Friday, December 7, 2012

தாய் தமிழ் போற்றுவோம், வணங்குவோம், எங்கு சென்றிடுனும் அவள் பெருமை மறவோம்...

இனம் வாழ, நாம் வாழ செந்தமிழை வாழவைப்போம்! 

பிஞ்சாய் பிரபஞ்சம் தொட்டு வளரத் துவங்கிய நாள் தொட்டு ”எங்க அம்மானு சொல்லு, அப்பானு சொல்லு, அக்கானு சொல்லு” என மொழி தாய்ப்பாலோடு புகட்டப்பட்டது. 

குடும்பத்தில் அனைவரும் காலம் காலமாய் வழிவழியாய் பேசும் தமிழ் மொழியே தாய்மொழி என உணர்த்தப்பட்டது, வயது கூடக்கூட இதற்கு இதுதான் வார்த்தை என புரிய ஆரம்பித்தது. பள்ளிக்கூடம் பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தது
, கூடவே பேச்சு வழக்கில் இருந்த வார்த்தைகளை தட்டிச் சீர்படுத்தி இது தான் முறையான வார்த்தை என அடையாளம் காட்டியது. அதே காலகட்டத்தில் பள்ளியில் கூடுதல் மொழியாக ஆங்கிலம் போதிக்கப்பட்டது.

முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசத்தை ஆண்டிருந்தாலும், அது பெரும்பான்மையான குடும்பங்களில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியாத மொழி. ஆரம்பத்தில் மிகக் கடினமாக இருந்தாலும், கட்டாயத்தின் பேரில் கற்பிக்கப்பட, கற்றுக் கொண்டேயாக வேண்டிய நிர்பந்தத்தில், சிலருக்கு எளிதாக கைவந்தது, பலருக்கு அதுவே பள்ளியைவிட்டு ஓட வைத்தது.

முதல் தலைமுறையாக மாற்று மொழி கற்போருக்கு அது மிகக்கடினமான ஒரு தண்டனையாகவே இருந்தது. என்னதான் மற்ற மொழி கற்றாலும் சிந்திப்பது என் அம்மா அமுதோடு ஊட்டிய தாய்மொழியான தமிழ் மொழியிலேயே என இருந்தது. எந்த மாற்று மொழி வார்த்தையை வாசித்தாலும், அது தமிழாக மொழி மாற்றம் அடைந்து எண்ணத்தில் புகுந்தது.

திரும்ப ஆங்கிலத்தில் பேச வேண்டிவந்தாலும், பேச வேண்டிய வார்த்தை எண்ணத்தில் தாய் மொழியிலேயே உருவாகி உள்ளுக்குள்ளே மொழி மாற்றமடைந்து, ஆங்கில வார்த்தையாக பிரசவம் அடைந்தது. இது தாய்மொழியில் சிந்திக்கும் அனைவருக்கும் பொது.

எதன் பொருட்டோ காலப்போக்கில் தாய்மொழிக்கான அங்கீகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் துணிந்தோம், ஆக்கிரமித்த ஆங்கிலம் இந்த தேசத்தில் எந்த மொழியை விடவும் தமிழை அதிகம் கபளீகரம் செய்தது மறுக்க முடியாத உண்மை.

சந்தித்துக் கொள்ளும் இரு இந்தியர்களில், வலிந்து ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள முயற்சித்தால் அவர்கள் இருவரும் தமிழர்கள் என அடையாளம் கண்டுகொள்ளலாம் என்ற அளவில் தாய்மொழி புறந்தள்ளப்பட்டு வரும் அவலமும் மறுக்கமுடியாத ஒன்று.

பொருளாதாரம், வளர்ச்சி, அறிவு, அறிவியல், மருத்துவம் என்பது போல் ஏதோ ஒன்றின் பொருட்டு ஆங்கிலத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு, தாய்மொழியான தமிழை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு கட்டிப்போட்டதாகவே உணர்கின்றேன்.
பச்சையாகச் சொன்னால், தமிழகம் தவிர்த்து வேறு பகுதிகளில், வேறு தேசங்களில் வாழும் தமிழர்களிடம் வாழும் தமிழ்கூட தமிழகத்தில் வாழும்(!!!) தமிழர்களிடம் இருக்கிறதா என்பதே ஐயமாக இருக்கின்றது.

அறிவை விருத்தி செய்ய வேண்டிய பள்ளிகளில் முதலில் தாய்மொழியை இழந்தோம். தமிழகத்தில் பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள், இன்று தனியார் பள்ளிகள் என்பதாக மாறிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியையே முழுக்கக் கொண்டு, தமிழ் தவிர்த்த பிற மொழியை இரண்டாம் மொழியை எடுக்கலாம் என்ற நிலையை அரசாங்கம் அனுமதித்த போது தமிழ் மொழி தாறுமாறாக கிழித்து வீசியெறியப்பட்டது.

அப்படி வீசியெறியப்பட்டு சீரழிக்கப்பட்ட மொழி, அதன் பின் அரசாங்கம் என்ன வெற்றுச் சட்டம் போட்டாலும் அரியனை ஏற முடியாமல் தவிக்கின்றது. இன்றைய குழந்தைகளை பள்ளிகளும், வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிகளுமே முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது.

வீடுகளில் மற்றவர்களுடன் கலந்து பேசுவதை தொலைக்காட்சிப் பெட்டிகள் மௌனிக்கச் செய்துவிட, பள்ளிகள் கட்டாயம் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்த, வேறு வழியில்லாமல், தாய்மொழியை விட்டு விரும்பியோ, விரும்பாமலோ ஆங்கில மொழியிலேயே சிந்திக்க நிர்பந்திக்கப்படும் அவல நிலைக்கு நாமே ஆளாக்கிய குற்றவாளிகளாக மாறிவிட்டோம்.

”சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ரைஸ்” என்றால் மணக்கிறது என்பது தான் இன்றைய தமிழனின் நாகரிகமாக அடையாளப் படுத்தும் போது வேதனையோடுதான் மனதிற்குள் புழுங்க வேண்டி வருகிறது.

இந்த பைத்தியகாரத்தனமான நாகரிக முகமூடிகளை பிய்த்தெறிந்து வெளிவர வேண்டிய நெருக்கடியான காலகட்டத்திற்கு தமிழ் மொழியும், இனமும் இன்று தள்ளப்பட்டிருக்கிறது.

வழிவழியாய் வந்த தாய்மொழியைப் படிப்படியாய் இழக்கும் சமூகம், கொஞ்சம் கொஞ்சமாய் தன் அடையாளத்தையும் இழக்கவே செய்யும். மொழியை வளர்க்க மறக்கும் மனிதன் தன் இனத்தை விட்டு படிப்படியாக விலகவே செய்வான். ஒன்றுபட்டிருந்த இனம் காலப்போக்கில் சிதறுண்டு போகும். காலப்போக்கில் தன் இனம் அழிவது குறித்து கவலைகளற்று போகும் சூழ்நிலை வந்துவிடும்.

சமீபத்தில் இந்த தமிழ் இனத்தை அழித்தொழித்த ஒரு கொடும் செயலில், ஒட்டுமொத்த தமிழகத்தில் ஒற்றை இலக்க சதவிகிதத்திற்கும் குறைவாக மட்டுமே வலி கொண்டது, கிளர்ந்தெழுந்தது, கதறி அழுதது. அந்த வலிக்கும், கிளர்ச்சிக்கும், அழுகைக்கும் அடிப்படையாக இருந்தது அவனும், நானும் தமிழன் என்ற ஒரே பற்றுக்கோடுதான்.

மொழியை இழந்தவன் இந்த பற்றுக்கோடு பற்றிய அக்கறை அற்றவனாக மாறி, இனத்திலிருந்து தனிமைப் பட்டுப்போவான். ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், விருந்தோம்பலையும் ஆதிகாலம் முதலே கற்றுக்கொடுத்து வந்த மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழ் இனம்.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி வழி வந்த நாம், மிக அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டியது, நம் பிள்ளைகளுக்கு தாய் மொழி தமிழ் மேல் சிதறாத ஆர்வத்தை தூண்டுவது. அதுவே மொழியை, மொழி சார்ந்தவனை, இனத்தை காப்பாற்றும். இனம் வாழ, நாம் வாழ செந்தமிழை வாழவைப்போம், அதற்காகச் செயல்படுவோம்.

(வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை 23வது தமிழ் விழா மலரில் வெளியான கட்டுரை)

Thursday, November 29, 2012

முட்டாள் Muttaal

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? 

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல். 

சரி முட்டாள் என
்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.

நன்றி: தமிழறிவோம்

Wednesday, November 28, 2012

(Planets) கிரகங்கள் மற்றும் வான் உடல்களின் ஒப்பீடு...

கிரகங்கள் மற்றும் வான் உடல்களின் ஒப்பீடு...


ஆத்திசூடி- English translation:-
அ     அறம் செய விரும்பு Desire doing righteous deeds
ஆ   ஆறுவது சினம் Calm your anger
இ    இயல்வது கரவேல் Help others in whatever ways you can
ஈ     ஈவது விலக்கேல் Never stop being charitable
உ    உடையது விளம்பேல் Never proclaim/boast about what you have
ஊ    ஊக்கமது கைவிடேல் Never give up hope
எ      எண் எழுத்து இகழேல் Don't despise learning
ஏ      ஏற்பது இகழ்ச்சி Accepting alms (begging) is despicable
ஐ     ஐயமிட்டு உண் Share food with others (to the needy)
ஒ     ஒப்புர வொழுகு Act virtuously
ஓ     ஓதுவது ஒழியேல் Never give up learning
ஒள  ஒளவியம் பேசேல் Never talk jealous words
ஃ       அஃகம் சுருக்கேல் Never cheat on grains (Food)

Hai!

Hai dear!!!!!!!!!

Always relax please.....

Because shaking cups filled-in with tea wont be longer.

While relaxing refresh and train your brain.

Here is my presentation which deals with addition problems only.

Click here to download my "FLASH CARD.EXE"

-SJ

பெயர் வைப்பவர்கள் கவனத்திற்கு...

இன்னாருடைய மகன்/மகள் என்பதைத் தாண்டி ஒருவரின் முதல் அடையாளம் அவருடைய பெயர்தான்.ஆனால் இப்போதைய பெற்றோர்கள் போல 20 வருடங்களுக்கு முந்தைய பெற்றோர்கள் பெயருக்கு அவ்
வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கூப்பிட ஒரு நல்ல பெயர் என்பதைத் தாண்டி அவர்கள் அதிகம் யோசிக்கவில்லை.

இப்போது பள்ளியின் வருகை பதிவை எடுத்துபார்த்தால் ஒரே பெயர் இருவருக்கு இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.அதாவது இப்போதைய பெற்றோர்கள்,தம் பிள்ளைகளுக்கு யாருக்கும் இல்லாத பெயர் இருக்க வேண்டும் என்று தேடித்தேடி வைக்கிறார்கள். அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வைக்கும் பெயர் நன்றாகத் தான் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

என் அண்ணன் மகளின் பெயர் 'ரிஸ்மிதா', என் தோழியின் குழந்தை பெயர் 'தனிஷ்தா'. நண்பனின் பையன் பெயர் 'மிதுல்’. அந்தப் பெயரை விட அதற்கு அவன் சொன்ன காரணம் தூக்கிவாரிப் போட்டது.

"மிதுல்-னா என்ன அர்த்தம்டா?" என்றேன்.

"'அதுல்' மாதிரி மிதுல் " என்றான்.

இன்னொரு நண்பன் நல்ல நல்ல தமிழ்ப் பெயர்களை பரிசீலனை செய்துவிட்டு கடைசியில் 'ஹர்ஷிதா’ என்று வைத்திருக்கிறான்.

அதாவது 'ஷா, ஸ், ஹா, ஜா’ இது போன்ற எழுத்துக்கள் இல்லாமல் பெயர் வைக்கக் கூடாது என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

அஜித்,விஜய்,விஷால்,தனுஷ்,த்ரிஷா,ஜெனிலியா,குஷ்பு,ஹன்சிகா என முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பெயர்களால் உந்தப்பட்டு,அதன் பாதிப்பு இந்த தலைமுறையினர் இப்படி பெயர் வைக்க காரணமாக இருக்கலாம்.

பெயரிலே தன் மகள்/மகன் தனியாக தெரிய வேண்டும் நினைப்பதெல்லாம் சரி தான். ஆனால் அத்தனை பேரும் தனித்தனியாக தெரிகிறார்களே, எப்படி கவனம் பெற முடியும்?

'பேண்டஸி' படங்களை பார்த்து விட்டு வரும் போது, திருப்தியை தாண்டி ஒருவித அயர்ச்சியாக இருக்கிறது. காரணம், அத்தனை சீன்களிலும் புதுமை, மெனக்கெடல், பார்வையாளர்களின் கவனத்தை தக்கவைக்க ஆசை. எதாவது ஒரு சீன் கொஞ்சம் சுமாராக இருந்தால் தான் அடுத்த சீன் பார்க்கிற மாதிரி இருக்கும். கொஞ்சம் கூட கவனத்தை திருப்ப முடியாததால் படம் முடிந்த பிறகு அயர்ச்சி தான் வருகிறது.

அதே போல கேட்கிற அத்தனை குழந்தைகளின் பெயரும் புதிய பெயர்களாக இருப்பதினால் எந்த பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை.

முன்னர் பள்ளிகளில் ஒரு வகுப்பில் நான்கு பேருக்கு ஒரே பெயர் இருந்திருக்கிறது. நான்கு 'கார்த்திகேயன்’கள், மூன்று 'செந்தில்குமார்’கள், மூன்று 'சரவணகுமார்’கள், இரண்டு 'சரண்யா’க்கள், மூன்று 'பிரியா'க்கள் என ஒரே பெயரில் எத்தனை பேர் இருந்தாலும் 'மொட்டை' கார்த்தி, குண்டு கார்த்தி, ஆர். பிரியா, வீ. பிரியா என ஒரே பெயரில் பலர் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருந்தது.

அந்த 'பேட்ச்’ இப்போது அப்படியே அலுவலகத்தில் இருக்கிறது. அலுவலகத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. ஆனால் அடுத்து 20 வருடங்களுக்கு பிறகு வருபவர்களுக்கு பு்துமையான பெயராக இருந்தாலும் அது ஒரு அடையாளத்தை பெற்றுத்தருமா என்பது கேள்விக்குறிதான். எப்போதுமே ஒருவரது திறமை தான் அடையாளத்தை கொடுக்கும்.

இதைத் தாண்டி உள்ளூர் மற்றும் சர்வதேச தலைவர்களின் பெயர்களை, கடவுளின் பெயர்களை, தாத்தா / பாட்டிகளின் பெயர்கள், ராகங்களின் பெயர்கள் போன்றவற்றை வைப்பார்க்ள் இப்போது அப்படி ஒரு பழக்கம் இருப்பது போல தெரியவில்லை. தியாகராஜன்(திருவாரூர்), பாண்டியன்(மதுரை), ரங்கநாதன், ரங்கராஜன் (ஸ்ரீரங்கம்), காந்திமதி, இசக்கிமுத்து (திருநெல்வேலி),சப்தரிஷி, ஸ்ரீமதி (லால்குடி),மீனாட்சி (மதுரை), காமாட்சி (காஞ்சிபுரம்) என்று பேரை வைத்தே அவர் எந்த ஊர் என்பதையும் ஓரளவுக்கு கண்டுபி்டிக்க முடியும். இப்போது இது போன்ற பெயர்களையே பார்க்க முடியவில்லை.

தனது ஆசிரியரின் பெயரையே தங்களது குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கமும் இருந்தது. தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைப்பார்கள். பாட்டியின் பெயரை பேத்திக்கு வைப்பார்கள். ஆனால் இப்போது அர்த்தமற்ற பெயர்களையே வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த தலைமுறை குழந்தைகளில் யாருக்காவது தாத்தா / பாட்டியின் பெயர் வைத்திருக்கிறார்களா என்று யோசித்து பாருங்கள்.

நமது வாழ்வியலை,கலாசாரத்தை பிரதிபலிப்பதில் பெயர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இனியாவது பிறமொழி கலக்காமல், அர்த்தமுள்ள,நல்ல தமிழ்பெயர்களையும் பரிசீலிக்கலாமே!



நன்றி : விகடன்

Monday, September 24, 2012

பழமொழிகள்...



* அகத்தினழகு முகத்தில் தெரியும்

* அம்மாவைக் குளிக்குமிடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கவேண்டியதில்லை
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
* அடியாத மாடு படியாது.

* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்
* அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
* அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
* அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
* அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
* அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
* ஆழம் தெரியாமல் காலை விடாதே.
* ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
* ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
* இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
* எறும்பூரக் கல்லும் தேயும்.
* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
* கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
* கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
* கழுதை அறியுமா கற்பூர வாசனை?
* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
* காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்
* காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
* காகம் திட்டி மாடு சாகாது.
* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
* குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
* குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
* குரைக்கிற நாய் கடிக்காது.
* கூட்டுற வெலக்குமாத்துக்குக் குஞ்சரம்னு பேராம்
* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
* கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப் பிடிப்பதுபோல
* கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
* சாமியே சைக்கிள்ல போகும்போது பூசாரி கேட்டானாம் புல்லட்
* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
* சோளியன் குடுமி சும்மா ஆடுமா?
* தடியெடுத்தவன் தண்டக்காரன்.
* தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
* தன் வினை தன்னைச் சுடும்.
* தனிமரம் தோப்பாகாது.
* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
* தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
* தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
* நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
* நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
* நிறைகுடம் தளம்பாது.
* தாட்சண்யவான் தரித்திரவான்
* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
* படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
* பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
* பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
* பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* மக வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் பத்துக்கட்டு விலக்குமாரு
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
* முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
* மைத்துணன் உதவி மலைபோல
* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
* யானை படுத்தாலும் குதிரை மட்டம்
* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
* வழியோடு போய் வழியோடு வந்தால் அதிகாரி சுண்டைக்காய்க்குச் சமம்
* விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
* விரலுக்குத் தக்கதே வீக்கம்.
* விளையும் பயிரை முளையிலே தெரியும்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வைக்கோற் போர் நாய் போல.