Sunday, July 7, 2013
Saturday, July 6, 2013
தெரிந்து கொள்வோமா-156 [விடா முயற்சி பற்றி தாமஸ் ஆல்வா எடிசன்....]

தாமஸ் ஆல்வா எடிசனின் தன்னம்பிக்கை மந்திரங்கள்!!
ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை(School Holidays) நாள்கள் வரும்போது குழந்தைகள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு(பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை, கடற்கரை...) அழைத்துச் செல்லவில்லை என்றால் பிடிவாதம் செய்வார்கள்.இவ்வாறான இடங்களுக்கு அழைத்துப் போகச் சொல்லி விடாமுயற்சியுடன் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள்.
குழந்தைகளின் இதே பிடிவாத குணத்தையும், விடாமுயற்சியையும் படிப்பிலும், பிற திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட அவர்களுக்கு நாம் பழக்க வேண்டும். இப்படிப்பட்ட பிடிவாத குணத்தினாலும் விடாமுயற்சியினாலும் இன்று உலகம் புகழும் அறிஞராக(Bulge scholar), பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவரே தாமஸ் ஆல்வா எடிசன்(Thomas Alva Edison).
தாமஸ் ஆல்வா எடிசன் ஓர் ஆய்வினைத் தொடங்கிவிட்டால், அதன் முடிவைக் கண்டறியும்வரை ஓய்வே எடுக்க மாட்டார். ஒரு நாள், எடிசனின் சோதனைச்சாலையில்(Laboratory) அவரது உதவியாளர்கள் இசைத்தட்டு(Record) ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்று இரவுக்குள் இசைத்தட்டினை உருவாக்கிவிட வேண்டும் என உதவியாளர்களுக்கு எடிசன் கூறியிருந்தார்.
உதவியாளர்களுள் ஒருவர் கிராமபோன் இசைத்தட்டினைத் தயாரிப்பதற்காக மெழுகு(Wax) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பலமுறை முயற்சி செய்தும் மெழுகினைப் பக்குவமான தேவையான பதத்தில் தயார் செய்ய அவரால் முடியவில்லை. எரிச்சலும் வெறுப்பும் அடைந்தார்.
எடிசனிடம் சென்று, பலமுறை முயன்றும் மெழுகு சரியான பதத்தில் வரவில்லை. நாம் செய்த செயல்முறையின் அடிப்படையில்(Based on the process) ஏதோ ஓர் தவறு உள்ளது. ஆகையால், அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். இன்றைய ஆய்வினை இத்துடன் நிறுத்தி விடலாம். நாளை புதிதாக முயற்சி செய்யலாம் என்றார்.
தாமஸ் ஆல்வா எடிசன் கோபத்துடன், மெழுகு சரியான பதத்தில் வரவில்லையெனில், அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். தாங்கள் சரியாகச் செய்யாமல் அடிப்படையில் தவறு என்று இன்னொன்றின் மீது குறையைச் சுமத்தக் கூடாது. திரும்பத் திரும்பச் செய்வதுதான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டுவிட்டு ஓடுவது வெற்றிக்கு வழிவகுக்காது என்றார்( True facts of Thomas Alva Edison ).
ஒரு முறை, விஞ்ஞானிகளுக்கு வேண்டிய தகுதிகள்( Eligibility for scientists ) பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடிசன் என்ன பதில் கூறினார் தெரியுமா?
ஒரே நேரத்தில் நான் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் கண்டுபிடித்ததில்லை. பல காலம் இடைவிடாமல் தொடர்ந்து செய்த முயற்சிகளின்(Continued attempts) விளைவுதான் என் வெற்றிகள். இதில் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. விஞ்ஞானிகளில்(Scientists) சிலர் ஓரிரு சோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு நிறுத்திவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பியதை அடையும்வரை நான் மேற்கொண்ட சோதனையை இடையில் நிறுத்தியதே இல்லை.
100 முறை தோல்வியடைந்த ஒருவர் 101 ஆவது முறை வெற்றியடைந்துவிட முடியும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன். எனக்கு அபாரமான அறிவும் ஆற்றலும் இருப்பதால்தான் நான் வெற்றி பெறுவதாகச் சிலர் சொல்கிறார்கள். அது என் நண்பர்கள் கூறும் புகழ்ச்சி உரையே தவிர அதில் உண்மையில்லை என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.
விடா முயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுபவர்களும் என்னைவிடச் சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் தாமஸ் ஆல்வா எடிசன்.
எல்லாப் பாடங்களையும் விரும்பிப் படிக்கும் குழந்தைகள் மிகச் சிலர்தான். ஒரு குறிப்பிட்ட பாடத்தை மட்டும் படிக்கச் சிரமப்படும் குழந்தைகள், அப் பாடத்தைத் திரும்பத் திரும்பப் படித்து, அதனைப் புரிந்து மனதில் பதிய(memory) வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் பதிய வைத்த பாடங்களைப் பிழையின்றி எழுதுகின்ற பழக்கத்தையும்(Writing) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முறையில் பயற்சி செய்து பாடங்களைப் படித்தால் போதும். அறிவியல் பாடம் எனக்கு ஆகாது. கணக்குப் பாடமென்றாலே எனக்கு உடம்பெல்லாம் படபடக்கும் என்பதெல்லாம் வெறும் பிரமை. அவர்களை இத்தகைய மாயமான பிரமையான எண்ணங்களிலிருந்து மீட்டுக் கொண்டுவந்து மீண்டும் மீண்டும் அவற்றை எளிய முறையில் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களும் அனைத்துப் பாடங்களிலும் சிறந்து விளங்குவார்கள்.
எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன்(what), எதற்கு(which), எப்படி(How to) என்ற கேள்விகளால் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.
அமெரிக்காவில் பிறந்து அகிலப் புகழ் பெற்ற விஞ்ஞானி எடிசன் மின்விளக்கு(Electric light), கிராமபோன்(Phone), ஒலிபெருக்கி(Speaker), திரைப்படம்(Movie) போன்றவற்றையெல்லாம் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, பள்ளியில் சென்று படிக்காதவர். வீட்டில் தன் தாயிடமே அரைகுறையாகக் கல்வி பயின்றவர். இருப்பினும், எடிசன் தன் ஆய்வுகளைத் திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்து பல வெற்றிகள் பெற்றுள்ளார்.
பள்ளிக்கு கூட செல்லாமல் வீட்டில் தன் தாயிடம் அரைகுறையாகக் கல்வி கற்ற எடிசனே இவ்வளவு சாதனைகளைச் செய்துள்ளார் என்றால், தினமும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களின்,பெற்றோர்களின் அன்பில், அரவணைப்பில் இருக்கிற குழந்தைகள், முறைப்படி பாடங்களை முழுமையாகப் பயிலும் நமது குழந்தைகள் இது போல பல சாதனைகளை நிகழ்த்தா முடியாதா என்ன?
தேவை தன்னம்பிக்கை, விடாமுயற்சி.. கூடுதலாக எடிசனின் வார்த்தைகளில் சொல்வெதன்றால் பிடிவாதம் மற்றும் எடுக்கும் முடிவுகளில் உறுதி, ஒரு செயலைச் செய்யும்போது ஏற்படும் விளைவால் துவண்டு விடாமல், அதை எப்படி செய்தால் சரியான முறையில் செய்யலாம் என்பதை தீர்மானித்து அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்தல் ஒன்றே நாம் தேடும் தேடலுக்கு விடை கிடைக்கும். செய்யும் செயலுக்கு வெற்றி கிடைக்கும். இதுதான் தாமஸ் ஆல்வா எடிசனின் வெற்றியின் ரகசியம்.( True facts of Thomas Alva Edison ).
ஆரோக்கியமான செயல்களில் பிடிவாதமும் வெற்றித்தரும் என்பதை அவர் செயல்களிலிருந்தே நாம் கற்றுக்கொள்ளலாம். இதையே ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய நம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்.
தாமஸ் ஆல்வா எடிசனின் வாக்குக்கு ஏற்ப பிடிவாதமும், திரும்ப, திரும்ப அச்செயலை செய்து, செய்து விழுந்து.. எழுந்து.. மீண்டும் விழுந்து.. எழுந்து.. தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கத்தான் வேண்டும். அப்போதுதான் நாம் நினைக்கும் செயல் வெற்றியடையும். அறிஞர் ஒருவர் சொன்னது போல எத்தனை முறை விழுந்தாய் என்பது முக்கியமல்ல.. எத்தனை முறை எழுந்து நின்றாய் என்பதுதான் முக்கியம். நாமும் கற்றுக்கொள்வோம்.. நம்முடைய குழந்தைகளுக்கும் இந்த வெற்றிமுறையை கற்பிப்போம்.
நன்றி: http://inruoruthagaval.com
தெரிந்து கொள்வோமா-155 [புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்]
புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ளது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு. புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான வாசனையுடையதாக இருக்கும். பக்கவிளைவுகள் இல்லை காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்ற கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது. இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
தமிழ் மொழி பற்றி அயல் நாட்டாரின் கருத்து...
தமிழைத் தழுவிய தமிழரல்லாத அறிஞர்களின் கருத்து.
============================================
அஸ்கோ பர்போலா (பின்லாந்து)
பலமொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு ‘உலகமயமாக்கல்’ என்ற கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. இதற்குத் தமிழும் தப்பவில்லை. உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான் நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும் என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘உலகமயமாக்கல் போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின் நடக்கிறேன். இந்த உலகில் நானும் பிழைக்க முடியும்’ என்பது வெற்று உளறல். தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் நாடுகளாக ஜப்பானும் சீனாவும் இல்லையா? எனவே எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நரபலி இடுவதற்குச் சமம்.
ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா)
நான் முதலில் வடமொழியைக் கற்றவன். அதன் பிறகுதான் தமிழைப் படித்தவன். உங்களது மொழியில் அனைத்துத் தன்மைகளுமே இருக்கின்றன. இப்படி ஒரு வளம் வேறு எந்த மொழிக்கும் இல்லை. இந்திய அரசு எழுதிக் கேட்டபோது தமிழிச் செம்மொழியாக ஏன் ஆக்க வேண்டும் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் எழுதி அனுப்பியவன் நான். இது போன்ற வரலாற்றையும் மொழி வளத்தின் தன்மையையும் மற்ற நாடுகளில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது.
எப்படிப்பட்ட வரலாற்றுக்கு வளத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று நீங்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதை உலகமும் ஒப்புக்கொள்ளும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். அதைச் செய்தால் தமிழகத்துக்கு வெளியில் இருந்து எங்களைப் போன்ற ஆர்வலர்கள் தமிழ்த் தொண்டு ஆற்றக் கிளம்பி வருவார்கள்!”
அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (உருசியா)
உங்கள் மொழியைப் படிக்க ரஷ்ய நாட்டில் எத்தனையோ பேர் ஆர்வமாக வருகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்கும்… பணம் கிடைக்கும் என்று அவர்கள் வரவில்லை. தமிழ் மொழியைப் படித்தால் சுவையாக இருக்கிறது. அதன் அனைத்துப் பாடல்களும் மனிதாபிமானம் பேசுகின்றன, மனிதத் தன்மையை உணர்த்துகின்றன என்பதால்தான் அதைப் படிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆர்வத்துடன் தமிழ் கற்க வந்த மாணவர் ஆனவுடன்தான் நான் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன். ஆளுக்கு ஓர் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதன் பிறகு உங்களால் தமிழில் இருந்து மீள முடியாது. வேலைக்காக, பணத்துக்காக இல்லாமல் இலக்கியம் படியுங்கள்.
கிரிகோரி ஜேம்ஸ் (பிரித்தன்)
இது போன்ற மாநாடுகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ 15 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நடத்தினால் மட்டும் போதாது. தமிழ் ஆய்வு மாநாடுகளைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக மட்டுமே மக்களிடம் மொழி சார்ந்த ஒரு விழிப்புணர்பை ஏற்படுத்த முடியும். இவையே மொழிக்கு உந்து சக்தியாக அமையும். இது போன்ற நிகழ்வுகள் வெறும் விளம்பரங்களாக இல்லாமல் ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்!
கலையரசி ( சீனா)
இதுபோன்ற ஒரு மாநாட்டு வேளையில் தமிழை ஞாபகம் கொள்கிறீர்கள். பிறகு மறந்து போவீர்கள்தானே? இங்கேயே பார்த்துவிட்டேன். என்னோடு தெளிவான தமிழில் பேசுகையில் பல பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம்? நியாயப்படி எனக்குத்தான் சிரிப்பு வர வேண்டும். தமிழகத்திலிருந்து ஒளி பரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பெண்களும் ஆண்களும் நித்தம் நித்தம் தமிழ்க் கொலை புரிதலைச் சகிக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் அந்த சிதைக்கப்பட்ட தமிழ்தானே மனிதில் பதியும்? ஆகவே ஆரோக்கியமான தமிழ் வாழும் இடமாக உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். நான் சீன இனத்தைச் சேர்ந்தவள். தமிழ் மீது கொண்ட காதலால்தான் என் பெயரைக் கலையரசி என்று மாற்றியுள்ளேன். எவ்வளவு இனிமையான பெயர்!
தாமஸ் லேமன் ( செருமனி)
ஆங்கிலத்தில் பேசினால்தான் கெளரவம் என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் மத்தில் புதைந்து இருக்கிறது. மிக மோசமான கிருமி இது. வணக்கம் மிக்க நன்றி என்கிற வார்த்தைகளில் இல்லாத மரியாதையும் உவகையுமா ஆங்கில மொழியில் இருக்கிறது. உன் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில் ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி. நடைமுறைவாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களைத் தமிழ்ப்படுத்துங்கள். அதாவது தமிழிலேயே கதையுங்கள். ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம். தமிழனாய் வாழ்வோம்.
Tuesday, July 2, 2013
நவம்பர் 1999 ஆம் ஆண்டு யுநெஸ்கோவின் உலக தாய்மொழி தினம்
நவம்பர் 1999 ஆம் ஆண்டு யுநெஸ்கோ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது.
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அந்த இனத்தின் மொழியை அழிப்பார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.
தாய்மொழி வெறும் ஓசையும், எழுத்து வடிவமும் கொண்டது மட்டுமல்ல, அந்தந்த இனத்தவரின் உணர்வோடு கலந்த ஒன்றாகும். பன்னாட்டு கலாச்சாரங்களோடு நாம் வாழ்ந்தாலும் தாய் மொழியை மட்டும் எவ்விடத்தும் எதற்காகவும் இழந்துவிடக் கூடாது.
யுநெஸ்கோ தாய்மொழி கல்வியின் அவசியத்தை உலகெங்கும் பரப்பி வருகிறது. உலகில் உள்ள 7000 மொழிகளில் பாதிக்கு மேல் அழியும் நிலையில் உள்ளது. இதனை அறிந்து 2000 ஆம் ஆண்டில் இருந்து உலகத்தின் உள்ள எல்லா மொழிகளை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் செயலாற்றிக்கொண்டிருக்கிறது.
முக்கியமாக சிறுபான்மையினர் பேசும் மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனை அழிவில் இருந்து காக்க செயல்படுகிறது. பன்மொழி கலாச்சாரத்தை வரவேற்கிறது. மே 16 , 2007 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 2008 ஆம் ஆண்டை உலக தாய்மொழி ஆண்டாக அறிவித்துள்ளது.
2012 தாய் மொழி தினத்தை ஒட்டி யுநெஸ்கோவின் மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட செய்தி மடலின் தமிழாக்கம்
‘ஒரு மனிதனுக்கு தெரிந்த மொழியை பேசினால் அது அவன் அறிவை மட்டுமே அடையும், அதுவே அவன் தாய் மொழியில் சொன்னால் அவன் இதயத்தை சென்றடையும்’ என்று தென்னாப்பிரிக்க புரட்சியாளர் நெல்சன் மண்டேலா கூறினார்.
நம் சிந்தனையில் இருக்கும் மொழி மற்றும் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழி இதுவே நமக்கு கிடைத்த பெரும் சொத்து. பன்மொழிக் கொள்கையின் மூலம் நல்ல தரமான கல்வியும் எல்லா மொழிகளுக்கும் உரிய இடத்தைத் தந்து ஒரு ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு சூழலை உருவாக்குவோம். நம்முடைய வாழ்கையின் தரம், முனேற்றம் இந்த இரண்டையும் நம் மொழியாலே அமைகிறது. மொழி தான் நாம். அதை பாதுகாப்பத்தின் மூலம் நம்மையே நாம் பாதுகாக்கிறோம்.
உலக தாய்மொழி தினத்தை பன்னிரண்டு யுனெஸ்கோ அமைப்பு வருடங்களாக கொண்டாடுகிறது. இந்த தினம் உலகில் உள்ள பல்வேறு மொழிகளை பாதுகாக்கவும் பல மொழி கொண்ட பல் வேறுபட்ட கலாச்சாரங்களை அங்கீகரிக்கவும் செய்கிறது. இந்த பதிமூன்றாவது வருட கொண்டாட்டம் பன்மொழிகளைக் கொண்ட ஒரு கல்வியை அர்ப்பணிக்கிறது. இதுவரை ஆராய்சியாளர்களின் பணி, பன்மொழி கொண்ட கல்வியின் சிறப்பினை நமக்கு உணர்த்துகிறது. அது சிறந்த முன்னேற்றத்தையும், குறிக்கோளையும் துரிதப்படுத்துகிறது.
தாய்மொழியில் கல்வி கல்லாமை என்னும் நிலைமை சமூகத்தில் இருந்து விரட்டபட வேண்டிய ஒன்று என்பதை உலக தாய்மொழி தினம் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் உண்மையில் சிறுபான்மையினர் பேசும் மொழிகள் தற்காலிக கல்வி முறையால் புறக்கணிக்கப்படுகிறது.
