Friday, June 21, 2013

தெரிந்து கொள்வோமா-144 [செல்லிடப்பேசியினின்று வெளிப்படும் கதிர்வீச்சு...]

வாழ்க்கை வசதிக்கான பொருளாக அறிமுகமாகி, வாழ்வின் தவிர்க்க முடியாத பொருளாக மாறிவிட்டதில் செல்போனுக்கே முதலிடம். “செல்போன் இல்லாமல் வாழ முடியாது’ என்ற நிலைக்கு இன்றைய இளைய, வளரும் சமுதாயம் தள்ளப்பட்டுவிட்டதைக் காண்கிறோம். எந்த ஒரு பொருளுமே தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடும்போது, அதன் மூலம் மனித இனம் அபாயத்தைத்தான் அதிகம் எதிர்கொள்ள நேரிடுகிறது. இது கண்கூடு.

செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளை அவ்வப்போது ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. இவை ஊகங்கள்தான் என புறந்தள்ளுவோரும் உண்டு. இருந்தாலும், பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, அதன் விளைவுகளை இத்தகைய அலட்சியப் போக்குள்ளவர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனமே அழிந்துவருகின்றன. செல்போன் டவர்களுக்கு மட்டும்தான் கதிர்வீச்சு உள்ளதா? செல்போனை சட்டைப்பையிலும் இடுப்புக்கு அருகிலும் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு எச்சரிக்கையை அளிக்கிறார்கள் வல்லுநர்கள். அது, செல்போனில் இருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சு, மனிதனையும் பாதிக்கும் என்பதுதான்.
இந்தக் கதிர்வீச்சை எப்படி அளக்கிறார்கள்? இதனை “எஸ்.ஏ.ஆர். வேல்யூ’ என்கிறார்கள். இப்படிச் சொன்னதும், ஏதோ இது செல்போனின் விலை மதிப்பு என்று நினைக்காதீர்கள். “ஸ்பெசிபிக் அப்சர்ப்ஷன் ரேட்’ என்பதன் சுருக்கமே “எஸ்.ஏ.ஆர்.’ என்பது. அதாவது, ஒரு செல்போன் தொடர்பில் இருக்கும்போது, அதில் இருந்து வெளியாகும் “எலக்ட்ரோ மேக்னடிக்’ அலைகள் அல்லது ரேடியோ கதிர்கள் உடலுக்குள் ஊடுருவும் அளவை நிர்ணயிப்பதே “எஸ்.ஏ.ஆர்.’.

இது, செல்போனில் இருந்து வெளியாகும் சக்தியை அல்லது கதிர்வீச்சை உடல் உட்கிரகிக்கும் அளவைக் குறிப்பது. இது நாம் பயன்படுத்தும் செல்பேசியின் “வாட்ஸ் பெர் கிலோ கிராம்’ என்பதை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்படுகிறது. “எஸ்.ஏ.ஆர். வேல்யூ’ குறைந்திருந்தால், உங்கள் செல்பேசி மிகவும் பாதுகாப்பானது. குறைந்த அளவு கதிர்களே செல்போனில் இருந்து வெளியேற்றப்பட்டு, அது உடலுக்குள் ஊடுருவுகிறது என்பதைக் குறிக்கிறது இது.

ஒவ்வொரு செல்போனும், செல்பேசி டவர்களுடன் இணைக்கப்படும்போது, அதில் இருந்து ரேடியா கதிர்கள் வெளியாகின்றன. இந்தக் கதிர்கள், உடலில் உள்ள திசுக்களால் ஈர்க்கப்படுகின்றன. இது எந்த அளவில் இருக்கிறது என்பதைக் குறிக்கும் எஸ்.ஏ.ஆர். வேல்யூவை, வெளிநாடுகளில் உள்ள பல முன்னணி செல்போன் நிறுவனங்கள், செல்பேசியின் விவரப் பக்கத்தில் உண்மையாகவே குறிப்பிடுகின்றன. செல்பேசி நிறுவன இணைய தளங்களில் அது பற்றிய விவரத்தில் ஒவ்வொரு செல்பேசிகளின் எஸ்.ஏ.ஆர். மதிப்பும் தவறாமல் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை வைத்து பாதுகாப்பான செல்பேசிகளைத் தேர்வுசெய்து நாம் வாங்கமுடியும்.

இந்தியாவில் இந்த “எஸ்.ஏ.ஆர்.’-இன் அதிகபட்ச மதிப்பு 1.60 வாட்ஸ் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் தயாராகும் செல்பேசிகளில் எஸ்ஏஆர் மதிப்பு பற்றிய விவரம் இல்லாததாலும், அது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததாலும், உடலுக்குத் தீமை பயக்காத, பாதுகாப்பான செல்பேசிகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இதுவரை கிடைக்காமலே இருந்தது.

செல்பேசி என்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரபலமாகத் துவங்கியது. அதனால் இதன் மூலம் அடையும் பாதிப்புகளைக் கண்கூடாக இன்னும் காணவில்லை. ஆனால், ஓர் எச்சரிக்கையாக, செல்பேசிகளில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கதிர்வீச்சுக்களால், அதனைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு சாதாரண சரும நோய் முதல், புற்றுநோய் வரை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செல்பேசிகளின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் அளவுக்கு இதன் பாதிப்புகள் குறித்து இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

இந்த விழிப்புணர்வால், இந்தியாவிலும் குறைந்த எஸ்.ஏ.ஆர். மதிப்பைக் கொண்ட செல்பேசிகளின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். செல்பேசிகளை விற்கும்போது, அதில் தவறாமல் “எஸ்.ஏ.ஆர். மதிப்பு’ தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், அனைத்து செல்பேசிகளின் எஸ்.ஏ.ஆர். மதிப்பும் வெளிப்படையாகத் தெரியும்படி பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செல்போனை வாங்கச் செல்லும்போது அதிகப்படியான பயன்பாடு, சேமிக்கும் திறன், புதிய மாடல், விலை குறைவு என பல்வேறு விஷயங்களைப் பார்த்துப் பார்த்து வாங்கும் நாம், இனி எஸ்.ஏ.ஆர். மதிப்பையும் பார்த்து, உடலுக்குத் தீமை பயக்காத செல்பேசிகளைத் தேர்வு செய்து வாங்க வேண்டும். இது நம் கடமை – உரிமையும் கூட!

வாணிஸ்ரீ சிவகுமார்

நன்றி-aanthaireporter.com

No comments: