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருந்து காலம்தான் விரயம் ஆச்சு. திருமணமும் பண்ணிக்கலை. இப்ப அடுத்த கட்டமா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஒன்று ஆரம்பிக்க முடிவுசெய்து, அதற்கான வேலைகளைத் தொடங்கிட்டேன். தமிழர் கள் தாய் மொழியில் மருத்துவம் படிக்கணும். அதுதான் என் நோக்கமே'' என்று கண்களில் கனவு தேங்கப் பேசுகிறார் ஆனந்தராஜ்.
அது தமிழ்க் கனவு!
ஆனால், ஆனந்தராஜின் 79 வயதான தாய் கஸ்தூரியோ தன் மகன் நல்ல படிப்பு படித்திருந்தும் நல்ல நிலைக்கு வர முடிய வில்லையே,திருமணம் செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் அழுகிறார்.
'மெள்ளத் தமிழினிச் சாகும்’ என்றான் பாரதி. ஆனந்தராஜ் போன்றவர்களால்தான் தமிழ் அழியாமல் வாழ்கிறது போலும்...!
No comments:
Post a Comment