ஆனால் தொடக்கக்கல்வியை தாய்மொழியில் தொடங்கி பிற்பாடு தேசிய மற்றும் பயன்பாட்டு மொழிக்கு மாறுவதன் மூலம் சம உரிமையும் அனைத்து மொழியினரின் பங்களிப்பையும் அதிகரிக்கும்.
யுநெஸ்கோ வின் அலைபேசி கற்றல் வாரம் மூலமாக அலைபேசி தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து மொழி கல்வியை எவ்வளவு சிறப்பாக கொடுக்கமுடியும் என்பது தெரிகிறது. இதன் மூலம் பன்மொழி கல்வியை பத்துமடங்கு எளிமையாக கொடுக்கமுடியும். இது நம் தலைமுறைக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதனால் ஒரு மொழியின் குறைபாட்டை தடுக்கமுடியும்.
மொழிகளாக நாம் வேறுபட்டு நிற்பது பொதுவான உலகப் பண்பாடு. இந்த வேறுபட்டால் சமூகம் சிதறுண்டு கிடப்பதும் இயல்பே. இந்த நூற்றாண்டின் இறுதியில் 6000 மொழிகளில் பாதி மொழிகள் அழிந்துவிடக்கூடிய நிலையில் உள்ளன. யுநெஸ்கோவின் உலகமொழி வரைபடமே அழியும் தருவாயில் உள்ளது.
ஒரு மொழியின் அழிவு நம் மனித சமூகத்தின் கலாசார ஏழ்மையே ஆகும். ஒவ்வொரு மொழியும் ஒரு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு, அது ஒரு ஆக்கப்பூர்வமான பண்பாட்டின் கூட்டு. மனித குலத்தின் வேறுபட்ட கலாச்சாரத்தை(cultural diversity) இயற்கையின் வேறுபட்ட உயிரியல் இனங்களுடன்(Bio diversty) நாம் ஒப்பிடலாம்.
பல பழங்குடியினரின் மொழியியல் உயிரியல் இனங்களின் உண்மையும் அதை நிர்வகிப்பதற்கான வழிமுறையும் புதைந்துள்ளது. வேறுபட்ட உயிரினங்களின் பாதுகாப்பு எப்படியோ அதைப் போன்றே பல்வேறு மொழி கலாச்சாரங்களின் பாதுகாப்பும். ஒரு மொழியின் வலிமை என்பது ஒரு சீரான பண்பட்ட வளர்ச்சியில் உள்ளது.. இதையே யுநெஸ்கோ அமைப்பு, ரயோவில் நடந்த ஐநாவின் சீரான பண்பட்ட வளர்ச்சிக்கான கருத்தரங்கில் கூறியது.
ஒரு மொழியின் செழுமை அந்த மொழி பேசும் மற்றும் அதை பாதுகாக்க துடிக்கும் அந்த சமூகத்தினரின் கையிலே உள்ளது. யுநெஸ்கோ அப்படிப் பட்ட சமூகத்திற்கு மதிப்பளிக்கிறது மற்றும் அவர்களின் கல்வி, சமூக வளர்ச்சிக்காக குரல் கொடுத்து அவர்களின் சமூக திட்டங்கள் செம்மையாக இருக்க உதவுகிறது.
பன்மொழி கொண்ட சமூகம் என்பது நம்முடன் வாழ்ந்துகொண்டுள்ள ஒரு வளம். அதை நம் உயர்வுக்கு பயன்படுத்துவோம். தாய் மொழியைக் காப்போம். அதை உயர்த்துவோம்.
வேற்றுமையில் ஒற்றுமை என்று பெயரளவில் மட்டுமே சொல்லும் இந்தியா போன்ற நாடுகள் ஒரு மொழி ஒரு பண்பாட்டை மட்டுமே இந்திய மக்களிடம் திணிப்பது மனித குல விரோத செயலாகும் . எல்லா மொழிகளுக்கும் பண்பாடுகளுக்கும் சம உரிமை, சமமான வாய்ப்பு, சமமான அதிகாரம் நல்குவது தான் இந்தியா போன்ற நாடுகளை செழுமை அடையச் செய்யும். இனி வரும் காலங்களின் இந்திய அரசு இந்த கருத்தியலை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும் . மொழித் தீண்டாமை மொழி அழிப்பு கொள்கைகளை கைவிட வேண்டும் என்பதே மொழி ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது . வாழ்க தமிழ்.
மொழிகள் நிலைத்து நின்றிட...
தமிழ் மொழி அழியுமா !
==================
சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.
அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.
"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.
ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.
ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....
Subscribe to:
Posts (Atom)